வேட்டைத் துணைவன் - 6                                                 


 


 Polygar hound – பகுதி ஒன்று


தமிழக நாயினங்கள் பற்றிய மேம்போக்கான தகவல்களைத் தவிர்த்து மேலும் ஒரு அடி, அறிதல் பொருட்டு முன்னோக்கி நகர வேண்டுமெனில் கட்டாயம் நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய பெயர் “polygar hound” ( poligar – polygar ரெண்டும் ஒன்றே) பல நூறு பிரித்தானிய  வேட்டையடிகளின் பிரியத்திற்கு உரிய தென்னிந்திய நாயினமும், தற்போதைய தமிழக நாயினங்களுக்கு வித்திட்ட பொது மூதாயும், அன்றும் – இன்றும்  இராஜபாளையம் நாய்கள் குறித்து எவர் கட்டுரை எழுதினாலும் தொடர்ந்து கோடிட்டுக் காட்டும் முக்கியப் பெயரும் இதுவே.


உங்களில் பலருக்கு இப்பெயர் இணையம் வாயிலாகவோ அச்சு இதழ் வாயிலாகவோ நன்கு அறிமுகமாகியிருக்கக்கூடும். பலருக்கு முக்காலமும் சத்தியமாக இவை இராஜபாளையம் நாய்களைக் குறிக்கும் பழைய பெயர்தான் என்ற தீர்க்கமான நம்பிக்கையும் இருக்கக்கூடும் . அந்த நம்பிக்கையை வலுப்படுத்தியது எது? அந்தக் கருத்தை முதலில் விதைத்தது யார்? என்பதை பின் விரிவாகப் பார்ப்போம்.


முன்னதாக,  எண்ணற்ற குறிப்புகளில் பிரித்தானியர்கள் பதிவு செய்தது எல்லாம் இன்றைய இராஐபாளையத்தையா? நாய் இனங்கள் முறையே பிரிந்து முழுவதுமாக உருப்பெறாத காலத்தில்  ஏதோ ஒரு இனத்தை அவ்வளவு சீராக எல்லோராலும் குறிக்க முடியுமா?  என்றால் நிச்சியம் வாய்ப்புகள் குறைவென்றே சொல்ல வேண்டும். நேரடியாக குறிப்புகளுக்குள் செல்வதற்கு முன்பாக முதலில் யார் எழுதிய குறிப்புகள் இவை, எதன் பொருட்டு எழுதப்பட்டவை இவை, எந்த காலகட்டத்தில் எழுதப்பட்டவை இவை என்பது குறித்துப் பார்ப்போம்.


 



GREY_HOUND_DOG


1858 ஆமாண்டு விக்டோரிய பேரறிவிப்பு நடந்து, இந்தியாவை பிரிட்டன் அரசு முழுவதுமாகக் கைக்கொண்ட பிறகு, தங்கள் ஆளுமைக்கு உட்பட்டுள்ள நாட்டின் கலாச்சாரம்,  பொருளியல், வரலாறு, வளங்கள் ஆகியவற்றை அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் வெள்ளை அரசுக்கு ஏற்பட்டது.  எனவே 1865 ஆண்டு அரசாணை எண் 2, 162 யை  நடைமுறைக்கு வந்தது. இதன்படி இந்திய பிராந்தியங்களில் ICS பொறுப்பேற்றுள்ள பிரித்தானிய அதிகாரிகள், இன்னை பிற ஊழியர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் குறித்து தெளிவான அறிக்கை ஒன்றை சமர்பிக்க வேண்டும்.



  1. H. நெல்சன் எழுதி தமிழகத்தின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட வரலாற்று ஆவணமாக மதிக்கப் படும், The madura country – A manual (1868) புத்தகமும் 1916 ஆமாண்டு I. C. S அதிகாரி H. R. Pate எழுதி வெளியான “Tinneveli district gazatter” எல்லாமும் அவ்வாணை பொருட்டு உருவானவையே. இப்படி தமிழகம் முழுவதும் எழுதப்பட்ட gazatte களில் “Flora and fauna” என்ற தலைப்பிலான கட்டுரைகளும் உண்டு. அவற்றுள் நம் நாயினங்கள் குறித்த சில தகவல்களும் உண்டு ஒன்று,


ரெண்டாவதாக, பணி நிமித்தமாக இந்தியாவுக்கு வந்து ஊழியம் செய்து, தாங்கள் வந்தடைந்த நாட்டில் தான் பார்த்த, கேட்ட சங்கதிகளை பதிவு செய்த பிரித்தானியர்கள் குறிப்புகளில் கிடைக்கப்பெறும் தகவல்கள். James welsh உடைய பதிவுகள் அதற்குப் பொருத்தமான உதாரணம்.


மூன்றாவது, தொடக்கத்தில் இந்தியக் காடுகள் குறித்து தகவல்களை எழுதிய பிரித்தானியர்களில் பெரும்பான்மையானவர்கள் வேட்டையாடுவதில் பிரியம் கொண்டவர்கள். அவர்களுக்கு வேட்டை ஒரு விளையாட்டு, கேளிக்கை. அதற்கு இயங்கு தளமான காடுகள் நம்மிடத்தில் செழித்து இருந்தமையால், “Hunts club” களை இங்கு உருவாக்கியிருந்தனர் (வரும் தொடர்களில் அது குறித்து விரிவாகப் பார்க்க உள்ளோம்)  வேட்டையை விளையாட்டாக எடுத்து Sports magazine களில் வேட்டை – நாய்கள் குறித்து செய்திகள் வெளியிட்டனர். அவற்றில் இருந்தும் நமக்குத் தேவையான தகவல்கள் கிடைக்கின்றன.


