நம்ம ஊரில் உணவு வகைகளின் முதலிடம் எப்போதும் இட்லிக்குத் தான். தென்னிந்திய உணவு வகைகளுள், குறிப்பாக தமிழ்நாட்டில் இட்லி பெரும்பாலானோருக்குப் பிடித்தமான உணவு வகையாக இருக்கிறது. மேலும் நாடு முழுவதும் இட்லியை விரும்பி உண்பவர்களும் இருக்கின்றனர். 


உடலுக்கு ஆரோக்கியமான உணவான இட்லியில் கார்போஹைட்ரேட், புரதம், நார்ச் சத்து ஆகியவை மிகுதியாகக் கிடைக்கின்றன. நம் வீடுகளில் சில சமயம் அதிக எண்ணிக்கையில் இட்லி செய்து, அவை மீந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. சமையல் செய்பவர்கள் அனைவரும் மீதமான இட்லியை வைத்து பல உணவு வகைகளைச் செய்கின்றனர். இட்லி போரடித்தால், இட்லி உப்புமா சாப்பிடலாம் என்றால், இட்லி உப்புமாவும் போரடித்தால் புதிதாக வெவ்வேறு பாணியிலான உணவு வகைகளை அதனை வைத்து செய்ய முடியும். 


மீதமாகும் இட்லியைப் பயன்படுத்தி, அதனை வறுத்து, காரம் சேர்த்து புதிய உணவு வகைகளை செய்யலாம். இது வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பிடித்தமான உணவு வகையாக இருக்கும். இதற்கான செய்முறையை இங்கு குறிப்பிட்டுள்ளோம். 



வறுத்த தட்கா ஃப்ரை இட்லி செய்வது எப்படி?


1. முதலில் சூடான பாத்திரத்தில் வெண்ணெயைச் சேர்க்கவும்.


2. அதனுடன் ஒரு டீஸ்பூன் கடுகு, கறிவேப்பிலை இலைகள், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும். 


3. இப்போது அதனுடன் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் சீரகத் தூள், அரை டீஸ்பூன் மல்லித் தூள், அரை டீஸ்பூன் மிளகாய் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். 


4. இதுவரை சேர்த்த உணவுப் பொருள்களை நன்கு கிளறிய பிறகு, இட்லியைத் துண்டு துண்டாக இதனோடு சேர்க்கவும். 



5. நாம் செய்து வைத்துள்ள மசாலா, இட்லியின் மீது நன்கு படிகிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். 


6. இட்லியில் ஏற்கனவே உப்பு சேர்க்கப்பட்டிருந்தால், அதற்கேற்ப தற்போது உப்பு கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளவும். 


7. இப்போது கொஞ்சமாக மிளகுத் தூளைச் சேர்த்து, நன்கு கிளற வேண்டும். 


8. அடுத்ததாக கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து, அதன் மேல் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து, இறக்கி வைக்கவும். 


தற்போது நாம் செய்துள்ள வறுத்த தட்கா இட்லியைத் தக்காளி சட்னி, தக்காளி சாஸ், தேங்காய் சட்னி முதலான சட்னி வகைகளுடன் சேர்த்து உண்ணலாம்