இன்று முதல் நவராத்திரி விழா தொடங்குகிறது. கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அலங்காரம் என அடுத்த ஒன்பது நாள்களும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். 


நவராத்திரி:


அம்மன் இவ்வுலகில் எல்லாமுமாக விளங்குவதாக நம்பபடுவதால் அதை உணர்த்தும்விதமாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் தொடங்கு ஒன்பது நாட்கள் வரையில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. விஜயதசமியையும் சேர்த்து மொத்தம் 11 நாட்கள் நவராத்திரி விழாவாக கொண்டாடப்படும். 


நவராத்திரி விழா நாள்களில் ஒவ்வொரு நாள்களும் கோலங்கள், தானியங்கள் என ஒன்பது விதமாக சிறப்பு பூஜைகள் எல்லாம் நடத்தப்படும். வீடுகளில் கொலு வைத்து விதவிதமான பொம்மைகளால் அலங்கரித்து, வீட்டிற்கு வருபவர்களை நன்றாக உபசரித்து அனுப்புவர்.


கொலு வழிபாடு:


நவராத்திரி முதல் மூன்று நாள்கள் லட்சுமிக்கும் அடுத்த மூன்று நாள்கள் சக்திக்கும் கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. இந்த விழா காலத்தில் கோயில்களில் கொலு வைத்து சிறப்பு வழிபாடு இருக்கும். ஒன்பது மலர்கள், பழங்கள், ஒன்பது தானியங்கள், ஒன்பது பிரசாதங்கள் என ஒன்பது விதமான அலங்காரங்கள் என அம்மனை வழிபடுவர். நவராத்திரி விழாவின்போது விரத நாட்களில் வீட்டில் செய்ய இனிப்பு வகைகள் சிலவற்றை காணலாம். 


நவராத்திரி விரதம் 


நவரத்திரி நாட்களில் விரதம் இருப்பது அம்மனை வழிப்பட்டால் வளமான வாழ்க்கை கிடைக்கும் என நம்பப்படுகிறது. நினைத்த காரியங்கள் நடக்கும் என்று நம்பப்படுகிறது.  ஒரு வேளை மட்டும் சாப்பிடும் விரத முறையும் உண்டு.  வீட்டில் கொலு வைத்திருப்பதால் மூன்று வேளை சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை வழிபட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு பூஜை செய்ததும் பழங்கள் போன்ற உணவுகளை சாப்பிடலாம். மாலையில் அம்மனுக்கு படைக்க செய்யப்படும் உணவையே இரவு சாப்பிட்டுவிட்டு விரதத்தை முடிக்கலாம். விரதம் இருப்பவர்கள் பால், மோர், பழங்கள் போன்றவற்றை உணவாக சாப்பிடலாம். திட உணவு வேண்டுமென்றால் சத்துமாவு கஞ்சி சாப்பிடலாம்.


பாசிப்பயறு சுண்டல், இனிப்பு போலி, கொண்டக்கடலை சுண்டல் மற்றும் இனிப்பு வகைகள் என்று தினம் செய்வது வழக்கம். பண்டிகை என்றாலே உணவும் அதை பகிர்ந்து உண்ணுவதுதானே. அப்படி, நவராத்தி விழா நாட்களில் செய்ய சபுதானா கிச்சடி என்றழைக்கப்படும் ஜவ்வரிசி உப்புமா எப்படி செய்வதற்கான ரெசிபி இதோ உங்களுக்காக..இதை விரத நாள்களும் சாப்பிடலாம்.


ஜவ்வரிசி உப்புமா
 
தேவையான பொருட்கள்:


ஊறவைக்க:


ஜவ்வரிசி - ஒரு கப்


தண்ணீர் - ஒரு கப்


உப்பு - தேவையான அளவு


கிச்சடி செய்ய:


வறுத்த நிலக்கடலை - 1/2 கப்


நெய்- 2 டேபிள் ஸ்பூம்


சீரகம்- ஒரு டீஸ்பூன்


பச்சை மிளகாய்- 3 அல்லது 4 (காரத்திற்கேற்ப பயன்படுத்தவும்)


இஞ்சி- ஒரு சிறிய துண்டு


தக்காளி- 1/2 கப்


வேகவைத்த உருளைக்கிழங்கு- ஒரு கப்


கருவேப்பிலை- சிறிதளவு


உப்பு- தேவையா அளவு


மிளகுதூள்- தேவையான அளவு


எலுமிச்சை பழச் சாறு- சிறதளவு


கொத்தமல்லி- ஒரு கைப்பிடி அளவு


செய்முறை:


பாத்திரத்தில் உப்பு சேர்த்து தண்ணீரில் ஜவ்வரிசியை 5 மணி நேரம் வரை ஊற வைக்கவும். வறுத்த நிலக்கடலையை தோல் நீக்கிவும். உருளைக் கிழங்கை நன்கு வேக வைத்து சிறதாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.


அடுப்பில் மிதமான தீயில் வானலி நன்கு சூடானதும், இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து இளஞ்சூட்டில் சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். இதோடு கருவேப்பிலை, உருளைக்கிழங்கு மற்றும் ஜவ்வரிசி சேர்த்து வேகவிடவும்.  அடுப்பை மீடியம் ஃபிளேமில் வைத்து வானலியை மூடி வைக்கவும்.


சிறது நேரத்தில் ஜவ்வரிசியின் நிறம் மாறும். ஜவ்வரிசி வெந்துவிட்டது. வெளிர் வெள்ளை நிறமாக மாறிய ஜவ்வரிசியுடன், வறுத்த நிலக்கடலையை சேர்த்து கிளறவும். இதோடு கைப்பிடியளவு கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும். இதோடு எலுமிச்சை பழச்சாறு சேர்த்து சூடாக பரிமாறவும். சுவையான ஜவ்வரிசி உப்புமா ரெடி!


இதோடு பழங்களை கொண்டு தயாரிக்கும் சாலட், காய்கறி சாலட், ஜூஸ் போன்றவற்றையும் அருந்தலாம். ஆப்பிள், மாதுளை, வாழைப்பழம், கொய்யா, இதோடு பேரிட்ச்சையும் சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம். ஓட்ஸ், கம்பு களி, பயிறு வகைகள் உள்ளிட்டவையும் விரத நாள்களில் ஏற்றது.


தவிர்க்க வேண்டிய உணவுகள்


பொதுவாக விரதம் நாட்களில் அதிக மசாலா, பூண்டு, வெங்காயம், சேர்த்த உணவுகளை தவிர்க்கலாம். நவராத்திரி பூஜை செய்பவர்கள்  அரிசி, கோதுமை, ஆகியவற்றை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.  வீட்டில் சமைத்த உணவுகள், பழங்கள் தவிர்த்து, ரெடிமேடாக பாக்கெட்டில் கிடைக்கும் எல்லா உணவுகளையும் தவிர்க்க வேண்டும். எண்ணையில் பொறித்த உணவுகள், மைதா மாவில் செய்த உணவுகளை தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்து, பொரித்த உணவுகள், துரித உணவுகளை சாப்பிட்டால் செரிமான கோளாறு ஏற்படும்.