இயற்கையான பொருட்களை அடிப்படையாகக் கொண்ட மேக்கப் சாதனங்களும் ஏராளமாக சந்தைக்கு வந்துவிட்டன. ஆனால் என்னதான் அளவாக மேக்கப் போட்டுக் கொண்டாலும் நம் சருமம் நீண்டகாலம் பொலிவுடன் இருக்க அதைச் சரியான முறையில் இரவில் கலைத்துவிடுவது நல்லது.
அதற்கான மூன்று டிப்ஸ் இதோ உங்களுக்காக..
முதல் ஸ்டெப்: டர்மரிக் பால்.. என்னங்கல் இருமல் வந்தா குடிக்கச் சொல்றதை முகத்துக்குச் சொல்கிறீர்கள் என்று கேட்க வேண்டாம். இதன் செய்முறையை கவனியுங்கள் புரியும். ஒரு ஈரம் இல்லாத கண்ணாடி பவுலில் அரை கப் பசும்பால் (காய்ச்சாதது) ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் அரை டீ ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள் தூள் அல்லது வெள்ளை மஞ்சள் பொடி. இதில் உங்களுக்கு சவுகரியப்பட்டதை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு டீஸ்பூன் பதப்படுத்தப்படாத தேன் சேர்த்துக் கொள்ளவும். இதில் மேலும் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். உங்கள் சருமம் எண்ணெய் பிசுபிசுப்பு நிறைந்தது என்றால் அதற்குப் பதிலாக வடிகஞ்சி ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் நன்றாக கலந்துவிட்டு அதில் ஒரு சிறிய காட்டன் துணியை முக்கி எடுங்கள்.
நன்றாகப் பிழிந்துவிட்டு அந்தத் துணியைக் கொண்டு முகம் முழுவதும் சுமார் 1 நிமிடம் துடைத்து எடுக்கவும். இதை மென்மையாகச் செய்யுங்கள். இப்படிச் செய்யும்போது முகத்தில் உள்ள மேக்கப், அழுக்கு எல்லாம் நீங்கிவிடும். மஞ்சளுக்கும், தேனுக்கும் பாக்டீரியா எதிர்ப்பு சக்தி உள்ளது. பால் இயற்கையான சுத்திகரிப்பு தன்மை கொண்ட பொருள். இவை அனைத்தும் சருமத்தை மென்மையானதாக்கும்.
இரண்டாவது ஸ்டெப் ஆயில் க்ளென்ஸர். ஆயில் க்ளென்ஸர் தயாரிக்க மரச்செக்கில் ஆட்டப்பட்ட நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் பாதாம் எண்ணெய் அல்லது எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முக்கால் டீஸ்பூன் வேப்பெண்ணை சேர்க்கவும். அதில் வைட்டமின் இ கேப்ஸ்யூலில் உள்ள மருந்தை சேர்க்கவும். நன்றாகக் கலக்கிக் கொள்ளவும். இந்த க்ளென்ஸர் வறண்ட சருமத்தினருக்கு ஏதுவானது. ஒருவேளை உங்களுக்கு எண்ணெய் சருமம் என்றால் நல்லெண்ணய்க்குப் பதிலாக ஜோஜோபா அல்லது கிரேப்சீட் எண்ணெய்யில் மேற்கூறிய பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் தேங்காய் எண்ணெய் மட்டும் பயன்படுத்த வேண்டாம். ஆயில் க்ள்ன்ஸிங் கான்செப்ட் ரொம்பவே சிம்பிள் தாங்க. எண்ணெய் எண்ணெய்யை உறிஞ்சு கொள்ளும். அதனால் சருமத்தில் அதிகமாக இருக்கும் சீபமும் (Sebum) அழுக்கும் இந்த மாதிரியான ஆயில் க்ளென்ஸிங் செய்யும்போது வெளியே வந்துவிடும்.
முதலில் டர்மரிக் மில்கால் முகத்தை செய்தோம் அல்லவா. இப்போது அதை முடித்தவுடன் ஈரத்தை நன்றாக உலர்த்திவிட்டு இந்த எண்ணெய்யை எடுத்து முகத்தில் பூசி இரண்டு நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யவும். வெவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவிவிடவும். இனி அடுத்த ஸ்டெப் என்னவென்பதைப் பார்ப்போம்.
மூன்றாவது ஸ்டெப் பூந்திக்கொட்டை க்ளென்ஸர். ஒரு பவுலில் 9 முதல் 10 அளவிலான பூந்திக் கொட்டையைப் போடவும். அதை முழுமையாக மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். அடுத்த நாள் காலையில் அதிலிருந்து விதைகளை மட்டும் நீக்கிவிட்டு கொட்டையை எடுத்துக் கொள்ளவும். உதிர்த்துவிட்ட பூந்திக் கொட்டைகள் மீது இரண்டு டீஸ்பூன் லிக்கரைஸ் பவுடரை சேர்க்கவும். பின்னர் அத்துடன் ஊற வைத்த தண்ணீரை சிறிதளவு சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதனை முகத்தில் ஒரு நிமிடம் மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் கழுவிவிடவும். இந்த மூன்று ஸ்டெப் க்ளென்ஸிங் உங்கள் முகப்பொலிவை கூட்டும். சருமம் ஈவன் டோனுடன் இருக்கும்.
இந்த மூன்றையும் அடுத்தடுத்த செய்ய வேண்டும் என்பதால் மூன்று க்ளென்ஸர்களுமே தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். பூந்திக்கொட்டை க்ளென்ஸரை மட்டுமே நீங்கள் சற்று அளவில் அதிகமாக செய்து 5 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற இரண்டு க்ளென்ஸரும் ஒருசில நிமிடங்களில் உடனே செய்யக்கூடியவையாகும்.