கடந்தாண்டு உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரசின் இரண்டாவது அலை இந்தியாவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த கொரோனா வைரசின் இரண்டாவது அலையில் உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் காணப்படும் இந்த உருமாறிய கொரோனா வைரசுக்கு டெல்டா வைரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
டெல்டா வைரசின் தாக்கம் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி தற்போது ஓரளவு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கும் நிலையில், டெல்டா வைரசை காட்டிலும் மிகவும் அதிக வீரியமுள்ள “டெல்டா பிளஸ்” கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலே கொரோனா வைரஸ் முதல் அலையின்போதும், இரண்டாவது அலையின்போதும் அதிகளவில் பாதிக்கப்பட்ட மகாராஷ்ட்ரா மாநிலத்தில் டெல்டா பிளஸ் கொரோனா வைரசின் தாக்கம் அதிகளவில் உள்ளது. அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே கூறும்போது, மாநிலத்தில் 21 நபர்களுக்கு டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜால்கன் மாவட்டத்தில் 9 நபர்களுக்கும், மும்பையில் 7 பேருக்கும், சிந்துதர்க், தானே மற்றும் பால்கர் மாவட்டத்தில் சிலருக்கும் டெல்டா பிளஸ் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 7 ஆயிரத்து 500 நபர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளில் 21 நபர்களுக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 100 பரிசோதனைகள் மாதிரி எடுக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
கேரளாவில் பாலக்காடு மற்றும் பத்தினம்திட்டா மாவட்டங்களில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலக்காட்டில் இருவருக்கும், பத்தினம்திட்டாவில் ஒருவருக்கும் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலே முதன்முதலாக டெல்டா பிளஸ் கொரோனா தொற்று மத்திய பிரதேசத்தில்தான் கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தின் தலைநகரான போபாலில் 65 வயதான மூதாட்டிக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த 16-ஆம் தேதி தான் அவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அந்த மூதாட்டி கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு டோசையும் செலுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மத்திய பிரதேசத்தில் நான்கு பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து கடந்த சில தினங்களில்தான் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். இந்த சூழலில், மிகவும் ஆபத்து வாய்ந்த டெல்டா பிளஸ் வைரஸ் பரவுவதும், கொரோனா மூன்றாவது அலை வரும் ஆகஸ்ட் மாதம் ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கையும் பொதுமக்களை மிகுந்த கவலையடையச் செய்துள்ளது.
மேலும் படிக்க : உ.பி. சட்டமன்றத் தேர்தலில் ’பரபர’ பாஜக : கட்சி, ஆட்சியில் புது நியமனங்கள் ..!