உபர், ஒலா போன்ற கால் டாக்ஸி பயணத்தின் போது சமீப காலங்களாக பெண்களுக்கு அங்காங்கே ஒரு சில இடங்களில் பாலியல் தொல்லைகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது உபர் பயணத்தின்போது பெண் ஒருவருக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் எப்படி நடந்தது?
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியில் கடந்த 16-ஆம் தேதி 20 வயது மதிக்க தக்க இளம்பெண் ஒருவர் உபர் காரில் பயணம் செய்துள்ளார். அந்த காரை தாவித் மெகோனோன்(30) என்பவர் ஓட்டியுள்ளார். இந்த பயணத்தின்போது உபர் காரின் ஓட்டுநர் அவருக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக 18-ஆம் தேதி அந்தப் பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
அதில், ”கடந்த 16-ஆம் தேதி இரவு நான் ஒரு உபர் காரில் பயணம் செய்தேன். நான் அந்த காரில் ஏறிய உடன் தூங்கிவிட்டேன். பின்பு சில நேரத்திற்கு பிறகு என்னை யாரோ தொடுவதுபோல் உணர்வு ஏற்பட்டது. அப்போது நான் கண் விழித்து பார்த்தபோது என்னுடைய ஆடைகள் அனைத்தும் கலைந்து இருந்தன. அத்துடன் காரின் ஓட்டுநர் என்னை பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார். நான் அவரை தடுக்க முயன்றேன். ஆனால் என்னை அவர் தட்டிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்தார். அதன்பின்னர் என்னுடைய இறங்கும் இடத்தில் என்னை தள்ளிவிட்டு ஆடைகளையும் வெளியே தூக்கி எறிந்துவிட்டு சென்றார்” எனக் கூறியுள்ளார்.
அந்தப் பெண் அளித்த புகார் மற்றும் உபர் பதிவு விவரங்களை வைத்து காவல்துறையினர் தாவித் மெகோனோனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் வேறு யாரையும் இதுபோன்று செய்துள்ளாரா என்பதை அரிய காவல்துறையினர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் இந்த நபரின் படத்தை சுட்டிக்காட்டி இவரால் வேறு யாரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருந்தால் இந்த தொலைபேசி எண்ணிற்கு அழைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.
இந்த தொலைபேசி எண்ணிற்கு வேறு யாரும் அழைத்தால் அந்த சம்பவம் தொடர்பாகவும் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உபர் பயணத்தின்போது பெண் ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: ’ஏலியன்கள் வருவார்கள்...’ 2022 ல் இது தான் நடக்கும்... பாபா வங்காவின் அதிர வைக்கும் கணிப்பு!