நாம் தினசரி உட்கொள்ளும் உணவில் உப்பு சத்து கூடினால் நமக்கு உடல் ரீதியாக நிறைய தொந்தரவுகள் வரும். இதிலும் குறிப்பாக பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் ஊறுகாய்கள் சீஸ் உப்பு சத்து உள்ளது.இதை போலவே அசைவ உணவில், கறி உப்பு கண்டம் மற்றும் கருவாடு போன்ற உணவுகளிலும்  உப்பின் அளவு அதிகமாக இருக்கிறது.


இப்படி அதிக அளவு உப்பானது, உணவுப் பொருட்களை வேண்டுமானாலும் பாதுகாக்கலாம். ஆனால் நம் உடலில் அதிகப்படியான ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி,இதய நோய்களுக்கு காரணமாக அமைந்து விடுகிறது,என்பதை மறுப்பதற்கு இல்லை.


ஐரோப்பிய ஹார்ட் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆராய்ச்சி கட்டுரையில் உணவுகளில் உப்பு சேர்ப்பது மற்றும் அகால மரணத்தின் ஆபத்து என்ற தலைப்பில் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது. அதிகப்படியான உப்பை உணவில் சேர்த்துக் கொள்வது,ஆயுட்காலம்  குறைவதற்கு  காரணமாவதோடு மட்டுமல்லாமல்,அகால மரணத்திற்கு வழி வகுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒருநாளைக்கு 2,300 மில்லி கிராமிற்கும்  குறைவான சோடியம்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என,நேஷனல் அகாடமி ஆஃப் மெடிசின் கூறுகிறது. சோடியத்தின் அளவு  இதற்கு கூடினாலும்  அல்லது  குறைந்தாலும் உடலுக்கு பல்வேறு பிரச்சினைகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது.


ஒரு நாளைக்கு ஆக குறைந்தது மூன்றில் இருந்து ஐந்து கிராம் அளவிற்கு உப்பை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது. ஆனால் அதற்கும் அதிகமான அளவிற்கு உப்பினை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கனடாவின் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஆய்வின்படி நாள் ஒன்றுக்கு 3 கிராம் சோடியம் உடலில் கலக்க வேண்டும். அதற்கு குறைவாக எடுத்துக்கொண்டால் மாரடைப்பு ஏற்படும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அப்படி என்றால் ஒரு நாளைக்கு 7.5 கிராம் முதல் 12.5 கிராம் வரை உப்பு சாப்பிட்டால் தான் 3 கிராம் முதல் 5 கிராம் வரை சோடியத்தை எடுத்துக்கொள்ள முடியும். அதே நேரத்தில் அளவுக்கு அதிகமான உப்பு சேர்த்துக்கொள்ள கூடாது என்பதிலும் கவனம் தேவை


அதிகப்படியான சோடியமானது உயர் ரத்த அழுத்தம்,டைப் இரண்டு நீரிழிவு நோய் என வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என்பது எப்படி உண்மையோ, அதை போன்று குறைவான சோடியம் ஆனது உடலில் நீரிழிப்பை ஏற்படுத்துகிறது.


ரத்தத்தில் குறைந்த சோடியம் ஆனது உடலில் நீர் உடனுக்குடன் குறைந்து மூளையை பாதிக்கும் தன்மையை உண்டு பண்ணுகிறது. அதாவது மூளை வீக்கமடைந்து தலைவலி, கோமா ஏன் இறப்பைக் கூட சந்திக்கலாம். இது வயது முதியவர்களையே கடுமையாக தாக்கும் என்கிறது ஆய்வு முடிவு. இதை ஈடுகட்ட என்னதான் அதிக அளவில் தண்ணீர் குடித்தாலும்,அதை சீரமைக்கும் சோடியம் இல்லையெனில் பலனில்லை என்கிறது ஆய்வு.


உப்பு குறைபாடினால் குறிப்பாக சோடியம் குறைபாடினால் ஏற்படும் தொல்லைகள் என்னென்ன என்று பார்ப்போம்


வாந்தி, குழப்பம், குறைந்த சக்தி, கோமா, ஓய்வின்மை, சோர்வு, எரிச்சல் கூட்டும் தன்மை, பலவீனம், தசை பிடிப்பு, தசையில் பிணைந்து இழுப்பது, குறைந்த ரத்த அழுத்தம், பாதம் மற்றும் முகத்தில் வீக்கம் இருப்பது என குறைந்த அளவு சோடியம் உட்கொள்வதினால் ஏற்படும் பிரச்சினைகள் ஆகும்.


ஆகவே சோடியம் கூடினாலும், குறைந்தாலும் நமது உடம்பில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். அனைத்தையும் அளவோடு உண்டு மகிழ்வோம்.தமிழனின் முதுமொழிக்கு ஏற்ப "அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு"என்பதை நினைவில் கொண்டு உணவு பழக்க வழக்கங்களை சீரமைப்போம்.