'கொரோனா' உலகத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது. புதிய வகையான தொற்றால்  அனைவரும் கலங்கிவிட்டனர். கொரோனா பாதிப்பால் பலரையும் இழந்துவிட்டோம். நோய் பாதிப்பை விட பல மடங்கு பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்திவிட்டது. இதனால் உலகம் முழுதும் உள்ள மக்கள் தற்போது வரை இயல்புநிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.




அதே போல் பள்ளி, கல்லூரி மாணவர்களின் படிப்பும் பாதிக்கப்பட்டுவிட்டது. ஆன்லைன் வகுப்பு மூலம் படிப்பது சவால் என்றால் அதற்கு பயன்படுத்த தேவையான சாதனங்கள் வாங்குவது கூடுதல் சவால் என்பதே நிதர்சனம். இந்நிலையில் தந்தையின்றி குடும்ப வறுமையால் பிளஸ்-2 மாணவி மொபைலில் ஆன்லைன் மூலம் படித்து கொண்டே நாவற்பழம் விற்பனை செய்து வருகிறார்.



சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த நைனாபட்டியைச் சேர்ந்தவர்  மாணவி அஞ்சுகா. காரைக்குடி கானாடுகாத்தானில் உள்ள  பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை மாணிக்கம் இறந்தநிலையில்,  தாயார்  படிக்க வைத்து வருகிறார். மாணவியின் சகோதரர் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். கடன் சுமை இருப்பதால் மாணவி அஞ்சுகா சிரமப்பட்டு வருகிறார். இதனால் தனது குடும்ப வறுமையை போக்க மாணவி அஞ்சுகா நாவற்பழம் விற்பனை செய்கிறார். தற்போது கொரோனா சூழலில் பள்ளி மூடியிருப்பதால் ஆன்லைனில் வகுப்புகள் நடக்கின்றன. இதனால் அஞ்சுகா மொபைலில் ஆன்லைனில் படித்து கொண்டே பழங்களை விற்பனை செய்து வருகிறார்.



இதுகுறித்து மாணவி அஞ்சுகா.....," எனக்கு மூன்று சகோதரிகளும் ஒரு அண்ணன், உள்ளனர்.  அக்கா இருவருக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. தற்போது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் அண்ணன் மட்டுமே வேலைக்கு செல்கிறார். ஆனாலும் வறுமானம் போதுமான அளவில் இல்லை. இதனால் கடந்த சில வருடங்களாக சீசனுக்கு ஏற்ற பழங்களை விற்பனை செய்கிறேன். அதில் கிடைக்கும் பணத்தில் எனது படிப்பு செலவுக்கு போக, மீதியை குடும்பத்திற்கு கொடுப்பேன். பள்ளி திறந்திருந்த காலத்தில் ஓய்வு நேரம், விடுமுறை நாட்களில் வியாபாரம் செய்வேன். தற்போது கொரோனா  பள்ளிக்கூடம் மூடியிருப்பதால் தினமும் பகலில் பழங்களை விற்பனை செய்கிறேன்.

இதற்காக அதிகாலை 5 மணிக்கே எழுந்து மானகிரி பகுதியில் உள்ள நாவல் மரங்களில் இருந்து பழங்களை பறித்து வந்து விற்பனை செய்கிறேன்' என்றார்.



மேலும் சிவகங்கை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’ நம்மாழ்வார் வழியில் சிவகங்கை விவசாயி !

 

இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள்....," அப்பா இல்லாத பொண்ணு நவ்வாப்பழம் வித்து பிழைக்குது. அவுக அண்ணன் தான் குடும்பத்துக்காக உழைக்கிறார். அஞ்சுகாவோட அம்மாவுக்கும் உடம்பு சரியில்லாம போச்சு. இந்த கஷ்டமான சூழல்ல தான் படிக்க வைக்கிறாங்க" என வேதனை தெரிவித்தார்.