தாவரங்கள் வைக்கப்பட்டுள்ள இடம் புத்துணர்ச்சியுடன், இனிமையான சூழலாக மாறுகின்றன. வீடுகளில் தோட்டங்களை உருவாக்க விரும்பும் பலர் உள்ளனர். ஆனால் பொதுவாக தாவரங்களுக்கு போதுமான தண்ணீர் மற்றும் சூரிய ஒளியை வழங்குவது முக்கியம். ஆனால் வீட்டிற்குள்ளே வைத்து வளர்க்கக்கூடிய, சூரிய ஒளி தேவைப்படாத சில தாவரங்களும் உள்ளன. அவை வீட்டிற்குள் எளிதில் உயிர்வாழ்பவை ஆகும். இந்த தாவரங்கள் அவற்றின் வேர்களிலிருந்து ஊட்டச்சத்தை பெறுகின்றன. இதுவே அவைகளை சூரிய ஒளி இல்லாமல் வாழ உதவுகிறது. எனவே, சூரிய ஒளி இல்லாமல் வாழக்கூடிய, வீட்டிற்குள் வைக்கக்கூடிய ஏழு தாவரங்களைப் பார்ப்போம்:


பார்லர் பாம் (Chamaedorea elegans)


பார்லர் பாம் எனப்படும் இந்த தாவரங்கள் டைனிங் அரை அல்லது ஹாலில் வைக்கக்கூடிய பசுமையான தாவரங்கள் ஆகும். இந்த தாவரங்கள் குறைந்த வெளிச்சத்தில் வளரும். பார்லர் பாமைப் பற்றிய மிக அற்புதமான விஷயம் என்னவென்றால், அவை செயற்கையாக நம் வீட்டு லைட்டில் இருந்து வரும் ஒளியை எடுத்துக்கொண்டு எளிதில் உயிர்வாழ்கின்றன.



பீஸ் லில்லி (Spathiphyllum)


பீஸ் லில்லிகள் குறைந்த அல்லது சுமாரான வெளிச்சத்தில் நன்றாக வளரும். இவற்றிற்கு பூக்கள் பூக்க மட்டுமே சூரிய ஒளி தேவை. குறைந்த ஒளியில் கூட பூக்கள் பூத்துவிடும். ஆனால் குறைவாக பூக்கும். இருப்பினும் இதனை வீட்டிற்குள் வைக்க வேண்டிய காரணம், இவை காற்றை சுத்திகரிக்கும் திறன் பெற்றவை என்பதுதான்.


பீகாக் பிளான்ட் (Calathea makoyana)


பீகாக் பிளான்ட், கதீட்ரல் விண்டோஸ், ரேட்டில் ஸ்னேக் பிளான்ட், மற்றும் ஜீப்ரா பிளான்ட் என பல பெயர்களில் அறியப்படுகிறது. மயிலின் இறகுகளை போன்ற இலைகள் இருப்பதால் இந்த தாவரம் இவ்வாறு பெயர் பெற்றுள்ளது. இந்த தாவரம் வளரவும் வளர மிக சிறிய அளவு சூரிய ஒளியே தேவைப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்: IND vs IRE 2nd T20: தொடரை வெல்லுமா பும்ராவின் இளம்படை?.. அயர்லாந்து - இந்தியா இடையே இன்று 2வது டி-20 போட்டி


பெப்பரோமியா (Peperomia)


பெப்பரோமியா என்பது பொதுவாக மேசைகளில் வைக்கப்படும் சிறிய தாவரங்கள் ஆகும். சுமார் 1000 வகையான பெப்பரோமியாக்கள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் காணப்படுகின்றன. இந்த தாவரங்கள் குறைந்தளவு ஒளியில் வளர்கின்றன. ஃப்ளோரசன்ட் லைட் மூலமும் செழித்து வளரும். 



ஸ்னேக் பிளான்ட் (Sansevieria trifasciata)


ஸ்னேக் பிளான்ட்கள் மிகவும் பிரபலமான உட்புற தாவரங்களில் ஒன்றாகும். இவற்றின் இலைகள் பாம்புகளின் தோலைப் போல இருப்பதால் ஸ்னேக் பிளான்ட் எனப் பெயரிடப்பட்டது. இவை எல்லா வகையான ஒளியிலும் வளரும். ஆனால் எளிதில் அழுகக்கூடியவை, எனவே அதிகம் தண்ணீர் ஊற்றாமல் அவ்வபோது ஊற்றினால் போதும்.


ஸ்பைடர் பிளாண்ட் (Chlorophytum comosum)


ஸ்பைடர் பிளாண்ட்கள் நீளமான, மெல்லிய இலைகளைக் கொண்டிருக்கின்றன. அவை அவற்றின் வேர்களிலிருந்து நீண்டு சிலந்திக் கால்களைப் போல தோற்றமளிக்கின்றன. ஸ்பைடர் செடிகளும் குறைந்த வெளிச்சத்தில் நன்றாக செழித்து வளரக் கூடியவை.


ZZ பிளான்ட் (Zamioculcasi)


ZZ தாவரங்கள் சிறியவை ஆனால் இயற்கையில் வலிமையானவை. ZZ பிரகாசமான ஒளி, மிகக் குறைந்த ஒளி என இரண்டிலும் சிறப்பாக வளரும். இது சிறிய அல்லது இயற்கை ஒளி இல்லாத இடங்களை கூட தாங்கி நிற்கும்.