முக்கனிகளில் தித்திக்கும் கனி மாங்கனி. மாம்பழம் சீசன் வந்தாலே, மனம் பறபறக்கும்! காரணம், அதன் நிறமும், சுவையும், அப்படி ஈர்க்கும். ஆனால், சுவையோடு பிரச்சனைகளையும் அழைத்து வருவதில் மாம்பழங்கள் நிகர் மாம்பழங்களே. இது ஏதோ... மாம்பழங்கம் செய்யும் சதியல்ல. மாம்பழத்தை வைத்து மனிதர்கள் செய்யும் சதி. பூக்க, காய்க்க, பழுக்க என அனைத்திற்கும் பருவம் இருக்கிறது. 




அருகில் அழைக்கும் மாம்பழங்கள்!


ஆனால், இங்கு காய்க்கும் போதே பழுக்க வைக்கும் தந்திரத்தை பலர் கையில் எடுப்பதால், மாம்பழங்கள் பல நேரம் மருத்துவத்தை தேடும் நிலைக்கு இழுத்துச் செல்கிறது. இப்போது மாம்பழம் சீசன். எங்கு பார்த்தாலும் மஞ்சள் மயம். வகை வகையான மாம்பழங்கள், கூடை கூடைகளாக சாலையில் அடுக்கி வைத்திருக்கும் போது, அதை கடந்து செல்பவர்கள், எங்கேயாவது ஒரு இடத்தில் ப்ரேக் போட்டு கிலோக்கணக்கில் வாங்கிச் செல்வதை தவிர்க்க முடியாது. 


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பு உண்ணும் மாம்பழங்களின் தரத்தை எவ்வாறு அறிவது? ஒரு புறம் கூடை கூடையாய் விற்கப்படும் மாம்பழங்கள், மற்றொரு புறம் டன் கணக்கில் பறிமுதல் செய்யப்படும் மாம்பழங்கள். செயற்கை முறையில் பழுக்க வைப்பதால் அதை உண்போருக்கு ஏற்படும் பாதிப்புகளை அறிந்தும், பணம் ஈட்டுவதற்காக செயற்கை முறை பழுக்க வைக்கும் முறையை பல வியாபாரிகள் கையாள்கின்றனர். இயற்கையான மாம்பழங்களை கண்டுபிடிக்க நீங்க லேப்பிற்கு செல்ல வேண்டும் என்றில்லை. அடிப்படையான சில விசயங்கள் மூலம், மாம்பழங்களை அடையாளம் காண முடியும். இதோ அந்த வழிமுறை...


எப்படி கண்டுபிடிக்கலாம்?


பொதுவாக மரத்திலிருந்து பழுக்க வைக்கப்படும் காய்கள், ஓரிடத்தில் குவிக்கப்பட்டு, அதன் மீது எத்தலின் மற்றும் கார்பைடு கற்களை மூடி செயற்கையாக பழுக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு செய்யும் போது, மாம்பழத்தின் நிறம் ஒரே மாதிரியாக இருக்கும். அதுவே இயற்கையாக பழுக்கும் மாம்பழங்கள், ஒரே நிறத்தில் இருப்பதில்லை. ஒவ்வொரு இடத்திலும் ஒரு நிறம் இருக்கும். அதிலும் குறிப்பாக, மாம்பழங்களின் காப்பு பகுதி, கட்டாயம் வேறு இடத்தில் இருக்கும். காம்புப் பகுதியும், மாம்பழமும் ஒரே மாதிரி நிறத்தில் இருந்தால், அது கட்டாயம் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழமாகவே இருக்க வாய்ப்பு.




பளிச்சென, எந்த கறையும் இல்லாமல் தகதகவென இருந்தால், அது சந்தேகத்திற்குரிய மாம்பழம். அதுவே, அழுக்குகள், தூசுகள், புள்ளிகள் என செயற்க்கைக்கு அப்பாற்பட்டு இருந்தால், அது கட்டாயம் இயற்கையில் பழுத்த மாம்பழங்கள். செயற்கையா, இயற்கையா என்கிற சந்தேகம் இருந்தால், யோசிக்காமல் தோலை சீவி எறிந்துவிடுங்கள். செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழத்தை தோலோடு சாப்பிட்டால், அது புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களை தரும் அளவிற்கு ஆபத்தானது என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். 


இயற்கையாக பழுக்க வைக்க பெரிய செலவு ஆகுவதில்லை. வைக்கோல் அல்லது வேம்பு இலைகளை மூடி வைத்தாலே ஓரிரு நாளில் மாம்பழங்கள் பழுத்துவிடும். ருசியும் நன்றாக இருக்கும். என்ன தான் சீக்கிரம் பழுத்தாலும், செயற்கை மாம்பழங்களில் ருசி இருக்காது. ருசியை வைத்து கூட செயற்கை மாம்பழத்தை கண்டுபிடிக்க முடியும். இது மாம்பழ சீசன், கொஞ்சம் எச்சரிக்கையா மாம்பழங்களை தேர்வு செய்யுங்கள். அது உங்கள் ஆரோக்கியம் சார்ந்த விசயம்!