உறவுகள் அமைந்தவுடன் பெரும்பாலான நேரங்களில் நாம் அவற்றை டேக் இட் ஃபார் கிரான்டட் பாணியில் தான் கையாள்வோம். அதாவது, நம்ம மனைவிதானே, நம்ம கணவர்தானே, நம்ம அம்மா, அப்பா, அக்கா தானே பாணியில் நாம் அன்பை வெளிக்காட்டத் தவறிவிடுகிறோம். சின்னச் சின்ன விசாரணைகள், சின்னச்சின்ன பாராட்டுகள், சின்னச்சின்ன புன்னகைகளை கைவிடுவதாலேயே நாம் பெரிய பெரிய இழப்புகளையும் சந்திப்பதும் உண்டு. சின்னச்சின்ன அன்பில்தானே ஜீவன் இருக்கு... ஆகையால் அன்பை வெளிப்படுத்துவதில் தாராளமாகவே இருங்கள்.


ஆஸ்திரேலியாவின் ஸ்வின்பர்ன் பல்கலைக்கழகம் ஓர் ஆய்வு மேற்கொண்டது. உறவுகள் மேம்படுவது குறித்து சில பரிந்துரைகளை அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அது பற்றிய செய்தி தி ஜெருசலேம் போஸ்ட் நாளிதழில் வெளியாகியுள்ளது. வீட்டுவேலைகளை கணவன், மனைவி சரிசமமாக பங்கிட்டு செய்து கொண்டால் அவர்களுக்கு இடையேயான விரிசல் நீங்கி நெருக்கம் எனக் கூறுகிறது அந்த அறிக்கை. ஒரு பெண்ணுக்கு அன்றாடம் வீட்டை தூய்மைப்படுத்துவது, சமைப்பது, சமைத்த பாத்திரங்களை கழுவுவது, துணிகளை துவைப்பது, துவைத்த துணிகளை மடிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். அதனால் அவர்கள் சோர்வாக இருப்பார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் அவர்களை நீங்கள் காதல் செய்தாலோ, இல்லை காமத்தில் தழுவ நினைத்தாலோ அது அவர்களுக்குள் இருக்கும் சோர்வைக் கடந்து எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதனால் உங்கள் இணையருக்கு வீட்டு வேலைகளில் உதவியாக இருங்கள். அப்படிச் செய்தால் உங்கள் இணையர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மகிழ்ச்சி அடைவார்.


இந்த ஆய்வுக்காக ஸ்வின்பர்ன் பல்கலைக்கழகம் 299 ஆஸ்திரேலிய பெண்களிடம் ஆய்வு நடத்தியது. ஆன்லைன் வாயிலாக அவர்களுக்கு பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.அதில் பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவருடனான குடும்ப உறவு சரியாக இருக்க அவர்கள் தங்களுக்கு வேலை வாழ்க்கை சமநிலையை எட்ட உதவி செய்திருக்க வேண்டும் என்றே கூறினர். அதுவும் குறிப்பாக வீட்டு வேலைகளில் உதவினால் அவர்கள் உணர்வு ரீதியாக ரொம்பவே நெருக்கமாக உணர்வதாகக் கூறினார்கள்.


எந்த உறவும் எல்லா நேரத்திலும் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தால் நிரப்பப்படுவதில்லை. நீண்ட கால உறவுகளில் ஆர்வமின்மை இருக்கலாம், எல்லாமே தேங்கி நிற்கும். தங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் பழக்கம் உள்ளவர்கள் தங்கள் கூட்டாளிகளின் உணர்வுகளைக் கருத்தில் கொள்ளாமல் உறவில் ஆதிக்கம் செலுத்துவார்கள்.இது உறவில் விரிசல் ஏற்படுத்தும். ஒருவருக்கொருவர் தனித்துவத்தை மதிக்கவும். கருத்து வேறுபாடுகள் இருப்பது ஆரோக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் அதற்கு ஒரு எல்லை வகுத்துக் கொள்ளுங்கள். உறவு அழகானது அதை சிறப்பாக கொண்டு செல்வதும் சிதைப்பதும் நம்முடைய ஈகோவாக மட்டுமே இருக்க முடியும்.