பக்தர்கள் கோயிலுக்கு சென்றுவிட்டு, விபூதி, குங்குமம் போன்ற பிரசாதங்களை எடுத்து வருவார்கள். இதே போல் திருப்பதி சென்றால் லட்டு, பழனி சென்றால் பஞ்சாமிர்தம் போன்று தஞ்சாவூர், புன்னைநல்லுார் மாரியம்மன் கோயிலுக்கு சென்றால் குச்சி முறுக்கு வாங்கி வருவதை காலம் காலமாக வழக்கமாகி கொண்டுள்ளார்கள். தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து பிற்காலச்சோழர்கள் கைப்பற்றியதும், தஞ்சாவூரை சுற்றிலும் நான்கு பக்கங்களிலும் காவல் தெய்வங்களை நிறுவினார்கள். சோழர் காலத்தில் மிகவும் உச்சத்தில் இருந்த பின், கடந்த 17-ஆம் நுாற்றாண்டில் மராட்டியர்கள் தஞ்சாவூர் பகுதியை ஆட்சி செய்ய தொடங்கினார்கள்.




மராட்டிய மன்னர்களின் ஒருவரான வெங்கோஜி மகாராஜா, திருச்சியை அடுத்த கண்ணபுரம் என்றழைக்கப்படும் சமயபுரத்திற்கு சென்று மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக சென்றார். அப்போது அவருடைய மாரியம்மன் கனவில் தோன்றி, என்னை அடிக்கடி தரிசிக்க வேண்டும் என்று நினைத்தால், தஞ்சாவூரின் கிழக்கு பகுதியில் இருக்கும் புன்னை காட்டிற்கு வா,என கூறிவிட்டு மறைந்தது. பின்னர் வெங்கோஜி மகாராஜா, புன்னைமரக்காட்டிற்கு வந்து, அங்கு பிரம்மாண்டமாய் வளர்ந்துள்ள புற்றை பார்த்தார். அந்த புற்றுதான் மாரியம்மன் என்று, அப்பகுதியை செப்பனிட்டு சீர்படுத்தி, ஊராக்கி, மாரியம்மனை தரிசனம் செய்து வந்தார்.இவருக்கு பின்னர் வந்த துவஜாராஜாவின் மகளுக்கு கண்ணில் பூ விழுந்தது.  தன் மகளுக்கு இப்படி நிலைமையால் வேதனைப்பட்ட ராஜா, மாரியம்மனை மனமுருக பிரார்த்தனை செய்தார்.  அதன் பலனாக, ராஜாவின் மகள் கண்ணில் விழுந்த பூ மறைந்தது. மகளுக்கு நல்வழிகாட்டிய மாரியம்மனுக்கு பிரம்மாண்டமாய் கோயிலை கட்ட முடிவு செய்தார்.




அதற்கான கட்டிட வேலைகளை மும்முரமாக தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அக்கோயிலின் அருகில் மூதாட்டி ஒருவர், மாரியம்மன் மேல் அளவுகடந்த பக்தியால், கட்டிடவேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு, சோர்வு இல்லாமல் உற்சாக வேலை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில், பச்சரிசி மாவில் புட்டு செய்து, வழங்கி வந்தார். தொழிலாளர்களும் மூதாட்டி கொடுக்கும் பச்சரிசி மாவு புட்டைவாங்கி சாப்பிட்டு விட்டு, சோர்வில்லாமல் கோயில் கட்டமான வேலைகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வந்தனர். ஒரு நாள் கட்டுமான வேலைகளை பார்க்க வந்த ராஜா, தொழிலாளர்கள் அனைவரும் சோர்வில்லாமல், களைப்பும் இல்லாமல் வேலை செய்கிறார்களே என்று திகைத்தார். பின்னர் தொழிலாளர்களின் நடவடிக்கைகளை மறைந்திருந்த படி கண்காணித்தார்.


அப்போது தொழிலாளர்கள், தங்களுக்கு சோர்வு ஏற்படும் போது, மூதாட்டியிடம் சென்று புட்டை வாங்கி சாப்பிட்டுவிட்டு, வேலைகளில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.  அந்த புட்டில் என்னதான் உள்ளது என்ற ஆர்வத்தில் மாறுவேடத்தில் ராஜா சென்று, புட்டை வாங்கி சாப்பிட்டார்.  அந்த புட்டை வாங்கி சாப்பிட்டவுடன், ராஜாவிற்கு இனம்புரியாத உற்சாகம் ஏற்பட்டது. அன்று முதல் ராஜா, மாறுவேடத்தில் வந்து புட்டு வாங்கி சாப்பிட்டு வந்தார். இந்த விஷயம் மூதாட்டிக்கு தெரிந்தவுடன், மாரியம்மன் கோயிலை கட்டும், நாட்டை ஆளும் ராஜாவிற்கு சாதாராணமான புட்டு வழங்குவதா என்று அவருக்கு சுவையாகவும், ருசியாகவும் வழங்க வேண்டும் என்று முடிவு எடுத்தார்.




பின்னர் மூதாட்டி, பச்சரிசி மாவுடன், கொஞ்சம் உப்பைகலந்து, மோதிர வடிவம் போன்று சிறு சிறு முறுக்குகளாக தயாரித்த ராஜா மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கினார். வித்தியாசமான, ருசியுடன், சோர்வை போக்கும் முறுக்கை தயாரித்த மூதாட்டியிடம், இனி நீ முறுக்குதான் சுடவேண்டும், அதனையும் புன்னை நல்லுாரி மாரியம்மன் கோயில் வாயிலில் மட்டும்தான் விற்பனை செய்ய வேண்டும், வேறு எங்கும் விற்பனை செய்யக்கூடாது என்று அன்புக்கட்டளை இட்டார். பின்னர் அந்த மூதாட்டியின் வழியில் வந்தவர்கள் மூலம், தற்போது சுமார் கோயிலை சுற்றியுள்ள வெள்ளாளர் தெரு, தேரடித்தெரு, பெருமாள் கோயில் தெரு உள்ளிட்ட தெருக்களில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் மோதிர வடிவத்தில் உள்ள குச்சி முறுக்கை சுட்டு கோயில் வாயிலில் விற்பனை செய்து வருகின்றனர்.


வாகனங்கள் இல்லாத காலத்தில், பெரும்பாளும் பக்தர்கள் நடந்துதான் வருவார்கள். அவர்கள் கோயிலுக்கு வந்துவிட்டு, முறுக்கை வாங்கி வைத்து கொள்ள வசதிகள் இல்லாததால், வாதாமடக்கி மரத்தின் கிளையில், கோர்த்துகொண்டு  எடுத்துச்செல்வார்கள். தற்போது பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி விற்பனை செய்து வருகின்றனர். பல நுாறு ஆண்டுகளாக மோதிர முறுக்கு எனும் குச்சி முறுக்கு, புன்னைநல்லுார் மாரியம்மன் கோயிலில் விற்பனை செய்துவரும் நிலையில், உலகத்திலேயே வேறு எந்த கோயிலிலும் இந்த முறுக்கு விற்பனை செய்யப்படுவது கிடையாது, ராஜாவின் கட்டளையை இன்று வரை அப்பகுதி மக்கள் காப்பாற்றி வருகிறார்கள் என்னும் நம்பிக்கை நிலவுகிறது