இவ்வாராக மூண்று பெரும் பிரிவுகளில் கொட்டிக்கிடக்கும் polygar hound பற்றிய தகவல்களில் இருந்து முதல் கட்டமாக சிலவற்றை எடுத்து முறையே அலசுவோம்.


“அதிவேகமும், பெரிய  உடல் வாகும், முரட்டுத்தனமும் கொண்ட இந்த polygar hound கள் மிக அரிதானவை என்பதோடு அவற்றைப் பெறுவதும் கடினமானது” என்கிறது 1869 ஆம் ஆண்டு வெளியான “The madras revenue register – vol. 3”. அதுபோல மலபார் பகுதிகளில் சில நல்ல polygar  நாய்களை சிறுத்தை வேட்டைக்கு வாங்கியதாக வேட்டையாடி ஒருவர் 1840 ஆம் ஆண்டு வெளியான sportsman vol. 11 இதழில் குறிப்பிடுகிறார். தோராயமாக இந்நாய்கள் பருவேட்டையாடும் நாய்கள் போல ( அளவில் பெரிய விலங்குகளான  மான், மிளா, காட்டுப்பன்றி ஆகியவற்றை வேட்டையாடுவதை பருவேட்டை என்றும், அவற்றில் பங்கு கொள்ளும் நாய்களை பருவேட்டை நாய்கள் என்றும் பொதுவாகக் கூறுவார். மேலும் இப்படி ஒரு தனி இனம் கிடையாது. முந்திக்கொண்டு இதை நான் சொல்லக் காரணம்,  “அழிந்து போனதா தமிழ் இனத்தின் பருவேட்டை நாய்கள்” என்ற தலைப்பில் நாளைக்கே youtube வீடியோ வருமே என்ற பயத்தில் தான்’ இவை அளவில் பெரியவையாகவும், ஆக்ரோஷ குணம் கொண்டவையாகவும் இருக்குமென அறிய முடிகிறது. இதையே,



இராஜபாளையம்


“ஆக்ரோஷமான காவல்த்திறன் கொண்ட polygar நாய்கள் இளம் கன்று போல அளவில் பெரிய மிருகங்கள். அதனுடைய ஆழ்ந்த குரைப்பொலியோ வழக்கமான நாயினத்தின் சத்தத்தை ஒத்து இருக்காமல் கோவமுடைய சிங்கத்தின் கர்ஜனையைவிட சத்தமாக இருக்கும்” என 1853 ஆம் ஆண்டு வெளியான ‘The home friemd, a weekly mixell” குறிப்பிடுகிறது. சில மிகைகள் இருக்கலாம். அவை தவிர்த்து இந்நாய்கள் அளவில் பெரிய mastiff ( அளவில் பெரிய நாய்களை உள்ளடக்கிய பிரிவுக்கு பெயர்.  இவை  நல்ல உடல் வாகும் பெரிய தலையும் – உயரமும் உடையவை உதாரணம் : french mastiff, bull mastiff ) போன்ற நாய்களை நெருக்கி, இவற்றின் தோற்றத்தை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. அதே வேலை,  இவற்றை மட்டுமே வைத்துக்கொண்டு நாம் ஒரு திடமான முடிவுக்கு வந்து விட முடியாது. காரணம் மேற்கூறிய வற்றுக்கு பொருந்தாத குறிப்புகள் பலவும் இங்குண்டு .


“பெரிய பலம் வாய்ந்த இந்த polygar நாய்கள்,Greyhound களை ஒற்ற உருவமுடையவை. இவை குறைந்த ரோமத்துடன் காணப்படும்”. என்ற குறிப்பும் கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில்( 1887)  வெளியான “Manual of the coimbatore district in the presidency of madras” யில் காணக்கிடைக்கிறது. Greyhound என்பது sighthound பிரிவை சார்ந்தது. இவை சின்ன தலையும் கூர் முகமும், இறங்கிய நெஞ்சும், ஒட்டிய வயிறுமாக நமது வேட்டை நாயை ஒத்த தோற்றம் உடையது. ஒரு வகையில் அதன் மூதாதையரும் கூட ! முன்பு நாம் பார்த்த பெரிய mastiff வகை நாய்களுடைய உடல் கூறும் இதுவும் நேரெதிரானவை . 1839 – 1840 ஆம் ஆண்டுகளில் வெளியான “The sporting review” இதழில் john william carleton , polygar நாய்களை greyhound களுடன் தான் ஒப்பிடுகிறார்.



சிப்பிப்பாறை நாய்


ஒரே காலகட்டம், ஒரே பெயர் என்ற போதிலும் இருவேறு தோற்றக் கூறு உடைய அமைப்புகளைப் பார்க்க முடிகிறது. தனியே ரெண்டு வகை செய்திகளையும் வலு சேர்க்கும் வகையில்  ரெண்டு பக்கங்களிலும் ஏராளமான குறிப்புக்கள் இருக்கத்தான் செய்கிறது. இருந்தபோதும் இதற்க்கு முன்பு இப்படி நேருக்கு நேர் ரெண்டு தரப்பும் முட்டிக்கொண்டதில்லை.


நாம்தான் இழுத்து முட்டவைத்துவிட்டோம். உண்மையில் இவை ரெண்டில் எந்த உருவ அமைப்புடைய நாய்களை நாம் polygar hound என்று எடுத்துக்கொள்வது. உண்மையில் இவை இருவேறு இனமா? அல்லது பதிவிட்டவர்களின் புரிதல் சிக்கலினால் எழுந்த குழப்பமா? இன்று எப்படி இராஜபாளையம் நாய்களுக்காண பெயராக மட்டுமே இப்பெயர் எஞ்சி நிற்கிறது? இப்பெயர் உணர்த்துவது என்ன?  என்பதை அறிய  தொடர்ந்து பயணிப்போம்.