புதினா இலையில் பல்வேறு மருத்துவ ரீதியான குணங்கள் இருப்பதால், தினமும் புதினா டீ பருகினால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருக்க முடியும் என்கின்றனர் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள்.
புதினாவை செடியில் பச்சைப்பசேல் என்று பார்க்கும் போது ஏற்படும் புத்துணர்ச்சித்தான், அதனை உணவில் சேர்த்து உட்கொள்ளும் போது நமது உடலிலும் கட்டாயம் ஒரு ப்ரஷ்னஸ் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் புதினாவில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட வகைகள் இருப்பது போல, மருத்துவக்குணங்களும் அதிகளவில் உள்ளது. எனவே நமக்கான நாளை தொடங்குவதற்கு முன்னதாக தினமும் காலையில் புதினா டீ பருகினால் நிச்சயம் புது வித ப்ரஷ்னஸ் தான் நமக்குக் கிடைக்கும். குறிப்பாக மழைக்காலம் மற்றும் வெயில் காலம் என அனைத்துப் பருவநிலைக்கு ஏற்ற ஒரு அருமையான மூலிகை தான் புதினா. எனவே இந்நேரத்தில் புதினாவில் ஏற்படும் நன்மைகள் குறித்து நாமும் இங்கே அறிந்துக்கொள்வோம்.
புதினா இலையில் தயாரிக்கப்படும் டீ அற்புதமான ஒரு பானமாகும். சோகமான மனநிலை, வயிறு கோளாறு, மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.
ஒவ்வாமையைக் குணப்படுத்தும் மிக அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்புத்திறன் உள்ளது.
செரிமானத்திற்கு உதவுகிறது. தலைவலியை நீக்கவும் புதினா அருமருந்தாக உள்ளது.
நீங்கள் எங்கேயாவது வெளியில் செல்லும் போது புதினா இலைகளை கொஞ்சம் எடுத்துச் சாப்பிட்டு சென்றால் வாய் துர்நாற்றம் இருக்காது. எனவே இனிமேல் எந்த மவுத்பிரஷ்னசும் உங்களுக்குத் தேவைப்படாது.
பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது ஏற்படும் வலியைக்குறைக்கிறது.
குமட்டலைத்தடுக்கிறது.
மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் அனைவருக்கும் சளி, இருமல் போன்ற ஏற்படும். எனவே சூடாக புதினா தேநீர் அருந்தி வந்தால் நமக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படாது. குறிப்பாக இதில் மெந்தால் எனப்படும் இயற்கையான நறுமயச் சிதைவு இருப்பதால் சளி மற்றும் நாள்பட்ட சளியை உடைக்க உதவுகிறது.
மன சோர்வை நீக்கி கவனக்குறைபாடு இல்லாமல் ஆக்குகிறது. மேலும் நினைவாற்றலையும் அதிகரிக்கச்செய்கிறது.
தினமும் அல்லது வாரம் ஒரு முறை புதினாவை அரைத்து முகத்தில் தேய்த்துவந்தால் முகப்பருகள் வராமல் தடுக்கிறது. மேலும் தொற்று, அரிப்புகளைக் குணப்படுத்தவும் உதவியாக உள்ளது.
இதுப்போன்று பல்வேறு பயன்கள் புதினாவில் நமக்கு கிடைக்கின்றது. எனவே இதுவரை புதினாவை பயன்படுத்தாதவர்கள் இனிமேலாவது பயன்படுத்த தொடங்க மறந்துவிடாதீர்கள் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் தினமும் காலை 7 முதல் 10 புதினா இலைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி எடுத்து தேநீராக பருகும் போது, ஒரு புத்துணர்வை நாள் முழுவதும் நம்மால் பெற முடியும்.