முடி வளர்த்து பராமரிப்பது இந்த குடும்பங்களில் தொன்று தொட்டு நடக்கிறது. மூலிகை எண்ணெய்களை பயன்படுத்துவது, முடிக்கு இயற்கையான பொருள்களை கொண்டு சுத்தம் செய்வது, தலை குளித்த பின் காய வைப்பது என ஒவ்வொரு முறையாக வீட்டில் அம்மா செய்திருப்பார்கள். இன்று இந்த அவசர சமூகத்தில் இது மறந்து ஏதோ வேதியல் ஷாம்ப்பூ , கண்டிஷனர் என சென்று கொண்டு இருக்கையில் நின்று, மீண்டும் பழைய ஆயுர்வேத முறையை பற்றி தெரிந்து கொள்வோம்.


ஆயுர்வேத முறையானது முற்றிலும் இயற்கையுடன் இணைந்து சிகிச்சை அளிக்கிறது. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகிய பஞ்சபூதங்களை அடிப்படையாக கொண்டது. மேலும் மூன்று வாதம் பித்தம் கபம் இவற்றை கொண்டு உடலின் அமைப்புகளை பிரிக்கிறார்கள். முடியையும் இந்த மூன்றில் அடிப்படையில் பிரித்து ஒவ்வொன்றிற்கும் தகுந்தாற் போல் சிகிச்சை அளிக்கின்றனர். இந்த மூன்றும் சமமாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் மூன்றில் ஏதேனும் ஒன்று அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால் அது உடலுக்கு நோயை ஏற்படுத்தும் எனவும் ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகிறது.


ஆயுர்வேத முறையில் சில எளிமையான வாழ்வியல் முறை மாற்றத்தால் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.


மனநல ஆரோக்கியம் - இந்த மூன்று தோஷங்களில் மாறுபாடு ஏற்பட்டாலும், மன நிலையில் மாற்றம் ஏற்படும். கோவம், மனஅழுத்தம், உணர்ச்சிகளில் மாற்றம் இவையும் முடி உதிர்தலுக்கு காரணமாக அமையும். முடி வளர்ச்சிக்கு மன ஆரோக்கியம் முக்கியமானதாக இருக்கிறது.


ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் - புரத சத்து நிறைந்த உணவுகள், காய்கள், பழங்கள், நெய், உளர் பழங்கள், போன்ற ஊட்டசத்து மிக்க உணவுகளையும், சீரகம், மஞ்சள், இஞ்சி, தேன் போன்ற செரிமானத்தை அதிகப்படுத்தும் உணவுகளையும். இந்த மூன்று தோஷங்களையும் சமநிலை படுத்த மூலிகையான திரிபலா சூரணம் எடுத்துக்கொள்ள வேண்டும்.


வாதம் இருந்தால், ஊட்டமளிக்கும் உணவுகளையும்,


பித்தம் இருந்தால், குளிர்ச்சியான உணவுகளையும்


கபம் இருந்தால் கசப்பான உணவுகளையும் எடுத்து கொள்ள வேண்டும்.


எண்ணெய்கள் - முடிக்கு தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய் பயன்படுத்தலாம். நெல்லிக்காய் , செம்பருத்தி, ரோஸ் போன்ற மூலிகைகள் சேர்த்து தயாரித்த எண்ணெய்கள் பயன்படுத்தலாம்.


இந்த மூன்று தோஷங்களை பொறுத்து எண்ணெயைப் பயன்படுத்தலாம். வாதம் இருந்தால் பாதம் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டும், பித்தம் இருந்தால் தேங்காய் எண்ணெய்  கபம் இருந்தால் ஆலிவ் எண்ணெயம் பயன்படுத்தலாம்.


மசாஜ் - முடிக்கு வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது முடியின் மயிர் கால்களுக்கு வலுவூட்டவும், தலையில் இரத்த ஓட்டத்தை அதிகமாக்கி முடிக்கு தேவையான ஊட்டச்சத்து அளிக்கவும் உதவுவதாக கூறப்படுகிறது. ஆயுர்வேத முறையில் எண்ணெய் லேசாக சூடாக்கி தலைக்கு மசாஜ் செய்வர். உடலில் இருக்கும் தோஷத்துக்கு தகுந்தாற் போல் எண்ணெய் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.