Neem benefits on daily routine: டெய்லி வேப்பம்பூவை எப்படி சாப்பிடவேண்டும்... சொல்கிறார் ஆயுர்வேத நிபுணர்
வேப்ப மரத்தின் நன்மைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. வேப்ப மரத்தின் இலைகள், பூக்கள், விதைகள், குச்சிகள் என அனைத்துமே பழங்காலத்தில் இருந்து மருத்துவ பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதை எப்படி நீங்கள் உங்களின் அன்றாட வாழ்வில் சேர்த்து கொள்ளலாம் என்று சில வழிமுறைகளை நமக்காக பரிந்துரைத்துள்ளார் ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிக்ஸா பவ்சர். காயங்கள், செரிமானம், வாய் சார்ந்த பிரச்சனை, தோல், இரத்த சர்க்கரையின் அளவு என வேம்பின் அதிசயத்தை அனைத்து வகையிலும் பார்க்க முடியும். வேம்பு செரிமான பாதையில் உள்ள அல்சரை சரி செய்ய உதவும்.
வாய் பாதுகாப்பு :
"ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி" எனும் பழமொழிக்கு இணங்க வாய் பகுதியில் உள்ள பல கோளாறுகளை சரி செய்யும். வேப்பங்குச்சியை வைத்து பல் துலக்குவதால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்று நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பழக்கத்தில் இருந்தது. வாயில் பிளேக் உருவாகுவதை தடுக்கும். வாய் புண், வாய் துர்நாற்றத்தை தடுக்கும், ஈறுகளை பலப்படுத்தும்.
வேம்பில் கசப்பும் துவர்ப்பும் சேர்ந்த சுவை இருந்தாலும் இயற்கையாகவே குளிர்ச்சியானது. நச்சுக்களை அழித்து, உடலில் வாதத்தை அதிகரிக்கிறது. சோர்வை நீக்கும், செரிமானத்தை மேம்படுத்தும், இருமலை போக்கும், காயங்களை சுத்தப்படுத்தி விரைவில் குணப்படுத்தும், வீக்கத்தை குறைக்கும், குமட்டல் மற்றும் வாந்தியை போக்கும்.
வெளிப்புறமாக எப்படி பயன்படுத்துவது?
வேப்பம்பூ பொடியை தண்ணீர் அல்லது தேன் சேர்த்து கலக்கி அந்த கலவை காயத்தின் மீது தடவலாம்.
வெந்நீரில் வேப்பம்பூ போடி அல்லது வேப்பிலையை போட்டு குளிக்கலாம். பொடுகுக்காக பயன்படுத்த இந்த வெந்நீர் ஆறியதும் தலையை அலசலாம்.
நோய்த்தொற்றில் இருந்து விடுபட வேப்பம்பூ தேநீர் பருகலாம்.
வேப்பம்பூ பொடியுடன் சந்தனம், மஞ்சள், ரோஜா மற்றும் அதிமதுரம் சேர்த்து இந்த கலவையை முகத்தில் ஃபேஸ் பேக்காக போடும் போது முகப்பருக்கள் சில நாட்களில் காணாமல் போய்விடும்.
உட்புறமாக எப்படி பயன்படுத்துவது?
2 வாரங்களுக்கு 7 - 8 வேப்பிலைகளை மென்று தின்ன வேண்டும்.
ஒரு மாத காலத்திற்கு வேப்பம்பூ மாத்திரைகளை சாப்பிடலாம்.
10-15 மில்லி அளவு வேப்பம்பூ சாறு 2 வாரங்களுக்கு குடிக்கலாம்
ஆனால் கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தைகள் மற்றும் கருத்தரிக்க முயற்சிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் வேப்பம்பூவை தவிர்க்க வேண்டும்.