கோடை கால காற்றே என்று பாட்டு கேட்க வேண்டுமானால் இனிமையானதாக இருக்கலாம் ஆனால் கோடை உண்மையில் அவ்வளவு சுகமாக அமைந்துவிடுவதில்லை. கோடை வந்துவிட்டால் போதும் கூடவே வியர்வையால் வரும் எரிச்சல், சோர்வு, கோபம் என எல்லாமே கூடிவிடுகிறது. இருப்பினும் நம் வாழ்வில் எல்லா பருவ நிலைகளும் வந்து செல்லும் தானே. அதனை தவிர்க்க முடியாது அல்லவா? அதனால் கோடையை சமாளிக்க எளிதாக சில வழிகளை உங்களுக்குச் சொல்கிறோம்.


நீர்ச்சத்து:


கோடை என்றாலே கொளுத்தும் வெயிலால் வறட்டும் நாவறட்சியும், பிளக்கும் தலைவலியும் சேர்ந்தே வந்துவிடும். அதனாலேயே கோடை காலத்தில் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் எவ்வளவு தண்ணீர் தான் குடிக்க முடியும் என்று கேட்பவர்களும் உண்டு. ஒவ்வொருவரின் உடல் உழைப்பைப் பொருத்து, நீரின் தேவை அமையும். ஆரோக்கியமான வாழ்வுக்கும், அன்றைய தினத்தை நல்லபடியாகக் கடப்பதற்கும் ஒரு நாளைக்கு, இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது.


போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்கிறோமா என்பதை, சிறுநீரின் நிறத்தைக் கொண்டே முடிவு செய்துவிடலாம். சற்று மங்கலான வெள்ளை நிறத்தில் சிறுநீர் இருந்தால், போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறோம் என்று அர்த்தம். தாகம் எடுக்கிறதோ, இல்லையோ, ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை சிறிதளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.


தூக்கம்:


தூக்கம் நம் வாழ்வில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? தரமான தூக்கம் இல்லாமல் நமது அன்றாட நடைமுறைகள் முழுமையடையாது, இது நம் உயிர்வாழ்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 1950 களின் முற்பகுதி வரை, தூக்கம் பொதுவாக உடலும் மூளையும் செயலற்ற நிலையில் இருக்கும் செயலற்ற செயலாக கருதப்பட்டது. இருப்பினும், அது அப்படி இல்லை. கடந்த சில தசாப்தங்களாக, இரவில் நாம் சிறிது நேரம் தூங்கும்போது, ​​நமது மூளை பல அத்தியாவசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்று பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.


பல ஆய்வுகளில், மோசமான தூக்கம் உடல் பருமன், நீரிழிவு நோய், இருதய நோய் மற்றும் பிற நிலைமைகளின் அபாயங்களுகு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. நீங்கள் எவ்வளவு நன்றாக உறங்குகிறீர்கள் என்பது உங்கள் தூக்கத்தின் தரத்தை அளவிடும். இது குறிப்பாக உங்கள் தூக்கம் எவ்வளவு அமைதியானது என்பதை தீர்மானிப்பதை உள்ளடக்குகிறது. தூக்கத்தின் காலம், தொடர்ச்சி மற்றும் ஆழம் ஆகியவை நல்ல தரமான தூக்கத்தின் 3 முக்கிய கூறுகளாகும்.


தர்பூசணி:


கோடை காலங்களில் உடலின் நீர் வியர்வையாக வெளியேறிவிடுவதால் ரத்தத்தில் நீர்சத்து குறைந்து ரத்த ஓட்டம் வேகம் குறைகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் ரத்தத்தில் நீர் சத்து சேர்ந்து, ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. கோடை காலங்களில் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படும். இக்காலங்களில் நீர்சத்து நிறைந்துள்ள தர்பூசணி பழங்களை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, சிறுநீர் பைகளில் நீர் அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும். சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும்.


உணவு முறை:


கோடையில் குளிர்ச்சி தரும் உணவுகளை சாப்பிட வேண்டும். கூழ் வகைகள். காய்கறிகள். குறிப்பாக பச்சைக் காய்கறிகள். பழங்கள் மற்றும் கீரை வகைகள் அதிகமாக சாப்பிட வேண்டும்.கோடையில் அதிகப்படியான இறைச்சி உண்பதும் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  குழம்பு மீன், சிவப்பு இறைச்சி, தந்தூரி சிக்கன் அல்லது கடல் உணவுகளை சாப்பிட விரும்பினால், இந்த நாட்களில் ஒரு மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே சாப்பிடுவது நல்லது.


நடைப்பயிற்சி:


நடைப்பயிற்சி இரத்த அழுத்தத்தைத் குறைப்பதோடு, இரத்த சர்க்கரை அளவில் உள்ள ஏற்றத்தாழ்வை சரிசெய்யும். ஆஸ்துமா மற்றும் சில புற்றுநோய்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.ஒருவர் தினமும் 30 நிமிடங்கள் நடப்பதன் மூலம் நல்ல மனநிலையை உணர வைக்கும் எண்டோபின்களின் வெளியீடு அதிகரித்து, மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்படுவது குறையும்.தொடர்ச்சியான நடைபயிற்சி, எலும்புகளையும், தசைகளையும் வலிமையாக்கும். இதனால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அடிக்கடி அவஸ்தைப்படுவதில் இருந்து விடுபடலாம். அதனால் தொடர்ந்து அரை மணி தினமும் நடக்கலாம்.