குடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை கண்டறிய உங்களது செரிமான மண்டலம் சீராக செயல்படுவதை வைத்து கண்டறியலாம். குடலில் நல்ல பாக்டீரியாக்கள் செழித்து வளர்ந்தால் ஊட்டச்சத்து உறிஞ்சப்படுவது துரிதமாகும். குடல் ஆரோக்கியத்திற்கும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி, மனநலம் ஆகியவற்றிற்கு நேரடி தொடர்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பருவகால மாற்றங்கள் உடலின் செயல்பாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றங்கள் குடலின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். இது செரிமான திறனை சீர்குலைக்கும். மலச்சிக்கல், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தலாம். குளிர்காலத்தில் வெப்பம் குறைவாக இருக்கும் என்பதால் உடலின் வெப்பநிலையும் அதிகமாக இருக்காது. செரிமான திறன் துரிதப்படுத்தும் உணவுகளை சாப்பிட வேண்டும். இந்த மாற்றங்களின் போது குடல் ஆரோக்கியத்தை நிர்வகிக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவை செரிமான அமைப்பை சீராக இயங்க உதவும்.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது முக்கியம்:
குளிர்காலத்தில் சிலருக்கு தாகம் எடுக்காது. இருந்தாலும், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வானிலை மாறும்போது, அதற்கேற்றவாறு நம் உடலின் நீர் தேவையும் மாறும். தினமும் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீரைக் குடிக்க வேண்டும். மூலிகை டீ,, சூப் வகைகள், இளநீர் ஆகியவற்றை சாப்பிடலாம். இவை குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
புரொபயாடிக் உணவுகள்:
புரோபயாடிக் உணவுகள் குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை அதிகரிக்கும். புரோபயாடிக் உணவுகள் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தயிர், பழை சோறு உள்ளிட்ட புரோபயாடிக் உணவுகளை சாப்பிடலாம்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்:
நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்திற்கு அவசியம், ஏனெனில் இது நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது செரிமான திறனை அதிகரிக்க உதவும்.
ப்ரீபயாடிக் உணவுகள்:
ப்ரீபயாடிக் உணவுகள் ’ non-digestible' நார்ச்சத்து நிறைந்தது. இது குடல் பாக்டீரியாக்களுக்கு நன்மை பயக்கும். வெங்காய், பூண்டு, வாழைப்பழம் ஆகியவை ப்ரீபயாடிக் உணவுகள். இது குடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்:
பதப்படுத்தப்பட்ட உணவுகள் குடல் பாக்டீரியாவின் சமநிலையை சீர்குலைத்து செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். குறிப்பாக பருவகால மாற்றங்களின் போது உடல் அதிக செக்சிடிவாக இருக்கும். அதிக சர்க்கரை, எண்ணெயில் பொரித்த உணவுகள், பாக்கெடுகளில் விற்பனை செய்யப்படும் உணவுகளை தவிர்க்கவும்.
தூக்கம்:
குடல் ஆரோக்கியத்தில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது, ஏனெனில் இது செரிமான அமைப்பை சரிசெய்து மீட்டமைக்க உதவும். குளிர்காலம் தூக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். இது குடல் செயல்பாட்டை பாதிக்கிறது. ஒட்டுமொத்த செரிமானத்தை ஆதரிக்கவும் ஆரோக்கியமான குடல் சூழலை பராமரிக்கவும் ஒவ்வொரு நாளும் இரவில் 7-9 மணிநேரம் தூங்க வேண்டும்.
மன அழுத்தம் நிர்வகிப்பு:
மனம் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மன அழுத்தம் நிர்வாகம் முக்கியம். ஏனெனில், இது குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். யோகா, தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சி போன்ற பயிற்சிகளை செய்வது மன அழுத்தத்தைக் குறைக்க உதவலாம்.
உடற்பயிற்சி செய்ய தவறாதீர்:
தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது. இது செரிமானத்தை ஆதரிக்கிறது. இருப்பினும், தீவிர உடற்பயிற்சி சில சமயங்களில் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். எனவே மிதமான உடற்பயிற்சிகளைத் தேர்ந்தெடுக்கவும்.
பொறுப்புத்துறப்பு: இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.