ஹாலிவுட்டில் நடிகர் டாம் ஹாங்ஸ் மற்றும் ராபர்ட் ஜெமிகிஸ் கூட்டணி  வெளியான படங்களுக்கு என ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இருவரது கூட்டணியில் வெளியான ஃபாரஸ்ட் கம்ப் மற்றும் காஸ்ட் அவே ஆகிய இரு படங்கள் உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களை கவர்ந்த படங்கள். தற்போது இவர்கள் கூட்டணியில் வெளியாகியுள்ள படம் ஹியர். ரிச்சர்ட் மெகையர் எழுதிய கிராஃபிக் நாவலைத் தழுவி இப்படத்தை இயக்கியுள்ளார் ராபர்ட் ஜெமிகிஸ். ஹியர் திரைப்படத்தின் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம்.


ஹியர் திரைப்பட விமர்சனம் (Here Movie Review)


ராபர் ஜெமிகிஸ் இயக்கிய முந்தைய படங்களில் பல்வேறு முன்னோடியான முயற்சிகளை எடுத்துள்ளார். இவர் இயக்கிய Bact to the Future Trilogy டைம் டிராவல் பற்றிய படங்களுக்கு எல்லாம் முதல் ரெஃபரன்ஸ் என்று சொல்லலாம். ஜேம்ஸ் கேமரூன் தனது படங்களில் மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு முன்பே இப்படத்தில் இந்த தொழில்நுட்பத்தை பயண்படுத்தியிருந்தார். அதே போல் ஃபாரஸ்ட் கம்ப் படத்தில் முக்கியமான வரலற்று தலைவர்களை வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் மூலம் உருவாக்கியிருந்தார். அதேபோல் ஹியர் திரைப்படத்தில் ஒரு தனித்துவமான கதை சொல்லல் முறையை கையாண்டிருக்கிறார். 


1 மணி நேரம் 45 நிமிடம் ஓடும் இந்த மொத்த படத்தின் கதையும் ஒரே சிங்கிள் ஃபிரேமில் இருந்து சொல்லப்பட்டிருக்கிறது. பூமியில் டைனோசர்கள் எல்லாம் வாழ்ந்து வின்வெளியில் இருந்து எரிகற்கள் விழுந்து அவை அழிந்ததில் இருந்து படம் தொடங்கிறது. இதே இடத்தில் அமெரிக்க பழங்குடியைச் சேர்ந்த இரு காதலர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள்.அவர்களுக்குப் பின் ஆங்கிலேயர்கள் அங்கு குடிபெயர்கிறார்கள். புதுப்புது கட்டுமானங்கள் உருவாகின்றன. பல தலைமுறையைச் சேர்ந்த குடும்பங்கள் வாழ்ந்து செல்கிறார்கள். இப்படி ஒரே இடத்தில் பொருத்தப்பட்ட கேமரா எண்ணற்ற மனிதர்களின் வாழ்க்கையை ஒரு ஃபோட்டோ அல்பம் போல சொல்லிச் செல்கிறது ஹியர் திரைப்படம். இந்த கதைகளில் ஒன்று தான் நாயகன் டாம் ஹாங்ஸின் கதை. ஓய்வுபெற்ற ராணுவ வீரனின் மகனாக பிறந்து ஓவியக்கலையின் மேல் தீவிர ஆர்வம் கொண்டவராக வளர்கிறார் நாயகன். தனது காதலியையை பெற்றோர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். எதிர்பாராத விதமாக காதலி கர்ப்பமாகிவிட ஓவியத்தை விட்டு ஒரு சாதாரண சேல்ஸ் மேன் வேலையை செய்கிறார். வருடங்கள் ஓடுகின்றன. கதை தொடர்கிறது. மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவரின் கதையாக தொடர்கிறது படம். ஒரு குறிப்பிட்ட இடம். அந்த இடத்தில் வாழ்ந்த மக்கள், அவர்களின் வாழ்க்கையின் முக்கியமான தருணங்கள் வழியாக அந்த இடத்துடன் நமக்கு ஒரு உணர்வு ரீதியான தொடர்பை ஏற்படுதத முயல்கிறது ஹியர் திரைப்படம்.


ஹியர் திரைப்பட விமர்சனம்


பார்க்க மிக எளிதாக உருவாக்கப்பட்ட படமாக தோன்றினாலும் மிக சவாலான ஒரு முயற்சி இப்படம். 70 வயதைக் கடந்திருக்கும் டாப் ஹாங்ஸை 17 வயது சிறுவனாக ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலமாக மிகசிறப்பாக காட்டியிருக்கிறார்கள். ஒரே இடத்தில் பொருத்தப்பட்ட கேமரா . அதில் வெவ்வேறு காலத்தில் வெவேறு நாகரிகத்தைச் சேர்ந்த மனிதர்களின் கதையை தொகுத்திருக்கும் விதமும் காட்சிகள் மாறும்போது அதற்கேற்றபடி காலநிலை மாறுவதும் ஒரு மாஸ்டர் டச். ஒரு காட்சியில் கற்கால மனிதர்களின் காட்சி வருகிறது. அடுத்த காட்சி கோவிட்டில் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் குடும்பத்தைப் பற்றியது. இரண்டுகாட்சிகளுக்கும் சீன் டூ சீன் மாறாமல் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் புதிய முயற்சியை மேற்கொண்டிருப்பது இயக்குநரின் மேதைமையே. ரசிகர்களை விறுவிறுப்பாக எங்கேஜ் செய்யும் கதையம்சம் இப்படத்தில் இல்லை. ஆனால் குடும்பம் , கரியர் என மிடில் கிளாஸ் ஆடியன்ஸ் இப்படத்தை மிக எளிதாக தொடர்புபடுத்திக் கொள்ளலாம். டாம் ஹாங்ஸ் தனது நடிப்பால் நம்மை படத்திற்கு இன்னும் நெருக்கமாக உணரவைக்கிறார்.