மலேசியாவில் நடுவானில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளனாதில் 10 பேர் உயிரிழந்தனர். தலைநகர் கோலாலம்பூரில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






கோலாலம்பூரில் உள்ள பேராக்கின் லுமுட் என்ற இடத்தில் ராயல் மலேசியன் கடற்படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த சம்பவ இடத்திலேயே அனைவரும் உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். 


இதையடுத்து, இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்கவில்லை என்று தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இரண்டு ஹெலிகாப்டர்களிலும் தலா 5 பேர் என மொத்தம் 10 கடற்படை வீரர்கள் இருந்த நிலையில், இந்த விபத்தில் அனைவரும் உயிரிழந்தனர். 


பயிற்சியின்போது விபத்து: 


ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கைகளின்படி, மலேசிய கடற்படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் பேராக்கின் லுமுட்டில் உள்ள ராயல் மலேசியன் கடற்படை தளத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி கொண்டது.






விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்கள் AgustaWestland AW139 மற்றும் Eurocopter Fennec ஆகும். இரண்டு ஹெலிகாப்டர்களும் 3-5 மே 2024 அன்று நடைபெறவிருக்கும் கடற்படை பிறந்தநாள் நிகழ்ச்சியில் சாகசம் செய்ய பயிற்சி செய்து கொண்டிருந்தன. விபத்து தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது. இதில் இரண்டு ஹெலிகாப்டர்களும் மோதியவுடன் சீட்டுக்கட்டு போல தரையில் விழுந்ததை அந்த வீடியோவில் தெளிவாக காணலாம். 


விசாரிக்கக் குழு அமைப்பு: 


மலேசியக் கடற்படையின் 90வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் ராயல் கொண்டாட்ட அணிவகுப்பு ஒத்திகை நடந்து கொண்டிருந்ததாக மலேசியன் ஃப்ரீ பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது . இதற்கிடையில், HOM (M503-3) ஹெலிகாப்டர் Fenech ஹெலிகாப்டரின் ரோட்டருடன் மோதியது. விபத்திற்குப் பிறகு, ஃபெனெக் ஹெலிகாப்டர் அருகிலுள்ள நீச்சல் குளத்திலும், மற்றொரு ஹோம் ஹெலிகாப்டர் லுமுட் கடற்படைத் தளத்தின் மைதானத்திற்கு அருகில் விழுந்து நொறுங்கியது. இந்த மோதல் எதனால், எப்படி ஏற்பட்டது என்பது பற்றிய தகவல்கள் தெளிவாக வெளியாகவில்லை. முழு விபத்து குறித்து விசாரிக்க குழுவொன்று செயல்பட்டு வருவதாக மலேசிய கடற்படை தெரிவித்துள்ளது.


முன்னதாக மார்ச் மாதத்திலும், மலேசியாவின் கடல்சார் அமலாக்க ஏஜென்சியின் ஹெலிகாப்டர் மீட்புப் பணியின் போது விபத்துக்குள்ளானது. இது தவிர, பிப்ரவரி மாதத்திலும் சிலாங்கூர் நகரில் மலேசிய விமானம் விபத்துக்குள்ளானது. இதில், விமானி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.