மதுரை மீனாட்சியம்மன் கோவில் தொடங்கி மல்லி, ஜிகர்தண்டா என பல பெருமைகளை மதுரை சுமந்து கொண்டிருந்தாலும், அதற்கு இணையாக இன்னொரு ஸ்பெஷல்தான் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய கறிதோசை.


மதுரைக்கு யார் சென்றாலும், எப்போது சென்றாலும் மன நிறைவாக மீனாட்சியம்மனைத் தரிசனம் செய்துவிட்டு, பின்னர் வயிற்றுக்கு நிறைவாக மதுரைக்கே உரித்தான கறி தோசையைத்தான்  தேடிச் செல்வார்கள். அந்தளவிற்கு மதுரை நகரின் அடையாளத்தோடு ஐக்கியமாகிப்போன ஒரு ருசியாக உணவுதான் நம்ம மதுரையோடு கறி தோசை. அதிலும் கோனார் கடை கறிதோசையை அடிச்சிக்க ஆளே இல்லையென்றுதான் சொல்லவேண்டும். இப்படி மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ள மதுரை ஸ்பெஷல் கறிதோசையை சாப்பிட ஹோட்டலுக்கு செல்ல நேரம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மிகவும் சுலபமாக வீட்டிலேயே எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்...



மதுரை ஸ்பெசல் கறிதோசை செய்ய தேவையான பொருட்கள்:



மட்டன் கொத்துக் கறி - 200 கிராம்

தோசை மாவு - ஒரு கப்

வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று

முட்டை - 3

இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

மல்லி தூள் - 3/4 தேக்கரண்டி

கரம் மசாலா - அரை தேக்கரண்டி


மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

சீரகத்தூள் - அரை தேக்கரண்டி

எண்ணெய் - 3 தேக்கரண்டி

கடுகு- அரை தேக்கரண்டி

சோம்பு - அரை தேக்கரண்டி

உப்பு- நம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ளலாம்.



கறி தோசை செய்யும் முறை:


முதலில் கறி தோசைக்கு தேவையான மட்டன் மசாலாவைத் தயார் செய்யவேண்டும்.


நாம் எடுத்து வைத்துள்ள 200 கிராம் மட்டன் கறியுடன், கால் தேக்கரண்டி மிளகாய் தூள், உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக கறி பஞ்சுபோல் இருக்கிறதா? என்பதைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் கறி தோசைக்கு ஏதுவாக இருக்கும்.


அதன் பின்னர் வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி, முட்டையை அடித்து வைத்திருக்க வேண்டும்.. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிவிட்டு  தக்காளியும்  சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இதனுடன் மிளகுத்தூள் தவிர நாம் எடுத்துத் தயாராக வைத்திருக்கும் மற்ற அனைத்து மசாலா தூள் வகைகளையும் சேர்த்துப் பிரட்டி விட வேண்டும்.  



இதனையடுத்து வேக வைத்த கறியை மசாலாவுடன் சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும். கிரேவி போன்று கட்டியாக வந்ததும் இறக்கி வைத்துவிடவேண்டும்.

பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து தோசைக்கல்லில் மாவை எடுத்து சிறிய ஊத்தப்பமாக ஊற்றவும். அது லேசாக வெந்ததும் ஒரு கரண்டி முட்டை ஊற்றவும். அதன் மேல்  நாம் செய்து வைத்திருக்கும் ஒரு கரண்டி கறியை வைத்து பரப்பி விடவும். பிறகு அதன் மேல் கால் தேக்கரண்டி மிளகு தூள் தூவிவிட்டு சுற்றி எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு தோசையை அழுத்தி விடவேண்டும். தோசைக்கல்லில் அப்படியே ஒரு நிமிடம் விட்டு பிறகு தோசையை எடுக்க வேண்டும். இப்போது மதுரை ஸ்பெஷல் சுவையான கறி தோசை வீட்டிலேயே தயாராகிவிடும்.


சாப்பாடுதான் எல்லாம்.. மதுரை கறி தோசையை ட்ரை பண்ணுங்க.. கலக்குங்க..