10ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் 11ஆம் வகுப்பு சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதி தேர்வு தொடங்கி, ஜூலை 4ஆம் தேதி வரை துணைத் தேர்வுகள் நடைபெற்றன. குறிப்பாக ஜூன் 27ஆம் தேதி மொழித் தாளும் 28ஆம் தேதி ஆங்கிலப் பாடமும் நடைபெற்றது. ஜூன் 30ஆம் தேதி கணிதப் பாடமும் ஜூலை 1ஆம் தேதி விருப்ப மொழித் தாளுக்கும் ஜூலை 3ஆம் தேதி அறிவியல் பாடத்துக்கும் துணைத் தேர்வுகள் நடைபெற்றன. ஜூலை 4ஆம் தேதி சமூக அறிவியல் பாடத்துக்கும் தேர்வுகள் நடைபெற்றன.
இந்த நிலையில் தேர்வு முடிவுகள் ஜூலை 26ஆம் தேதி அன்று வெளியாகி உள்ளன. பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள் (தட்கல் தனித் தேர்வர்கள் உட்பட) தேர்வு முடிவினை, அன்று பிற்பகல் முதல் இணையதளத்தில் இருந்து தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே பதிவிறக்கம் செய்தனர்.
இதற்கிடையே 10ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் 11ஆம் வகுப்பு சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் தெரிவித்து உள்ளதாவது:
''அரசுப் பள்ளிகளில் பயின்று 10 ஆம் வருப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கடந்த ஜூன் - ஜூலை 2023-ல் துணைத் தேர்வு எழுதினர். தேர்வெழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் கடந்த 24.07.2023 அன்று வெளியாகின. இந்த நிலையில் துணைத் தேர்வு எழுதிய மாணவர்களில் 21,951 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களின் 11ஆம் வகுப்பு சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தலைமை ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்?
* துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தவறாமல் பள்ளிகளுக்கு வந்து மதிப்பெண் சான்றிதழ் பெற்றுச் செல்வதை, பள்ளித் தலைமையாசிரியர்கள் உறுதி செய்தல் வேண்டும்.
* தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும், அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் 11ஆம் வகுப்பு விருப்பப் பாட பிரிவு மற்றும் பள்ளிகளில் சேர்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருதல் வேண்டும்.
11 ஆம் வகுப்பு சேர்க்கை பெற்ற மாணவர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்''.
இவ்வாறு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் தெரிவித்து உள்ளார்.