வாசிப்பையே தங்கள் சுவாசமாக கருதி புத்தகங்களை நேசிக்கும் புத்தக பிரியர்களை கொண்டாடும் தேசிய புத்தக காதலர்கள் தினம் இன்று..!


புத்தகம் என்பது கடந்த கால விழுமியங்களையும் வரலாற்றையும் மட்டுமல்லாது கலை, இலக்கியம் என ஒரு மனிதனின் மூளைக்கு தீனிப்போட கூடிய அனைத்தையும் எழுத்துருவாய் தாங்கி நிற்கும் ஓர் அற்புத படைப்பாகும். அந்த புத்தகங்களையே சிறந்த துணையாக கருதி வாழும் புத்தக பிரியர்களை கொண்டாடும் புத்தக காதலர்கள் தினம் இன்று. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9ஆம் நாள் புத்தக காதலர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தவும் புத்தகங்களின் தேவையை எடுத்துரைக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுவது வழக்கம் .


புத்தகங்களின் பரிணாம வளர்ச்சி:


“மனிதனுடைய ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகங்கள் தான்ˮ என்கின்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அவ்வாறு புத்தகத்தின் தேவையையும் மகத்துவத்தையும் அறிந்த நம் முன்னோர்கள் பனையோலைகளில் தங்கள் எழுத்துகளை பதித்து துளையிட்டு கோர்த்து அதை காத்து வைத்தனர். அதன் பிறகு கல்வெட்டுகள், காகிதம் என வளர்ச்சி அடைந்து நம் கையில் அடங்கும் சிறு திரையினுலும் வந்து விட்டது புத்தகம்.


புத்தகங்களின் தேவை:


 






கடந்த கால நிகழ்வுகளை அறிந்து கொள்ளவும் அறிந்த விடயங்களை தெளிவுப்படுத்தி கொள்ளவும் புத்தகங்கள் உதவுகின்றன. ஒரு மனிதனின் அறிவை பெருக்குவதற்கும் அவனை நல்வழிப்படுத்தி வாழ்வில் வளம் பெற செய்வதிலும் புத்தகங்கள் முக்கிய பங்காற்ற தவறவில்லை. அதோடு நின்று விடாமல் வாசிக்க வாசிக்க புத்தகங்கள் ஒருவனின் உணர்ச்சியை தூண்டும் கருவியாகவும் அவனின் வலிகளை போக்கும் சிறந்த மருந்தாகவும் மாறிவிடுகிறது. “புத்தகங்களை நேசி ஒரு புத்தகத்தைத் தொடுகின்ற போது நீ ஒரு அனுபவத்தை பெறுவாய்ˮ என்று கூறுகிறார் நா.முத்துக்குமார். ஒரு மனிதன் புத்தகங்களை நேசிக்கும் போது அவன் உலகத்தை நேசிக்க தொடங்குவான், அதுவரை அவன் பெறாத ஒரு ஆகச்சிறந்த அனுபவத்தை பெற முடியும் என்பதே நிதர்சனம்.


மாமனிதர்களும் புத்தகங்களும்:


உலகில் சிறந்த மேதைகளாகவும் மாமனிதர்களாகவும் கருத்தப்படும் பெரும்பாலானோர் புத்தக பிரியர்களே. 
 
பேரறிஞர் அண்ணா அவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயம் அறுவைச் சிகிச்சை அன்று தான் படித்த புத்தகத்தின் சில பக்கங்கள் மீதம் இருப்பதால் அதை படித்து முடிக்கும் வரை உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சையைத் தள்ளி வைக்கச் சொன்னார்.


கிரேக்க சிந்தனையாளரான சாக்ரடீஸ் மரண தண்டனை விதிக்கப்பட்டு நஞ்சு கொடுக்கும் நொடி வரை தன் புத்தகத்தை கீழே வைக்கவில்லை.


இந்தியாவின் முதல் பிரதமரான நேரு அவர்கள் தன் சடலத்தின் மீது மலர்களுக்குப் பதிலாகப் புத்தகங்களை வைக்கச் சொன்னார். இது அவர் புத்தகங்கள் மீது கொண்டுள்ள தீராக்காதலை வெளிப்படுத்துகிறது. 


இவ்வாறு உலகின் தலைச்சிறந்த மனிதர்கள் புத்தகங்களின் மகிமையை உணர தவறவில்லை.


நல்ல நூலை தேர்ந்தெடுப்பது எப்படி..?


 






 ‘துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைவிட வீரியமான ஆயுதம் புத்தகம்’ என்பார் மார்ட்டின் லூதர்கிங். அத்தகைய புத்தகங்களை நாம் நன்றாக தேர்வு செய்து படிக்க வேண்டும். பள்ளிப்புத்தகங்கள் படிப்பது மதிப்பெண்களுக்காக. புத்தகங்களின் அதிசய உலகுக்குள் பயணிக்க விரும்பும் மனிதர்கள் தங்கள் அறிவுப்பசிக்கும் இலக்கியப்பசிக்கும் தீனிப்போடும் சரியான புத்தகத்தை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். 


“நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவுˮ என்கின்றார் ஔவையார். ஒரு மனிதன் தன் வாழ்வில் எத்தனை எத்தனை புத்தகங்கள் கற்கிறானோ அத்தனை ஆழமாக இருக்கும் அவனது நுண்ணறிவு. அத்தகைய புத்தகங்களை வாசித்து கலையிலும், அறிவிலும் வாழ்வியல் நெறிகளிலும் சிறந்து விளங்கிடுங்கள். என் சக புத்தக பிரியர்களுக்கு அகம் நிறைந்த என் புத்தக காதலர்கள் தின வாழ்த்துகள்!