முத்தம் என்பது அன்பை பரிமாறிக் கொள்ளும் ஒரு செயல். சில விஷயங்கள் மட்டும் தான் கொடுக்கின்றவருக்கும் பெறுகின்றவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும். அப்படி ஒரு விஷயம் தான் முத்தம் கொடுப்பதும். முத்தம் தருபவருக்கும் அதை பெறுபவருக்கும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். முத்தம் மூலம்  அன்பை பரிமாறுவது மட்டுமல்லாமல் வேறு பல நல்ல விஷயங்களும் உள்ளன. தமிழ் சினிமாவில் சிட்டு குருவி முத்தம் கொடுத்து என்ற பாடல் தொடங்கி பல காதல் பாடல் வரிகளில் முத்தம் இடம்பெற்று இருக்கும்.


‘கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே’ என்ற வரிகள் இடம்பெற்றுள்ள என்ன சத்தம் இந்த நேரம் பாடலும் இளையராஜா இசையில் அமைந்த ஆகசிறந்த காதல் பாடல் ஆகும். உலகம் முழுவதும் இன்று சர்வதேச முத்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் முத்தம் கொடுப்பதால் ஏற்படும் உடல் நன்மைகள் என்னென்ன?




உடம்பில் நல்ல ஹார்மோன்கள்:


முத்தம் கொடுக்கும் போது நமது உடலில் அதிகளவிலான நல்ல ஹேப்பி ஹார்மோன்கள் சுரக்கும். குறிப்பாக ஆக்ஸிடோசின், டோபாமைன் போன்ற நல்ல உணர்வை தரும் ஹார்மோன்கள் சுரக்கும். இது நமது உடலை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். 


மன அழுத்தம் குறையும்:


ஒருவருக்கு ஒருவர் முத்தத்தை பரிமாறி கொள்ளும் போது மன அழுத்தம் குறைகிறது. இது தொடர்பாக வெளிநாட்டு பல்கலைகழகம் ஒன்று 2009ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் தினமும் முத்தங்களை பரிமாறி கொள்வதால் மனஅழுத்தை ஏற்படுத்தும் கார்டோசால் அளவு உடம்பில் குறைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. 


முகத்தின் தசைகளுக்கு வலு தரும்:


முத்தம் இடம் போது ஒருவர் 2 லிருந்து 34 முக தசைகளை பயன்படுத்த நேரிடுகிறது. ஆகவே முத்தம் கொடுப்பதால் இந்த தசைகள் செயல்படும் நிலை உருவாகும். இது அந்த தசைகளுக்கு நல்ல வலுவை தரும். அத்துடன் முகம் பொலிவுடன் வயதாகாமல் இருக்கவும் இந்த தசைகள் சரியாக இருந்தால் உதவும்.




பற்களுக்கு நல்லது:


முத்தம் கொடுப்பதால் பற்களுக்கு ஒரு நல்ல விஷயம் உண்டு. அதாவது முத்தம் கொடுக்கும் போது உமிழ் நீர் சுரப்பியை செயல்படுத்தி அதிகமாக உமிழ் நீர் சுரக்க வைக்கிறது. இந்த உமிழ்நீர் சரியான அளவில் இருக்கும் போது உணவு விழுங்குவதற்கு உதவுகிறது. இதனால் பற்களில் உணவு பொருட்கள் சிக்கி  ஏற்படும் கேவிட்டி (Dental Cavity) பிரச்னை குறையும். 


உடம்பில் கலோரிகள் எரிக்கும்:


ஒரு நிமிடம் வரை முத்தம் கொடுக்கும் போது முக தசைகளை நாம் பயன்படுத்துவதால் 2 முதல் 26 கலோரிகள் வரை நம்மால் எரிக்க முடியும். இது உடலுக்கு நல்ல சிறிய வோர்க் அவுட் ஆக அமைகிறது. 


முத்தம் கொடுப்பதில் இவ்வளவு நல்ல விஷயங்கள் உள்ளன. நம்மில் பலர் செய்யும் தவறு ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்தாமல் இருப்பது தான். ஆகவே இந்த சர்வதேச முத்த தினத்தில் உங்களின் அன்பானவர்களுக்கு முத்தத்தை கொடுத்து அன்பை வெளிப்படுத்துங்கள். 


மேலும் படிக்க: கிட்னியில் கல் பிரச்னையா? இதையெல்லாம் பாஃலோ பண்ணுங்க!