இரவு வேலைகளில் வேலை முடித்து வீட்டுக்கு திரும்புகையில், ஹோட்டல்களில் பரோட்டா செய்யும் பொழுது எழும் அந்த வாசம் நம் மூக்கைத் துளைக்கும். இரண்டு பரோட்டா சாப்பிடலாமா அல்லது பார்சல் வாங்கிக் கொண்டு போகலாமா என்ற எண்ணத் தோன்றும். பரோட்டாவை விரும்பாதவர்களே இருக்க முடியாது என்று கூறும் அளவிற்கு தென்னிந்தியா முழுவதிலும் மைதாவினால் செய்யப்படும் பரோட்டாக்கள் மிகவும் பிரபலம். பரோட்டாக்கள் இந்தியாவின் பிரட் என்று அழைக்கப்படும் அளவிற்கு இந்தியா முழுவதிலும் பரவி இருக்கிறது.
உலகளாவிய அளவில் குறிப்பாக ஐரோப்பிய கண்டத்தில் பிரதான உணவாக மைதா மற்றும் கோதுமையினால் செய்யப்படும் பிரட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை அரிசி பிரதானமானதாக இருந்த போதிலும் கூட சப்பாத்தி,ரொட்டி அல்லது நாண் இங்கு விரும்பி உண்ணப்படும் முக்கியமான உணவு பண்டமாக இருக்கிறது. குறிப்பாக வட இந்தியாவில் சப்பாத்தி ,ரொட்டி அல்லது நாண் இல்லாத நாட்களே இருக்காது என்று சொல்லலாம்.
சப்பாத்தியும் ரொட்டியும் கோதுமை மாவை பயன்படுத்தி செய்யப்படுகிறது. நாண் மற்றும் பரோட்டா என்பது மைதா மாவினால் செய்யப்படும் ஒரு உணவு ஆகும். இதில் வட இந்திய மக்கள் இரவு உணவாக அதிகப்படியாக ரொட்டி அல்லது நாண் சாப்பிடுகிறார்கள். தென்னிந்தியாவில் அதிக இடங்களில் மைதாவினால் தயாரிக்கப்படும் பரோட்டா விரும்பி உண்ணும் உணவு பொருளாக இருக்கிறது.
இதில் சுவையான ரொட்டி அல்லது நாணை செய்வதற்கான வழிகள் என்னவென்று பார்ப்போம்:
பொதுவாக கோதுமையினால் செய்யப்படும் ரொட்டியை காட்டிலும் மைதாவினால் செய்யும் நாணிற்கு இழுபடும் தன்மை அதிகம். இந்த இழுபடும் தன்மையே மெல்லுவதற்கு அதிக உற்சாகத்தை தந்து ஒரு விதமான சுவையை தருகிறது.
இந்த கோதுமை ரொட்டி அல்லது மைதா நாணிணை தயாரிப்பதற்கு ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமான முறையை பின்பற்றுகிறார்கள்.சில இடங்களில் இரவு ரொட்டி அல்லது நாண் தயாரிக்க வேண்டியிருந்தால் காலை 10 மணி அளவில் மாவினை நன்றாக பதமாக பிசைந்து வைத்து கொள்கிறார்கள்.இந்த இடைப்பட்ட நேரத்தில் மாவு சிறிதாக புளித்து இழுபடும் தன்மையும் சுவையும் சேர்ந்து,சரியான பதத்தில் இருக்கும். சில இடங்களில் குறிப்பாக ஹோட்டல் போன்ற இடங்களில் ஈஸ்ட் சேர்க்கப்படுகிறது.இதுவும் சிறிதாக அந்த மாவினை புளிக்க வைத்து சுவையை கூட்டுகிறது.
சில இடங்களில் இவ்வாறு தயாரிக்கப்படும் கோதுமை அல்லது மைதாவில் தயிர் சேர்த்துக் கொள்கிறார்கள்.இது அந்த உணவிற்கு அதிகப்படியான சுவையை சேர்க்கிறது. தயிரை போலவே சில இடங்களில் ரொட்டியின் சுவையை சிறப்பாக வாழைப்பழம் சேர்க்கப்படுகிறது. சுவைக்காக சில இடங்களிலும் ஓட்டல்களிலும் ஆப்ப சோடா மாவு கலக்கப்படுகிறது. (ஆனாலும் இது அனைத்து மக்களுக்குமான சிறந்த தீர்வாக ஒரு பொழுதும் இருக்காது. ஏனெனில் இந்த ஆப்ப சோடா மாவு இந்திய உணவு கட்டுப்பாட்டு அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட பொழுதிலும் கூட கேஸ்டிக்,அல்சர் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கும் வேறு சில ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் இந்த ஆப்ப சோடா மாவு ஒத்துக் கொள்வதில்லை.)
