சமையலுக்குப் பயன்படுத்தும் வெந்தயத்தை தினமும் பல்வேறு வழிகளில் பயன்படுத்தினால் உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க முடியும்.
இன்றைய காலகட்டத்தில் யாரைப்பார்த்தாலும் எனக்கு சுகர், பிபி, கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் இருக்கிறது என்று கூறுவதை நாம் பார்த்திருக்கிறோம். இதற்கு உணவு முறைகளை நாம் முறையாக பின்பற்றாதது தான் காரணம் என்று கூறலாம். ஆம் நம் முன்னோர்கள் உணவு முறைகளை முறையாக பின்பற்றியதன் விளைவு தான் எவ்வித நோய் நொடியும் இன்றி வாழ்ந்துவந்தனர். குறிப்பாக உணவே மருந்து என்பதை மனதில் வைத்து சமையலுக்கு சேர்க்கும் மசாலா பொருள்களை அவர்கள் உபயோகித்துவந்தனர். அந்த நடைமுறைகளை தான் இதுவரை பின்பற்றிவருகிறோம். ஆனால் முறையாக பின்பற்றவில்லை என்று தான் கூற வேண்டும். நம் சமையல் அறையில் பல மசாலா பொருள்கள் பயன்பாட்டில் இருந்தாலும், இன்று நாம் தெரிந்துக்கொள்ளவிருப்பது வெந்தயத்தின் ஆரோக்கிய நன்மைகள்
நம்முடைய சமையலுக்குப் பயன்படுத்தும் வெந்தயத்தில் போலிக் அமிலம், ரிபோஃப்ளேவின், தாமிரம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு வைட்டமின் ஏ, பி6, சி, கே போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கிறது. இதனால் வயிறு வலி, உடல் உஷ்ணம், தலை முடி வளர்ச்சி போன்றவற்றிற்கு உதவியாக உள்ளது என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நேரத்தில் வெந்தயத்தில் வேறு என்னென்ன நன்மைகள் உள்ளது? வெந்தயத்தை நம்முடைய உணவில் எப்படி சேர்த்துக்கொள்வது? என இங்கே நாம் தெரிந்துக்கொள்வோம்..
வெந்தயத்தின் நன்மைகள்:
வெந்தயம் உடலில் குளுக்கோஸ் இண்டாலரன்ஸ் மேம்படுத்த உதவுகிறது. இதோடு நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானப்பிரச்சனைக்கு ஒரு தீர்வாக உள்ளது.
இரத்தத்தில் சர்க்கரை அளவைக்கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
வெந்தயம் சாப்பிடுவதால் பசி அதிகம் ஏற்படுவதோடு, தாய்ப்பால் சுரப்பதையும் அதிகரிக்கிறது.
உடலில் கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை மேம்படுத்த உதவுகிறது.
வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் தேய்க்கும்போது முடி உதிர்வதைத்தடுக்கிறது. முடி வளர்ச்சிக்கும், நரை முடியையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
இதோடு நரம்புத்தளர்ச்சி, பக்கவாதம், மலச்சிக்கல், வயிற்றுவலி,வீக்கம், முதுகுவலி, முழங்கால் மூட்டுவலி, தசைப்பிடிப்பு போன்றவற்றிற்கு நல்ல சிகிச்சை அளிக்கும் மருந்தாக உதவுகிறது.
பொதுவாக பெண்கள் பூப்படையும் போதும், குழந்தைப்பிறக்கும் போதும் முதுகுவலி ஏற்படாமல் இருப்பதற்கு வெந்தயக்களி செய்து சாப்பிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இருமல், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, மார்பு எரிச்சல் மற்றும் உடல் பருமன் போன்ற கபா கோளாறுகளைப் போக்கவும் வெந்தயம் உதவியாக உள்ளது.
இதுபோன்ற பல்வேறு நன்மைகளை வெந்தயம் கொண்டிருக்கும் நிலையில், இதனை எப்படி நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும் நாம் அறிந்துகொள்வோம்.
வெந்தயத்தை உணவில் சேர்க்கும் வழிமுறைகள்:
1-2 தேக்கரண்டி வெந்தயத்தை இரவில் ஊறவைத்து, காலையில் சாப்பிடலாம். ஊறவைத்த நீரையும் பருகலாம்.
வெந்தயத்தைப் பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவு முன் அல்லது இரவில் வெதுவெதுப்பான பால் அல்லது தண்ணீரில் 1 டீஸ்பூன் கலந்து பருகலாம்.
தலைமுடி வளர்ச்சிக்கு வெந்தயத்தை ஊறவைத்து அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தயிர், கற்றாழை ஜெல் போன்றவற்றை சேர்த்து முடியும் தேய்த்துக்குளிக்கும் போது பொடுகு, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் இருக்காது.
இதோடு மட்டுமின்றி முகத்தில் கருவளையங்கள், முகப்பரு, முகப்பரு தழும்புகள் மற்றும் சுருக்கங்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க ரோஸ் வாட்டருடன் வெந்தய பேஸ்டைப் பயன்படுத்தலாம்.