ICC Israeli PM: இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை கைது செய்ய வேண்டும் என, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் எழுந்துள்ள கோரிக்கைக்கு அமெரிக்க அதிபர் பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேதன்யாகுவை கைது செய்ய கோரிக்கை:
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஏழு மாதங்களாக நடைபெற்று வரும் மோதலில், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கl அரங்கேறுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் மூன்று மூத்த ஹமாஸ் தலைவர்களான யெஹியா சின்வார், முகமது டெய்ஃப் மற்றும் இஸ்மாயில் ஹனியே ஆகியோருக்கு கைது வாரண்டுகளை கோர உள்ளதாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) தலைமை வழக்கறிஞர் அறிவித்துள்ளார்.
ஐசிசி வழக்கறிஞர் சொல்வது என்ன?
கைது வாரண்ட் தொடர்பாக ICC தலைமை வழக்கறிஞர் கரீம் கான் பேசியபோது, ”காசா பகுதி மற்றும் இஸ்ரேலில் சர்வதேச சட்டத்தை கடுமையாக மீறுவதற்கு நேதன்யாகு, கேலன்ட் மற்றும் ஹமாஸ் தலைவர்களே பொறுப்பு. காசாவின் குடிமக்களுக்கு எதிரான பிற தாக்குதல்கள் மற்றும் கூட்டுத் தண்டனையுடன், பட்டினியைப் போர் முறையாகப் பயன்படுத்துவதன் விளைவுகள் கடுமையானவை. இதனால் ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழப்பு போன்ற பெருந்துன்பம் ஏற்படுகின்றன. இதனால் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட பாலஸ்தீனிய மக்களிடையே இறப்புகளும் அதிகரித்து வருகின்றன” என தெரிவித்துள்ளார்.
நேதன்யாகுவை கைது செய்ய முடியுமா?
கைது வாரண்டுகளுக்கான கோரிக்கையானது மூன்று நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும். வழக்கமாக நீதிபதிகள் இரண்டு மாதங்கள் சாட்சியங்களை விசாரித்து, நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியுமா என்பதை தீர்மானிப்பார்கள். ஐசிசியில் இஸ்ரேல் உறுப்பினராக இல்லை. இதனால் பிடிவாரண்டுகள் வழங்கப்பட்டாலும், நேதன்யாகு மற்றும் கேலன்ட் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு இல்லை. அதேநேரம், இந்த அறிவிப்பு இஸ்ரேல் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும் சூழலை அதிகரிக்கிறது. அதன் தலைவர்களின் வெளிநாட்டு பயணங்களையும் சிக்கலாக்குகிறது.
ஜோ பைடன் ஆவேசம்:
நேதன்யாகுவை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு, அமெரிக்க அதிபர் பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், ”இஸ்ரேலிய தலைவர்களுக்கு எதிராக ஐசிசி வழக்கறிஞர் கைது வாரண்டுக்கு விண்ணப்பித்திருப்பது மூர்க்கத்தனமானது. இந்த வழக்கறிஞர் எதைக் குறிப்பிட்டாலும், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் எந்த சமத்துவமும் இல்லை என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாங்கள் எப்போதும் உடன் நிற்போம். ஹமாஸில் நடப்பது இனப்படுகொலை கிடையாது” என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
நேதன்யாகு விளக்கம்:
ஜனநாயக இஸ்ரேலை வெகுஜன கொலைகாரர்கள் என்று ஒப்பிடுவதை, வெறுப்புடன் நிராகரிப்பதாக நேதன்யாகு தெரிவித்துள்ளார். அதோடு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரின் கோரிக்கை, உலகம் முழுவதும் பொங்கி எழும், யூத எதிர்ப்புத் தீயில் பெட்ரோலை ஊற்றியதை போன்று உள்ளதாகவும், நேதன்யாகு பேசியுள்ளார்.