இன்னும் சில இடங்களில் மைதா கொண்டு தயாரிக்கப்படும் நாணில், பூண்டு விழுது சேர்க்கப்படுகிறது.சில இடங்களில் பூண்டு விழுதுடன் சிறு வெங்காயமும் சேர்க்கப்படுகிறது.இதே போலவே குழந்தைகளுக்கு செய்து கொடுக்கும் நாணில் புதினா, மல்லி மற்றும் சேர்க்கக் கூடிய கீரைகளை சிறிதளவு கூழ் போல செய்து நாண் செய்ய பயன்படுத்தும். அந்த மைதாமாவில் கலந்து நாணை தயாரித்துக் கொடுக்கலாம்.இது அவர்களின் சுவைக்கும் பெற்றோர்களின் கவலையான பிள்ளைகள் ஊட்டச்சத்தான உணவுகளை உட்கொள்வதில்லை என்ற வருத்தத்திற்கும் சேர்த்து ஒரே தீர்வாக அமையும்.
உங்கள் மாவு தயாரானதும், மசாலா பேஸ்ட் அல்லது பூண்டு விழுதை தேய்த்து உங்கள் நானுக்கு அதிக சுவை சேர்க்கலாம். நீங்கள் விரும்பினால், மூலிகைகள் மற்றும் நறுக்கிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை கூட சேர்க்கலாம். இது உங்கள் நாணின் சுவையை உயர்த்தும் .
இறுதியாக சமைப்பதற்கான பேனை(கல்லு) அதிக வெப்பத்தில் வைக்க வேண்டும். பின்னர் சிறிது நெய் அல்லது வெண்ணெய் கொண்டு நாணை அதன் மேல் போடவும். நாண் நேரடியாகும் வரை பேனை கீழ் ,மேல் நோக்கி புரட்டவும். அப்போது உங்கள் நாண் உயர ஆரம்பித்து, நன்றாக வருவதை கவனிக்கலாம்.
இவ்வாறு சுவையாக தயாரிக்கப்பட்ட ரொட்டி அல்லது நாணை தொட்டுக்கொண்டு சாப்பிடுவதற்கு தொடுகறியாக சைவத்திலும், அசைவத்திலும் ஏராளமான தொடுகறிகள் உள்ளன.
அசைவத்தை பொருத்தவரை மட்டன் கிரேவி,சிக்கன் கிரேவி மற்றும் இறால் தொக்கு போன்றவை சிறந்த தொடுகறிகளாக இருக்கின்றன. சைவத்தை பொருத்தவரை கெட்டியான துவரம் பருப்பு கிரேவி, பன்னீர் பட்டர் மசாலா,கோபி மஞ்சூரியன் பட்டர் மசாலா, வெஜிடபிள் கிரேவி மசாலா மற்றும் சென்னா மசாலா எனப்படும் வெள்ளை மூக்கடலை மற்றும் கருப்பு மூக்கடலை மசாலா என இந்த ரொட்டியையும் நாணையும் சாப்பிடுவதற்கு சைவத்திலும் அசைவத்திலும் நிறைய தொடுகறிகள் உள்ளன.நீங்கள் சைவமா அல்லது அசைவமா என்பதைப் பொறுத்து உங்களுக்கு பிடித்த ஆக சிறந்த ஒரு தொடுகறியை சேர்த்து சாப்பிடும் பொழுது மட்டுமே ஒரு முழுமையான ருசியான ரொட்டி அல்லது நாணை சாப்பிட்ட உணர்வு நிறைவு பெறும்.
(குறிப்பு:பொதுவாக அசைவ உணவு, கீரைகள் மற்றும் தயிர் சார்ந்த பொருட்களை இரவில் உண்ணுவதை தவிர்க்கவும்.)