இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 44 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
10 கோடியை கடந்த எண்ணிக்கை..
இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோர் தொடர்பாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வறிக்கை, லண்டனை சேர்ந்த மருத்துவ இதழான லான்செட்டில் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையின்படி, ”இந்தியாவில் தற்போது 10 கோடிக்கும் அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு நடந்த ஆய்வின் போது 7 கோடியாக இருந்த இந்த எண்ணிக்கை தற்போது 10 கோடியை கடந்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. சில வளர்ந்த மாநிலங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நிலையாக இருந்தாலும், பலவற்றில் அவை ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருகிறது.
கோவா முதலிடம்:
சர்க்கரைநோய் பாதிப்பு என்பது தேசிய அளவில் சராசரியாக 11.4 சதவிகிதம் மட்டுமே ஆகும். ஆனால், சர்க்கரை நோய்க்கு பாதிப்புகளை கொண்டவர்களின் பட்டியலில், 26.4 சதவிகிதத்துடன் கோவா முதலிடத்தை பிடித்துள்ளது. அதைதொடர்ந்து, 26.3 சதவிகிதத்துடன் புதுச்சேரி இரண்டாவது இடத்திலும், 25.5 சதவிகிதத்துடன் கேரளா மூன்றாவது இடத்தையும் வகிக்கிறது. அதேநேரம், குறைவான பாதிப்புகளை கொண்டுள்ள உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், பீகார் மற்றும் அருணாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்த சில ஆண்டுகளில் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை நோய்க்கு முந்தைய பாதிப்பு:
அதோடு, சர்க்கரை நோய்க்கு முந்தைய பாதிப்பின் சராசரி என்பது தேசிய அளவில் 15.3 சதவிகிதம் ஆகும். அதன்படி, மொத்த மக்கள் தொகையில் 15.3 சதவிகிதம் குறைந்தபட்சம் 136 மில்லியன் மக்கள் அதாவது 13.6 கோடி பேருக்கு சர்க்கரை நோய்க்கு முந்தையை பாதிப்பு உள்ளது. அதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் ஆவர். இதில் புதுச்சேரி, கோவா மற்றும் கேரளா ஆகியவை முறையே முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. கோவா, கேரளா, தமிழ்நாடு மற்றும் சண்டிகரில் நீரிழிவு நோயாளிகளுடன் ஒப்பிடும்போது நீரிழிவு நோய்க்கு முந்தைய பாதிப்பு குறைவு. ஆனால், புதுச்சேரி மற்றும் டெல்லியில், அவை ஏறக்குறைய சமமாக உள்ளன. தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 14.4 சதவிகிதம் பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பும், 10.2 சதவிகிதம் பேருக்கு சர்க்கரை நோய்க்கு முந்தைய பாதிப்பும் உள்ளது.
விகித விவரங்கள்:
சர்க்கரை நோய் மற்றும் சர்க்கரை நோய்க்கு முந்தைய பாதிப்பிற்கான விகிதம் என்பது, டெல்லியில் 1:1 ஆகவும், மகாராஷ்டிராவில் 1:1.2 ஆகவும், ஹரியானாவில் 1:1.5 ஆகவும், உத்தரபிரதேசத்தில் 1:3.8 ஆகவும் உள்ளது.
மற்ற பிரச்னைகள் என்ன?
இந்தியாவில் 35.5 சதவிகித மக்களுக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதாகவும், 81.2 சதவிகித மக்களுக்கு டைஸ்லிபிடேமியே எனப்படும் கொலாஸ்ட்ராலில் சீரற்ற நிலை, 28.6 சதவிகித மக்களுக்கு பொதுவான உடல் பருமன் மற்றும் 39.5 சதவிகிதம் மக்களுக்கு வயிற்றுப் பருமன் போன்ற பிரச்னைகளும் உள்ளன" என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.