9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதியை தமிழ் நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டதால் வார்டு மறுவரையறை காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.

 

இதனிடையே செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் விடுபட்ட 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதை தொடர்ந்து அந்த உத்தரவை ஏற்று செயல்படுத்தும் வகையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் வெளியிட்டு இருந்தார். ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவர், மாவட்ட கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், பதவிகளுக்கு இரண்டு கட்டமாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆம்  தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. 

 

சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல்களை காட்டிலும் உள்ளாட்சித் தேர்தலின் போது தான் அதிகமான சண்டை சச்சரவுகள் ஏற்படுவதும் விசித்திரமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தல், பிராச்சாரம் போன்றவை நடைபெறுவது வழக்கம். இதனால் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகளை மிகுந்த கவனத்தோடு கொரோனா பரவலுக்கு மத்தியில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உற்று நோக்கி வருகிறது.

 

இரண்டு கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் 06.10.2021 தேதி ஆலங்குளம், கீழப்பாவூர், கடையம், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய ஒன்றியங்களுக்கு முதல் கட்டமாகவும், 09.10.2021 அன்று தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் ஆகிய ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி 4961 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

 

தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலை நிலவரப்படி,

 

14 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 25 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

 

144 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 367 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

 

221 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு 974 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

 

1905 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 3595 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

 

இதில் அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள்,  சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமின்றி புதிதாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நான்கு வேட்பாளர்களும் உள்ளாட்சி தேர்தல் களத்தில் களம் காண உள்ளனர்.