கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு வேலை பார்ப்பவர்களிடையே விவாகரத்து அதிகமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


விவாகரத்துக்கு காரணமான கொரோனா:


கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியது முதல், பல்வேறு காலகட்டங்களில் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா நிலைமை சரியாகிக் கொண்டிருந்தாலும், வேலை பார்ப்பவர்களிடையே இந்த ஊரடங்கு விரிசலை ஏற்படுத்தியிருப்பதாக எக்கனாமிக் டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துவந்த 39 வயதான பெண்மணி ஒருவர் தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருடன் டெல்லிக்குச் சென்று தங்கியுள்ளார். இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அவரது தாயாரின் உடல்நிலை இன்னும் சரியாகாததால் அங்கேயே தங்கியுள்ள நிலமை ஏற்பட்டுள்ளது. ஆனால், அவரது கணவர் பெங்களூருவில் வேலை பார்த்து வரும் நிலையில் தொடர்ந்து இருவரும் பிரிந்தே இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்துள்ளது. அதிகமான வேலைப்பளு, வயதான பெற்றோர்களை பராமரிக்க வேண்டிய சூழ்நிலை, இருவரது தேவைகளும் பூர்த்தியடையாமல் இருந்தது, பொறுப்புகள் தட்டிக்கழிக்கப்பட்டது என்று பல்வேறு காரணங்கள் சேர இருவரும் விவாகரத்து செய்வது என்று முடிவெடுத்துவிட்டதாகவும், 15 ஆண்டுகால மணவாழ்க்கையை 2 ஆண்டுகால பிரிவு முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாகவும் கூறியுள்ளது.




விவாகரத்துக்குக் காரணங்கள்:


ப்ரொஃபஷனல் வேலையில் இருப்பவர்களுக்கு, கொரோனாவுக்குப் பிறகு மன அழுத்தம் அதிகமாகிவிட்டதாகவும், சகிப்புத் தன்மை குறைவு, வீட்டில் உள்ளவர்களிடம் எரிந்துவிழுவது ஆகியவை விவாகரத்து எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறது என்று வழக்கறிஞர்கள் மற்றும் மனநல மருத்துவர்கள் கூறியுள்ளனர். வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட ஆலோசனை மையங்களின் தகவலின் படி கடந்த ஓராண்டில் மட்டும் விவாகரத்து செய்வோரின் எண்ணிக்கை 50 முதல் 60 சதவீதம் உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.


கொரோனா காலத்திற்கு முன்பு பொதுமக்கள் தங்களது இயல்பான வாழ்க்கையை வாழ்ந்துவந்தனர். ஆனால், கொரோனாவானது பொதுமக்களின் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றிவிட்டது என்று மனநல ஆலோசகர் ஒருவர் கூறியுள்ளார். சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்த பலர் கொரோனாவிற்குப் பிறகு மனிதனுக்கு எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் எதுவும் நிச்சயமில்லை என்பதை உணர்ந்த பிறகு தங்கள் சொந்த பாதைகள் மற்றும் லட்சியங்களுக்காக ஓடத்தொடங்கிவிட்டனர். இதனால் முன்பிருந்த குடும்ப பிணைப்புகள் குறைந்துவிட்டது. இதன் காரணமாக கணவன் - மனைவி இருவரும் மனமுவந்து விவாகரத்து கேட்கும் போக்கு அதிகரித்திருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். குறிப்பாக இரண்டாவது அலைக்குப் பிறகு இந்த நிலை கணிசமாக உயர்ந்திருப்பதாகவும், இதற்கு மிகப்பெரிய காரணம் திருமண முரண்பாடுகள் தான் என்று அந்த மனநல ஆலோசகர் கூறியுள்ளார்.




50% அதிகரித்த விவாகரத்து:


கணவன் மனைவிக்கிடையே இணக்கமின்மை, இருவருக்குள்ளும் உருவான விருப்பமின்மை, தொடர்பு குறைபாடு, குறைந்துவிட்ட சகிப்புத் தன்மை ஆகியவற்றின் காரணமாகவே வேலையில் இருக்கும் பலர் விவாகரத்தைத் தேடி வருவதாக வழக்கறிஞர் இஷிகா கூறியுள்ளார். மேலும், அடிமைத்தனம், துரோகம், ஏமாற்றப்படுவது, உறவில் நாட்டமின்மை போன்ற முக்கிய காரணங்களால் 50 சதவீதத்திற்கும் மேல் விவாகரத்து கோரி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.


விவாகரத்து கோருபவர்களில் பெரும்பாலானோர் வீட்டிற்கே வராமல் அலுவலகத்திலேயே நீண்ட நேரத்தை செலவிடுபவர்கள், நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்கள், உடன் பணியாற்றுபவர்கள் மற்றும் க்ளையண்ட்டுகளுடன் அதிக நேரம் செலவிடுபவர்கள் குடும்பத்துடனான தொடர்பை இழந்துவிடுகிறார்கள். இதுவே, விவாகரத்துகளை அதிகப்படுத்தியிருக்கிறது என்று அந்த வழக்கறிஞர் கூறியுள்ளார்.




விவாகரத்து கேட்கும் ஆண்கள்:


கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு மனநலப் பிரச்சனைகளை சந்திப்போரின் எண்ணிக்கையும் 30 முதல் 40 சதவீதம் அதிகரித்திருப்பதாக மனநல ஆலோசனை மையம் நடத்திவரும் மாலிக் கூறியுள்ளார். இந்த பிரச்சனை திருமண உறவில் காம்ப்ரமைஸ் என்ற ஒன்று கடினமாகிவிட்டதாகவும், குறிப்பாக பொருளாதார சுதந்திரம் உள்ள பெண்கள் மகிழ்ச்சியற்ற மற்றும் தவறான திருமண பந்தத்தில் நீடிக்க விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார். 


இந்த ஆண்டின் ஜனவரி முதல் மே மாதம் வரை மட்டும்  விவாகரத்து தொடர்பாக சுமார் 17000 பேர் ஆலோசனைகள் கேட்டு தொடர்பு கொண்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 25 சதவீதம் அதிகம் என்றும் லீகல் கார்ட் நிறுவனம் கூறியுள்ளது. விவாகரத்து ஆலோசனை கோரியவர்களில் 38% பேர் பெண்கள் என்றும் 62 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.