ஒவ்வொரு ஆண்டு மே 21ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச தேநீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிய நாடுகளின் தேநீர் மீது கொண்ட காதல் காரணமாகவும், உலகில் தேயிலை தொழிலின் வளர்ச்சியை கண்டும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மே 21ம் தேதி சர்வதேச தேநீர் தினமாக அறிவித்தது. 


இந்தியர்களும் - தேநீரும்: 


இந்தியர்களாகிய நமக்கு தேநீர் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான தருணம். அதனால்தான், சோகமாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, முதலில் தேடுவது என்னமோ தேநீர் என்னும் டீயைதான்.


 தேநீர் இல்லாமல் இந்தியர்களுக்கு காலை பொழுது விடியாது. தேநீர் பிரியர்கள் காலையில் எழுந்தவுடன் டீ குடிப்பார்கள், மாலை அடைந்தவுடன் டீ குடிப்பார்கள், நண்பர்களை சந்தித்தால் டீ குடிப்பார்கள், இப்படியான ஒவ்வொரு தருணத்திலும் டீ என்பது இன்றியமையாது. 


இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் மட்டுமின்றி, பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் காலை, மாலை வேளைகளில் டீ குடித்து வருகின்றனர்.


டீயை பொறுத்தவரை க்ரீன் டீ, ப்ளாக் டீ, ஒயிட் டீ, ஹெர்பல் டீ, கெமோமில் டீ என பல வகைகள் இருந்தாலும், உங்களுக்கு எந்த டீ பிடிக்கும் என்பதை கமெண்டில் சொல்லுங்கள். 


சர்வதேச தேநீர் தினத்தின் முக்கியத்துவம்


உலகில் தேயிலையின் நீண்ட வரலாறு, கலாச்சாரம் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளைக் கொண்டாடுவதன் நோக்கமாகும். தேயிலையின் நிலையான உற்பத்தி ஊக்குவிக்கவும், வறுமை மற்றும் பசிக்கு எதிரான போராட்டத்தின் வெற்றியை பெறும் நோக்கி கொண்டு வரப்பட்டது. இந்தியா, இலங்கை, நேபாளம், வியட்நாம், இந்தோனேசியா, வங்கதேசம், கென்யா, மலேசியா மற்றும் தான்சானியா போன்ற நாடுகள் அதிகளவிலான தேயிலையை உற்பத்தி செய்யும் நாடுகள் ஆகும். பெரும்பாலான நாடுகளில் மே மாதத்தில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே இன்றைய தினம் சர்வதேச தேநீர் தினமாக தேர்வு செய்யப்பட்டது.


இந்தியாவிற்கு தேநீர் எப்போது வந்தது ?


கடந்த 1821ம் ஆண்டு இந்தியாவில் பர்மா, மியான்மர் மற்றும் அஸ்ஸாம் எல்லை மலைகளில் தேயிலை செடிகள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆங்கிலேயர்கள் 1836 இல் இந்தியாவில் தேயிலை உற்பத்தியைத் தொடங்கினர். முன்னதாக சீனாவில் இருந்து விதைகள் விவசாயத்திற்காக இறக்குமதி செய்யப்பட்டன. அதன் பின்னர் அஸ்ஸாம் தேயிலை விதைகள் பயன்படுத்தத் தொடங்கின. பிரிட்டிஷ் சந்தைகளில் தேயிலைக்கான தேவையை பூர்த்தி செய்வதற்காக முதலில் இந்தியாவில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. இன்று இந்தியாவில் தேநீர் மிகவும் பிரபலமான மற்றும் மலிவான பானமாக வலம் வருகிறது. 


தேநீரின் ஆரோக்கிய நன்மைகள்: 


தேநீரில் பல ஆரோக்கிய நன்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. இது உலகம் முழுவதும் நடத்தப்பட்ட பல ஆய்வுகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து ரீதியாக, தேநீரில் புரதங்கள், பாலிசாக்கரைடுகள், பாலிபினால்கள், தாதுக்கள், அமினோ மற்றும் கரிம அமிலங்கள், லிக்னின் மற்றும் மெத்தில்க்சாந்தின்கள் (காஃபின், தியோபிலின் மற்றும் தியோப்ரோமைன்) உள்ளன. தேநீரின் ஆரோக்கிய நன்மைகள் நம் உடலில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படும் பைட்டோ கெமிக்கல்களிலிருந்து வருகின்றன. டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மேலும், இது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது. எலும்புகளைப் பாதுகாக்கிறது மற்றும் எடை குறைப்புக்கு முக்கியமான காரணியாக உள்ளது.