பட்டுப்புடவை பெண்களைத் தொட்டுத் தொடரும் பாரம்பரியம் தான். நவநாகரீக மங்கைகள் கூட சாஃப்ட் சில்க் என்று பட்டின் மீது ஒரு சாஃப்ட் கார்னர் வைத்துள்ளனர்.


ஆனால், பட்டுப்புடவை பராமரிப்பு காரணமாகவே அதனை வாங்க யோசிக்கும் பெண்களும் அதிகமாக இருக்கின்றனர். பட்டுப்புடவை பராமரிப்புக்கு எளிமையான வழிமுறைகளைக் கூறுகிறார் நாட்டுப்புற பாடல் பிரபலம் அனிதா குப்புசாமி.


பட்டுப்புடவையை பராமரிப்பது எப்படி?


பட்டுப்புடவை வாங்கியவுடனேயே கடைக்காரரிடம் கொடுத்து அதில் அழகாக குஞ்சம் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அது பட்டுத்துணி ஓரம் கிழியாமல் காப்பதுடன். பட்டுச்சேலைக்கு அழகைக் கூட்டித்தரும்.
அதேபோல், பட்டுச்சேலையில், ஃபால்ஸ் கட்டாயமாக தைத்துக் கொள்ளுங்கள். ஃபால்ஸ் தைப்பதால் சேலையின் கீழே அழுக்கு ஒட்டாமல் இருக்கும். ஏதேனும் கறை ஒட்டினாலும் கூட அதை சோப்புத் தண்ணீரில் துணியை முக்கிப் பிழிந்து துடைத்து சுத்தம் செய்து கொள்ளலாம். ஃபால்ஸ் தைப்பதால் புடவை மடிப்பு மிகவும் அழகாக வரும்.
அதேபோல் பட்டுச்சேலைக்கான ப்ளவுஸ் தைக்கும் போது, சேலையில் இருந்து ரன்னிங் மெட்டீரியலைப் பிரித்து எடுத்துக்கொண்டு அதிலேயே தைக்கவும். ரன்னிங் ப்ளவுஸ் மெட்டீரியலுக்கான லைனிங் துணியை 2 பை 2 ரகத்தில் வாங்கிக் கொள்ளவும்.


நீங்கள் பட்டுப்புடவை அணிந்து சென்று வந்தால் உடனே அதனை மடித்து வைக்கக் கூடாது. சேலைய நிழலில் உணர்த்த வேண்டும். லேசான வெயில் படும் இடத்தில் போட நினைத்தால் சேலையை உள்புறமாகத் திருப்பி, காய வைக்கவும். அப்படிச் செய்தால் ஜரிகையின் பளபளப்பு குறையாது.
ஒருவேளை, சேலைய நான்கைந்து முறை கட்டிவிட்டேன் இனி இதனை துவைத்தே ஆக வேண்டும் என்று நினைக்கும் பட்சத்தில் முதல் வாஷ் கண்டிப்பாக ட்ரை க்ளீனிங்குக்கு கொடுங்கள். அதுவும் தேர்ந்த ட்ரை க்ளீனர்ஸிடம் போட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.


வீட்டிலேயே துவைப்பது எப்படி?


எல்லா முறையும் கடையில் வாஷிங்குக்குப் போட்டு செலவு செய்ய முடியாது என்று நினைத்தால் வீட்டிலேயே நீங்கள் துவைத்துக் கொள்ளவும் வழி இருக்கிறது.


அதற்கு கடையில் நயமான பூந்திக்கொட்டை வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு கை பூந்திக்கொட்டை போட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில், விதை தோலை நீக்கி அதனை வடிகட்டி இன்னொரு பக்கெட்டில் எடுத்துக் கொள்ளவும். அந்தத் தண்ணீரில் பட்டுச் சேலையை 5 நிமிடங்கள் மட்டுமே ஊற வைத்து பின்னர் எடுத்துக் கொடியில் நீளவாக்கில் விரித்து கிளிப் போட்டு காய வைக்கவும். நிழலில் காயவைக்கவும்.


இரண்டு பக்கமும் வேறு நிறத்தில் பார்டர் இருக்கும் புடவை என்றால் அதிலிருந்து சாயம் இறங்குமோ என்ற ஐயம் ஏற்படலாம். இரண்டு புறமும் பார்டரை நூல் வைத்துக் கட்டிக் கொள்ளுங்கள். நடுப்புறத்தை மட்டும் ஒரு நாள் பூந்திக்கொட்டை தண்ணீர் முக்கி துவைத்துக் காயவைத்துக் கொள்ளுங்கள். இன்னொரு நாள் இரண்டுபுற பார்டரையும் நனைத்து துவைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலாம் சாயம் ஒட்டுவதைத் தவிர்க்கலாம்.


பட்டுப்புடவையை இஸ்திரி செய்யும் போதும் அதிக சூடு நேரடியாக சேலையின் மீது படாத வண்ணம் அதன் மீது தாளை விரித்து அயர்ன் செய்து ஒரு காட்டன் துணிக்குள் ஜரிகை உள்புறமாக வரும்படி மடித்துவைத்துப் பாதுகாக்கவும். ஜரிகையின் மீது சென்ட் போன்ற வகையறாவை தெளிக்காமல் இருப்பதும் நல்லது.