சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றியும், விதிகளை மீறியும் கட்டப்பட்டுள்ள 2 ஆயிரத்து 635 கட்டடங்களின் பணிகளை நிறுத்த மாநகராட்சி குறிப்பாணை வெளியிட்டுள்ளது.


மேலும் விதிமீறல்களை சரிசெய்யத  2 ஆயிரத்து 403 கட்டடங்களை சீல் வைக்கவும் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 39 கட்டடங்களுக்கு மாநகராட்சி சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.


ஜூலை 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி வரை நடத்தப்பட்ட கள ஆய்வின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கழிவுகளை கொட்டியவர்களுக்கு அபராதம்:


பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கும், சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் ரூ.22,22,810 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோடம்பாக்கம் பகுதியில் கட்டுமான கழிவுகளை கொட்டியதற்காக ரூ. 2,02,970 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.