ஆள் பாதி, ஆடை பாதி என்பார்கள். ஆனால், ஆடை தான் பலரை முழுவதுமாக தீர்மானிக்கிறது என்கிற சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு ஆடை வெளியாகிறது. ஒரு கட்டத்தில் சுழற்சியில் ஆடைகள் மீண்டும் ரீ எண்ட்ரி தருவதுண்டு. ஆனால், இந்தியா மாதிரியான பல மொழி பேசும் தனித்துவம் கொண்ட நாட்டில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனித்துவமான ஆடை இருக்கிறது. அப்படி பார்க்கும் போது, தமிழ்நாட்டில் ஆண்களுக்கான பாரம்பரிய ஆடையாக வேட்டி பார்க்கப்படுகிறது. 




வேட்டி, வேஷ்டி என்றெல்லாம் அழைத்தாலும், அதுவும் உடுத்துபவர் பொருளாதாரத்தை பொருத்து மாறுபடுகிறது. கூலி வேலை செய்பவரும் வேட்டி கட்டுகிறார்; அவருக்கு கூலி தரும் முதலாளியும் வேட்டி கட்டுகிறார். ஆனால், அவர்களின் வேட்டி நிறம் தான், வேற்றுமையை தீர்மானிக்கிறது. ஆனால், இரண்டுமே வேட்டிதான், என்பதிலிருந்து வேறு பொருளில் அதை அழைப்பதில்லை. ஆனால் பிற உடைகளுக்கு அந்த பெருமை கிடையாது. பேண்ட் என்று எடுத்தால், அதில் பல ரகம் இருக்கும். சட்டை என்று எடுத்தால் அதிலும் பல ரகம் இருக்கும். டீ சர்ட் என்று எடுத்தால், அதிலும் பல ரகம் இருக்கும். இப்படி ஆடைகள் பலவற்றிக்கு பல பெயர் இருந்தாலும் வேட்டி மட்டும் தான், வேட்டியாக அறியப்படுகிறது, அழைக்கப்படுகிறது.


வேட்டி தினம் உருவானது எப்படி?


பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்க முடிவு செய்த யுனேஸ்கோ அமைப்பு, கடந்த 2015-ஆம் ஆண்டு உலக வேட்டி தினமாக அறிவித்தது. அதை ஏற்ற மத்திய அரசும், ஜனவரி 6 அன்று வேட்டி தினம் அனுசரிக்க அறிவுறுத்தியது. அன்றிலிருந்து இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் வேட்டி தினம் அனுசரிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் அன்றைய நாளிலாவது அனைவரும் வேட்டி அணிந்து, பாராம்பரிய ஆடையை போற்ற வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம். இன்னொரு முக்கிய நோக்கமும் இருக்கிறது. கைத்தறி நெசவுத் தொழிலாளர்களின் அரிய படைப்பான வேட்டியையும், அவர்களின் உழைப்பையும் அங்கீகரிக்க வேண்டும் என்கிற நோக்கமும் அதில் இருந்தது. 


முன்னெடுத்த சகாயம் ஐஏஎஸ்!




வேட்டி தினம் அறிவிக்கப்பட்டதில், ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு பெரிய பங்கு உண்டு. அவர் கோஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த போது, தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில், ‛ரோமானியர்களுக்கு ஆடை அனுப்பிய பெருமைக்குரியவர்கள் தமிழர்கள். அந்த ஆடையை பெருமைபடுத்தும் விதமாக, தமிழ் திருநாள் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ஏதாவது ஒரு நாளை வேட்டி தினமாக கொண்டாட வேண்டும்,’’ என்று அந்த கடிதத்தில் சகாயம் தெரிவித்திருந்தார். அதை ஏற்று பலரும், வேட்டி தினத்தை கொண்டாடத் தொடங்கினர். இந்த முன்னெடுப்பு, யுனெஸ்கோ கவனத்திற்குச் சென்றது. அவர்களுக்கு அதை அங்கீகரித்து, ஜனவரி 6 ல் வேட்டி தினத்தை அறிவித்தனர். வேட்டி தினத்திற்கு முக்கிய தினமாக இருந்தவர், சகாயம் ஐஏஎஸ் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.




ஒரு நாள் போதுமா?


வேட்டி தினத்தை நாம் ஆண்டுக்கு ஒரு முறை முன்னெடுத்தால் போதுமா? உணவில் இயற்கை வேண்டும் என்கிறோம், வாழ்வியலில் இயற்கை வேண்டும் என்கிறோம், சமைக்கும் எண்ணெய்யாக இருந்தால் கூட அதிலும் இயற்கையான செக்கு எண்ணெய் வேண்டும் என்கிறோம். ஆனால் உடையில் மட்டும், செயற்கையான ரெடிமேட் ஆடைகளை விரும்புகிறோம். அதை விரும்பக்கூடாது என்றில்லை; அவற்றோடு நம் பாரம்பரிய உடைகளையும் விரும்பி அணிய வேண்டும். அப்போது தான், அதை மட்டுமே நம்பி தொழிலில் இருக்கும் கைத்தறி நெசவாளர்கள் பிழைக்க முடியும். நம் பாரம்பரியமும், காலம் காலம் நிலைத்து நிற்கும். அண்டை மாநிலமான கேரளாவில் வேட்டி பயன்படுத்தும் அளவிற்கு தமிழ்நாட்டில் வேட்டி பயன்படுத்தப்படுவதில்லை. இன்றும் கேரள கோயில்களில் வேட்டி கட்டாயம். அதுமாதிரியான கட்டுப்பாடுகளை கொண்டு வந்தாவது, வேட்டியை வேரூன்றி வளர்ப்போம். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண