'dark face filter' எனும் ஃபில்டர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. ஒரு ரீல், அல்லது ஃபில்டர் ஹிட் ஆனால் எல்லாருமே அதனையே பயன்படுத்துவார்கள். அப்படித்தான் தற்போது டார்க் ஃபேஸ் ஃபில்டர் வைரலில் உள்ளது. இந்த ஃபில்டரின் மூலம் அந்த ரீல் துவங்கும்போது கருப்பு நிறமாக, சோகமாக, தன்னை பற்றி அருவறுப்பான உணர்வுடன், எந்தவிதமான தன்னம்பிக்கையும் இன்றி காட்சியளிக்கிறார்கள். திடீரென ஒரு ஃப்ளேஷ் அடிக்கிறது. அதில் மாநிறமாகவோ, சிவப்பாகவோ மாறுகிறார்கள். அந்த நிறத்திற்கு அவர்களது முகம் மாறியதும் சந்தோஷமாக மிளிர்கிறது. கேமராவைப் பார்த்து மகிழ்ச்சியோடு சிரிக்கிறார்கள். அத்துடன் முகத்தில் அவ்வளவு தன்னம்பிக்கை. சில நாட்களுக்கு முன்பு இந்த ஃபில்டர்தான் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங். மில்லியன் கணக்கில் பார்வைகளையும் வென்றது. இதனையடுத்து நிறவெறியையுடன் இனவெறியையும் தூண்டும் வகையில் உள்ளதாக சிலர் ரிப்போர்ட் அடித்ததும் அந்த ஃபில்டர் பேன் செய்யப்பட்டது.






 


இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க நிறம் பற்றிய வெறி இருக்கிறது. குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரை நிறம் தான் தன்னம்பிக்கையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. வீடுகளில் சிறுவயதிலிருந்தே நேரடியாகவோ மறைமுகமாகவோ அது கற்பிக்கப்படுகிறது. யாருக்காவது குழந்தை பிறந்தாலோ, ஏதாவது திருமணத்திற்கு சென்று வந்தாலோ அதைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லும்போது நிறம்தான் பிரதானப்படுத்தப்படுகிறது.. கருப்பு, சிவப்பு, வெளுப்பு போன்ற வார்த்தைகள் தான் பயன்படுத்தப்படுகிறது. ஊடகங்களும், விளம்பரங்களும் அதையேதான் செய்கின்றன. நேர்காணல்களில் ஜெயிப்பார், காதலனை, காதலியை வெல்வார்.


உயரம் குறைவாக இருப்பதும், பருமனான உடல் வைத்திருப்பதும் கூட தன்னம்பிக்கையின்மையின் அடையாளமகத்தான் சொல்லப்படுகிறது. அவற்றை பார்க்கிற நம் மனதிலும் அதுதான் படிகிறது. நம்முடைய தோலின் நிறத்தை வெறுக்கிறோம், உடலை வெறுக்கிறோம், ஒவ்வொருமுறையும் உயரத்தை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து தாழ்வு மனப்பான்மை கொள்கிறோம். இதைதான் விளம்பர நிறுவனங்கள் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. உண்மையை சொன்னால் இந்த மனநிலை திட்டமிட்டு உருவாக்கப்படுவது. அதுதான் சந்தை. அவர்களின் பொருட்கள்தான் சர்வரோக நிவாரணியாக சொல்லப்படுகிறது. உயரம் குறைவான குழந்தைகளுக்கு இதை பருக கொடுங்கள், உடல் பருமனை குறைக்க இந்த டீயை குடியுங்கள், ஒரே வாரத்தில் பளிச்சான நிறம்பெற இந்த க்ரீமை, சோப்பை  உபயோகப்படுத்துங்கள் என்றெல்லாம் சொல்லி விற்கப்படுகிறது. ஆனால் இதற்கெல்லாம் ஒரு பெருந்தொகையை செலவழித்து 10 வருடங்களாக அந்த க்ரீம்களைப் பயன்படுத்தினாலும் நமது தோற்றத்தில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் விளம்பரத்தில் வரும் ஆணோ பெண்ணோ பத்தே நொடியில் மேஜிக்கை நிகழ்த்துவார்கள்.


ஆனால் இதுபோன்ற புறவயக் காரணங்களும், சமூகத்தின் எதிர்பார்ப்புகள் நம் மனதை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்வதுதான் சரி. நான் இப்படி தோற்றமளித்தால்தான், இப்படி உடையணிந்தால்தான் மற்றவர்களுக்கு பிடிக்கும் என்பதல்ல சரி. நீங்கள் முதலில் உங்களுக்கு பிடித்தவராக இருக்க வேண்டும். அதற்காக, உங்கள் விருப்பத்திற்கேற்ப விஷயங்களை செய்ய வேண்டும். மனதை பழக்கப்படுத்த வேண்டும். நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அதற்காக உங்களைப் பற்றி நீங்கள் பெருமையாக உணர வேண்டும். இதை சாப்பிட்டால் எடை போடும், உடல் எடை கூடினால் மற்றவர்களுக்கு பிடிக்காது. வெயிலில் நடந்தால் டேன் ஆகிவிடுவேன். வெள்ளையாக இருந்தால்தான் அழகாக இருப்போம் என்பதெல்லாம் தவறாக கற்பிக்கப்படுபவை. இது போன்ற கற்பிதங்களிலிருந்து நாம் முதலில் வெளியே வர வேண்டும். அதுதான் body Positivity. நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே நம்மை ஏற்றுக்கொள்வது. 






 


அதே சமயம் எப்படி வேண்டுமானாலும் ஒருவர் இருக்கலாம் என்பதையும் நான் ஊக்குவிக்கமாட்டேன். எப்போது வேண்டுமானாலும், தூங்கி எழுந்து, ஜங்க் போன்ற என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டு, குறைந்தபட்ச உடற்பயிற்சிகள் கூட செய்யாமல் இருப்பதும் தவறான போக்கு. காரணம் ஒவ்வொரு உடலும் ஒரு இயந்திரம் போன்றது. உங்கள் உடலுக்கென்று சில இளைப்பாறுதல்கள் தேவை. அதற்கு தூக்கம் முக்கியம். சில சத்தான உணவுகள் தேவை. அதைக் கொடுக்க வேண்டும். அசையாமல் இருப்பது உடல்நிலையை மோசமாக செய்யும் அது பின்னாளில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகள்தான் செய்ய வேண்டும் என்பதில்லை.  குறைந்தபட்சம் அரைமணி நேரம் நடை பயிற்சி மேற்கொள்ளலாம். அதற்கென் நேரம் ஒதுக்கலாம். ஜிம் போகலாம். ஆனால் அவையெல்லாம் மற்றவர்களுக்காக அல்ல. உங்களுக்காக. உங்களின் உடலுக்காக.. மனதுக்காக. 


ஒவ்வொரு உடலும் வித்தியாசமானது. ஒன்றிலிருந்து மாறுபட்டது. உங்கள் உடலை, வெற்றி தோல்விகளை மற்றவர்களோடு ஒப்பிடுவது மிகப்பெரிய அபத்தம். சமூக வலைதள காலமான தற்போது சந்தைகளும் வளர்ந்து வருகின்றன. தோல், உணவு சம்பந்தப்பட்ட துறைகள் மிகப்பெரிய அளவுக்கான வியாபார சந்தையாக உள்ளது. அவை உங்களை குறி வைத்துதான் இயங்குகின்றன. விழித்துக்கொள்ளுங்கள். நீங்கள் நீங்களாக இருப்பதற்காக உங்களை நேசியுங்கள். உங்களது ‘உடல்’ மட்டுமே நீங்கள் அல்ல.!