முழுக்க முழுக்க ஸ்டேப்ளர் பின்னைக் கொண்டு தனுஷ் நடித்த கர்ணன் பட போஸ்டரை உருவாக்கி தயாரிப்பாளர் கலைப்புலி தானுவின் பாராட்டுதலைப் பெற்றுள்ளார் இளைஞர் ஒருவர்.


நமக்கு வெறும் பாறையாகத் தெரிவது ஒரு சிற்பியின் பார்வையில் சிலையாகத் தான் தெரியும். தேவையற்ற கற்களை செதுக்கிவிட்டு அவன் சிற்பியைப் படைத்துவிடுவான். கலைஞர்கள் எல்லோருமே அப்படித்தான் தனித்துவமானவர்கள். ஓவியக் கலைகளில் பல்வேறு விதங்கள் இருக்கின்றன. அதிலொன்று ஸ்டேபிள் ஆர்ட் எனப்படும் ஸ்ட்பேளர் பின்னால் ஓவியங்களை உருவாக்கும் கலை. அவ்வாறாக, முழுக்க முழுக்க ஸ்டேப்ளர் பின்னைக் கொண்டு தனுஷ் நடித்த கர்ணன் பட போஸ்டரை உருவாக்கி தயாரிப்பாளர் கலைப்புலி தானுவின் பாராட்டைப் பெற்றுள்ளார் இளைஞர் ஒருவர். கோவையைச் சேர்ந்த இவர், ஆணியில் கமல்ஹாசனையும், ஸ்டேப்ளர் பின்களால் கர்ணன் தனுஷையும் வரைந்து ’இண்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்’ இடம் பெற்றிருக்கிறார்.


சீவகவழுதி, கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் முதுகலை ஜர்னலிஸம் அண்ட் மாஸ்கம்யூனிகேஷன் படித்துள்ளார். கலை மீதான காதலால் இந்தப் படிப்பில் சேர்ந்துள்ளார். 6 ஆண்டுகளாக ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றியவர் அதனைத் துறந்து இதுபோன்ற புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம்.


கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பதால், அவர் ஓவியத்தை ஆணியால் வரைந்ததாகக் கூறுகிறார் சீவகவழுதி. இந்நிலையில், தற்போது தனுஷின் கர்ணன் பட போஸ்டரை ஸ்ட்பேளர் பின்னால் வரைந்துள்ளார். கர்ணன் தன் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம் என்பதால் தனுஷுக்காக இந்த ஓவியத்தை வரைந்துள்ளேன் எனக் கூறியுள்ளார். இந்தப் புதிய முயற்சியை கர்ணன் பட இயக்குநர் மாரி செல்வராஜ் வெகுவாகப் பாராட்டியுள்ளார். தயாரிப்பாளர் கலைப்புலி தானு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதால் விரைவில் தனுஷின் கவனத்தையும் பெறுவேன் என சீவகவழுதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.






தனது பெயர்க்காரணம் குறித்து கூறுகையில், தனது தந்தை தமிழ் பற்றாளர் என்பதாலேயே இத்தகைய தூய தமிழ்ப் பெயரை தனக்குச் சூட்டியுள்ளதாகவும் அவர் கூறினார். அவர் பெயர் சீவக வழுதி. இதற்காக அவர் பத்து லட்சம் ஸ்டேப்ளர் பின்களைப் பயன்படுத்தியிருக்கிறார். அவர் உருவாக்கியுள்ள ஓவியம் தத்ரூபமாக, உயிரோவியமாகக் காட்சியளிக்கிறது.


இந்த ஓவியம் குறித்து பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு தனது ட்விட்டர் பக்கத்தில், "புதிய புதிய வரலாறுகளை கர்ணன் உருவாக்கிக் கொண்டிருக்கிறான், இன்னும் உருவாக்குவான், இப்படைப்பை வரைந்து சாதனை புரிந்த சீவக வழுதிக்கு எனது வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார். கர்ணன் திரைப்படத்தை மாரி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ளார். வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ். தானு தயாரித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.