Lok Sabha Election Phase 6: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 6ம் கட்டத்தில், 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
6ம் கட்ட வாக்குப்பதிவு:
நாடு முழுவதுமுள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலில், 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி நடைபெற்ற முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவுகளில் முறையே 66.14 சதவிகிதம், 66.71 சதவிகிதம் 65.68 சதவிகிதம் மற்றும் 69.16 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. ஐந்தாம் கட்ட தேர்தலில் நேற்று இரவு 11.30 மணி நிலவரப்படி, 60.09 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது வரை 429 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் 6ம் கட்டமாக 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, 58 தொகுதிகளில் வரும் 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
58 தொகுதிகளில் வாக்குப்பதிவு:
தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, பீகாரைச் சேர்ந்த 8 தொகுதிகள், ஹரியானவைச் சேர்ந்த 10 தொகுதிகள், ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த 1 தொகுதி, ஜார்கண்டைச் சேர்ந்த 4 தொகுதிகள், டெல்லியைச் சேர்ந்த 7 தொகுதிகள், ஒடிசாவைச் சேர்ந்த 6 தொகுதிகள், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 14 தொகுதிகள், மற்றும் மேற்குவங்கத்தச் சேர்ந்த 8 தொகுதிகள் என மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் யூனியன் பிரதேசமான ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த, அனந்த்நாக் - ரஜோரி தொகுதியில் நான்காம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மொத்தமாக வரும் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
களத்தில் 889 வேட்பாளர்கள்:
வாக்குப்பதிவு நடைபெற உள்ள 58 தொகுதிகளில், 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் அனந்த்நாக் - ரஜோரி தொகுதியைச் சேர்ந்த 20 வேட்பாளர்களும் அடங்குவர். அதிகபட்சமாக ஹரியானாவில் 223 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக அனந்த்நாக்கில் 20 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். ஆறாம் கட்ட தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி தொகுதியில் 70 பேரும், வடகிழக்கு டெல்லியில் 69 பேரும் வேட்பாளர்களாக உள்ளனர்.
தலைநகர் டெல்லி யாருக்கு?
தலைநகர் டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும், வரும் 25ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தலைநகரில் ஆதிக்கம் செலுத்த பாஜக மற்றும் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் டெல்லியின் 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது குறிப்பிடத்தகக்து. ஆனால், இந்த தேர்தலில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி, சில தொகுதிகளை கைப்பற்றக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.