தைவானில் 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும், நேற்று இரவு முதல் 80க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 


தைவானில் நேற்றிரவு 11.56 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானது. அதேபோல், அதிகாலை 2.55 மணிக்கு மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. 


ஒரே இரவில் 80 முறைக்கு மேல் நிலநடுக்கம்: 


கடந்த ஏப்ரல் 3ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பின்னர், தைவானில் மீண்டும் நேற்றிரவு முதல் அதிகாலை வரை ஒரே இரவில் 80 முறைக்கு மேல் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இவற்றில் மிகவும் சக்திவாந்த நிலநடுக்கமாக 6.3 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.  இன்று அதிகாலை உணரப்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அதன் மையப்பகுதி ஹுவாலியன் நகருக்கு தெற்கே 28 கிலோமீட்டர் (17.5 மைல்) தொலைவில் 10.7 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.  மற்ற நிலநடுக்கங்கள் 4.5 முதல் 6 ரிக்டர் வரை பதிவானதாக தெரிகிறது. இதன் காரணமாக, கட்டிடங்கள் ஆங்காங்கே குலுங்கிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 






இந்த நிலநடுக்கத்தின் மையம் ஹூவாலியன் கிராமப்புற கிழக்கு மாகாணத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.  இங்குதான் கடந்த ஏப்ரல் 3ம் தேதி அதாவது  இரண்டு வாரங்களுக்கு முன்பு தைவானின் கிழக்குக் கரையில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், சுமார் 14 பேர் உயிரிழந்த நிலையில்,  700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பிறகு, தைவானில் நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கின்றன. இதையடுத்து, தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கம் இதுவாகும். கடந்த 1999ம் ஆண்டு தைவானில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,400 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 






கடந்த ஏப்ரல் 3ம் தேதி நிலநடுக்கத்திற்குப் பிறகு ஒரு ஹோட்டல் மோசமாக சேதமடைந்ததாகவும், நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, அந்த ஹோட்டல் மேலும் சாய்ந்ததாகவும் தீயணைப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது அந்த கட்டிடத்தில் ஹோட்டல் இயங்கவில்லை. எனவே, உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. 


நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது..?


இதை அறிவியல் ரீதியாகப் புரிந்து கொள்ள, பூமியின் கட்டமைப்பை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நாம் வாழும் பூமியானது டெக்டோனிக் தட்டுகளில் அமைந்துள்ளது. அதன் கீழே திரவ எரிமலை மற்றும் டெக்டோனிக் தட்டுகள் மிதக்கின்றன. பல சமயங்களில் இந்த தட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதுகின்றன. மீண்டும் மீண்டும் மோதுவதால், சில சமயங்களில் தட்டுகளின் மூலைகள் வளைந்து அதிக அழுத்தம் ஏற்படும் போது, ​​இந்த தட்டுகள் உடையும். அத்தகைய சூழ்நிலையில், கீழே இருந்து வெளிப்படும் ஆற்றலே நிலநடுக்கமாக உருவெடுக்கிறது.