Tata Motors EV         


கடந்த வாரத்தில் டாடா மோட்டர்ஸ் பங்கு சுமார் 46 சதவீதம் அளவுக்கு உயர்ந்து முடிந்தது. அக்டோபர் 6-ம் தேதி 330 ரூபாயில் இருந்த பங்கு கடந்த வெள்ளிக்கிழமை ( அக் 15) 497 ரூபாயில் வர்த்தகத்தை முடித்தது. வர்த்தகத்தின் இடையில் 530 ரூபாய் வரை கூட இந்த பங்கு உயர்ந்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு கிடைத்த முதலீடுதான் இதற்கு காரணம்.


டாடா மோட்டார்ஸ் இவி என தற்காலிக பெயர் இந்த நிறுவனத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்படும். புதிதாக உருவாக்கப்படும் துணை நிறுவனத்தில் டிபிஜி என்னும் முதலீட்டு நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் (7,500 கோடி ரூபாய்) முதலீடு செய்ய இருக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பாதி தொகையையும் அடுத்த ஆண்டு முடிவில் மீத தொகையையும் டிபிஜி முதலீடு செய்யும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஈடாக 11 சதவீதம் முதல் 15 சதவீத பங்குகள் இந்த நிறுவனத்துக்கு கிடைக்க கூடும். இதன் மூலம் புதிதாக உருவாக்கப்படும் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 9.1 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.




இவி சந்தை


ஒட்டுமொத்த வாகன விற்பனையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை 1 சதவீதம் முதல் 2 சதவீதம் என்னும் அளவிலே இருக்கிறது. ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரையில் மொத்த விற்பனையில் 3 சதவீதத்துக்கு மேல் எலெக்ட்ரிக் வாகனங்கள் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தில் விற்பனையாகும் வாகனத்தில் 5 சதவீதம் அளவுக்கு எலெக்ட்ரிக் வாகனம் இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.


டீசல் மற்றும் பெட்ரோல் கார்களை இயக்குவதற்கு ஆகும் செலவில் ஆறில் ஒரு மடங்கு முதல் எட்டில் ஒரு மடங்கு வரை மட்டுமே செலவாகிறது. மேலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு  மத்திய மற்றும் மாநில அரசுகள் சலுகைகள் வழங்குவதால் பொதுமக்கள் வாங்குவதற்கு தயாராக இருக்கின்றனர்.


ஒட்டுமொத்த இவி சந்தை என்பது 2 சதவீத சந்தைதான். ஆனால் எலெக்ட்ரிக் கார்கள் சந்தையில் 71 சதவீதம் டாடா வசம் இருக்கிறது. இதுவரை 10,000 நெக்சான் இவி கார்கள் விற்கப்பட்டுள்ளன.


தவிர இந்த துறையில் பெரிய போட்டி இதுவரை உருவாகவில்லை. ஐசிஇ வாகன பிரிவில் 48 சதவீத சந்தையை வைத்துள்ள மாருதி இதுவரை எலெக்ட்ரிக் வாகன பிரிவில் களம் இறங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.


டாடா குழுமத்துக்கு நிதி போதுமான அளவுக்கு இருக்கிறது. ஆனால் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனத்திடம் காரணத்துடன் நிதி திரட்டி இருக்கிறது. டிபிஜி நிறுவனம் இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் பல நிறுவனங்களில் முதலீடு செய்ததிருக்கிறது. அதனால் அந்த நிறுவனத்தின் சர்வதேச அனுபவம் கைகொடுக்கும் என்பதால் டிபிஜி முதலீட்டை டாடா மோட்டார்ஸ் பெற்றிருப்பதாக டாடா மோட்டார்ஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.


10 மாடல்கள்


இதுவரை 15000 கோடி  ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 200 கோடி டாலர் அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது. தற்போது இவியில் 2 மாடல்கள் (நெக்சான் மற்றும் டிகோர்)  மட்டுமே இருக்கிறது. மேலும் 10 மாடல்களை கொண்டுவர டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டிருக்கிறது. 2026-ம் ஆண்டில் 13 முதல் 15 எலெக்ட்ரிக் வாகனங்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பேட்டரி சார்ஜிங் கட்டுமானத்தை அமைக்கவும் டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுவருகிறது. டாடா பவர் நிறுவனத்துடன் இணைந்து 25 நகரங்களில் 10000 சார்ஜ் ஏற்றும் மையங்களை அமைக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுவருகிறது.


2030-ம் ஆண்டில் 30 சதவீத எலெக்ட்ரிக் வாகனங்கள் என்னும் இலக்கை மத்திய அரசு நிர்ணயம் செய்திருக்கிறது. அந்த இலக்கை அடைவதற்கான முயற்சியில் டாடா மோட்டார்ஸ் முக்கிய பங்கு வகிக்கும் என அந்த டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்திருக்கிறார்.


சென்னை போர்டு ஆலையை கையகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஒரு வேளை இந்த ஆலை கையகப்படுத்தப்பட்டால் கூட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பிரத்யேக ஆலையாக இருக்காது என்றும் தெரிகிறது. தற்போதைய எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 60 சதவீத பொருட்கள் உள்நாட்டில் இருந்து வருகின்றன. இதனை 2025-ம் ஆண்டுக்குள் 85 சதவீதமாக உயரத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு வருகிறது. அதற்கு ஏற்ப முதலீடுகள் செய்யப்படும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்திருக்கிறது.


இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில் 25000 கோடிக்கு மேல் எலெக்ட்ரிக் துறையில் முதலீடு வந்திருக்கிறது. ஏற்கெனவே பரபரப்பாக இருக்கும் துறையை டாடா மோட்டார்ஸ் மேலும் பரபரப்பாக்கி இருக்கிறது. உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை காரணமாக மக்களின் பார்வையும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது வரத்தொடங்கி இருக்கிறது.