சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் உள்ள பணிமனையில் ஜன் சதாப்தி ரயில் தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 


ரயில்வே துறைக்கு சோதனை காலம் 


கடந்த ஒரு வார காலமாகவே இந்திய ரயில்வேக்கு மிகவும் சோதனையாக காலமாக அமைந்து விட்டதே என்றே சொல்லலாம். கடந்த ஜூன் 2 ஆம் தேதி கொல்கத்தா மாநிலம் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ற கோரமண்டல் விரைவு ரயில் ஒடிஷா மாநிலம் பாலசோர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.  தவறான சிக்னல் காரணமாக பாதையில் இருந்து விலகி நின்றிருந்த சரக்கு ரயிலின் மீது மோத, அருகிலுள்ள தண்டவாளத்தில் பெட்டிகள் சரிந்தது. இதன்மீது அந்த தண்டவாளத்தில் வந்த யஸ்வந்த்பூர்-ஹவுரா சூப்பர் பாஸ்ட் ரயில் மோத அதன் பெட்டிகளும் தடம் புரண்டது. 


இந்த விபத்தில் 270க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தியா முழுக்க இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சோகம் மறைவதற்குள் ஜூன் 8 ஆம் தேதி ஒடிசாவின் ஜாஜ்பூர் ரோடு ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் பெட்டியின் கீழ் மழையில் நனையாமல் இருப்பதற்காக சிலர் தஞ்சம் புகுந்தனர். இதனை அறியாமல் ரயில் கிளம்ப 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  


அடுத்தடுத்து தொடரும் சம்பவங்கள் 


தொடர்ந்து செகந்திராபாத் - அகர்தலா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சில் இருந்து புகை வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நேற்றைய ஊட்டி மலை ரயிலின் கடைசிப் பெட்டி தடம் புரண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 


தண்டவாளம் மற்றும் ரயில் பராமரிப்பு பிரச்சினையா, தொழில்நுட்ப கோளாறா, மனித தவறா என எதை குற்றம்சாட்டுவது என தெரியாத அளவுக்கு பொதுமக்களை இந்த சம்பவங்கள் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. ஆண்டுக்கு கோடிக்கணக்கில் பணம் கொட்டும் ரயில்வே துறையில் இப்படியான சம்பவங்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 


இப்படியான நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு விஜயவாடாவில் இருந்து ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்  நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வந்தது. பயணிகளை இறக்கி விட்டு இந்த ரயில் பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு சென்ற நிலையில், அருகே சென்ற போது ரயிலின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஊழியர்கள் வந்து 2 சக்கரங்களை பழைய நிலைக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.