ஒமிக்ரான் வைரஸ் தொற்றின் வகையான BA.2 பரவல் இந்தியாவில் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


தொற்று நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்தின் இயக்குநர் சுஜித் குமார் சிங் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதத்தில் 1292 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டிருந்தனர்.அது ஜனவரியில் 9672 என அதிகரித்தது. அதே சமயம் கொரோனா இறப்பு எண்ணிக்கை கடந்த காலத்தை விட தற்போது மிகவும் குறைந்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. 






கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் பத்து மாநிலங்களில் மட்டும் இதுவரை ஒட்டுமொத்தமாக 77 சதவிகித பாதிப்புகள் பதிவாகியுள்ளது. கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, குஜராத், ஆந்திர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. சுமார் 400 மாவட்டங்கள் 10 சதவிகிதத்துக்கும் அதிகமான வாராந்திர கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது" என அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15 முதல் 18 வயதினரில் 50 சதவிகிதம் பேர் வரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.






தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவும், ஞாயிறுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மேலும், தமிழ்நாட்டில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடியாக வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் கொரோளா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 7ஆம் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறையில் இருந்து வருகிறது. ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையால் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கவும் மற்றும் அவசியம் ஏற்படின் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, பிரிவு 144-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.