குறட்டை என்பது எரிச்சல் ஏற்படுத்தக்கூடியது. அதிலும் குறிப்பாக, உடன் உறங்குபவர் குறட்டை விடுவது நமது தூக்கத்தையும் பாதிக்கும். தேசிய தூக்க நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆண்களில் மூன்றில் ஒருவரும், பெண்களில் நான்கில் ஒருவரும் தூக்கத்தின் போது குறட்டை விடுகின்றனர். குறட்டை என்பது மிகச்சிறிய பிரச்னை எனக் கருதப்பட்டாலும், குறட்டை தோன்றுவதற்கான காரணங்கள் நீண்ட கால உடல் நலக் குறைபாடுகளைக் குறிக்கலாம். குறட்டை விடுவதற்கான முக்கிய காரணமாக உடல் பருமன் கண்டறியப்படுகிறது. இதய நோய்களைக் குறிக்கும் சுவாசப் பிரச்னையும் குறட்டை விடுவதன் மூலம் தெரிய வருகிறது. தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத் திணறலும் குறட்டை விடுவதன் காரணமாக அமைகிறது. 


மருந்துகள் இல்லாமலே குறட்டை விடுவதைத் தடுப்பதற்குப் பல்வேறு முறைகள் இருக்கின்றன. அவற்றை இங்கு காண்போம்.  


உடல் பருமன்/ அதிக எடை


உடல் எடை அதிகரித்த பிறகு, குறட்டை தொல்லையால் அவதிப்படுபவர்கள் தங்கள் எடையைக் குறைப்பது உதவிகரமாக இருக்கும். உடல் பருமன் கொண்டவர்களின் கழுத்துப் பகுதியில் அதிக கொழுப்பு சேர்வதால் அது சுவாசப் பாதையை அடைப்பதோடு, முழுவதுமாக அதனைத் தடுத்துவிடும் வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது. சில ஆய்வுகளின்படி, உடல் எடையைக் குறைப்பதன் மூலம் குறட்டை விடுவதைப் படிப்படியாகக் குறைத்து விட முடியும். 



உறங்கும் நிலை


மேலே நோக்கி, முதுகைத் தரையில் முழுவதுமாக வைத்துத் தூங்குவது குறட்டையை அதிகரிக்கிறது. இவ்வாறு படுப்பவர்களின் சுவாசப் பாதையைச் சுற்றியுள்ள தசைகள் புவியீர்ப்பு காரணமாக பூமியை நோக்கி விரைகின்றன. அதனால் அவை சிறியதாக மாறுவதோடு குறட்டை உருவாகக் காரணமாக அமைகிறது. பக்கவாட்டில் படுத்து உறங்குபவர்களுக்குக் குறட்டை விடும் பிரச்னை குறைவாக ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. 


சுவாசப் பாதையில் அடைப்பு


சுவாசப் பாதைகள் திறந்து வைக்கப்பட்டிருப்பதன் மூலமும் குறட்டை விடுவதைத் தவிர்க்க முடியும். மூக்கில் சுவாசப் பாதைகள் அடைத்திருந்தால்; காற்று வேகமாக உள்ளே நுழைவதன் மூலம் குறட்டை ஏற்படுகிறது. சூடான எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்வது, மூக்கில் மருந்து விடுவது முதலானவையும், உறங்குவதற்கு முன்பு வெந்நீரில் குளிப்பதும் குறட்டையைத் தடுக்கும். 



அதிகம் தண்ணீர் உட்கொள்ளல்


அதிகமாகத் தண்ணீர் குடிப்பதால், குறட்டை விடுவதைத் தவிர்ப்பது மட்டுமின்றி, மொத்த உடல்நலத்தையும் பாதுகாக்க முடியும். உடலில் நீர்ச் சத்து குறையும் போது, மூக்கில் சுவாசப் பாதை பிசுபிசுப்பாக மாறி, குறட்டையை அதிகரிக்கிறது. எனவே அதிகளவில் தண்ணீர் உட்கொள்வது குறட்டையைத் தவிர்க்கும். 


புகை பிடித்தல் - மது அருந்துதல்


புகை பிடிப்பவர்களின் சுவாசப் பாதையில் சிறியளவில் வீக்கங்கள் ஏற்படுவதால் குறட்டை விடும் வாய்ப்பு அதிகரிக்கிறது. புகை பிடித்தலைத் தவிர்த்தால், சில நாள்களில் அதன் விளைவுகளைக் காண முடியும். மது அருந்துவது சுவாசப் பாதையின் தசைகளை இளகுவதாக மாற்றுவதால் மது அருந்துவோர் அதிகமாகக் குறட்டை விடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, தூங்குவதற்கு முன் மது அருந்துவதைத் தவிர்ப்பதும் குறட்டை விடுவதில் இருந்து விலக்கு அளிக்கிறது.