இன்று ஹாலோபிளாக், கான்கிரீட் கல், ஏஏசி கல், போன்ற பல தரப்பட்ட கற்கள் வந்துவிட்டாலும், நம்மூரில் வீடுகட்டுபவர்கள் அதிகம் விரும்புவது செங்கல்லை தான். அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் நமது பழக்கவழக்கம். நம்மூரில் நாம் பார்த்த வீடுகள் அனைத்தும் செங்கல்லில் கட்டப்பட்டவை. அவற்றில் காலம், தரம் ஆகியவற்றை நாம் கண்கூடாக பார்த்து இருக்கிறோம். அதனால் அவற்றை பயன்படுத்துவதில் சந்தேகங்கள் ஏதும் இல்லாமல் மக்கள் தெளிவுடம் உள்ளனர். ஆனால் தற்போது புதிதாக வந்துள்ள கற்கள் எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்று மக்களுக்கு ஆதாரப்பூர்வமாகத் தெரியாது. அதனால் செங்கல்லையே தேர்வு செய்யும் மக்கள், எப்படி நல்ல செங்கல்லை கண்டுபிடிப்பது? தரமான செங்கல் எது? செங்கல் கட்டுமானத்தில் செய்ய வேண்டியவை என்ன? செய்ய கூடாதவை என்ன?



தரமான செங்கல்லை கண்டுபிடிக்கும் வழிகள்:



  • செங்கல்லின் நிறம் பார்த்தாலே தெரியும், நல்ல சிவப்பாக இருக்கிறது என்றால், அந்த செங்கல் நன்றாக வெந்திருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்.

  • ஒரே செங்கல்லின் இரு வேறு பக்கங்களில் இரு வேறு நிறங்களாக இருந்தால் சமமாக வேகவில்லை என்று அர்த்தம், அது நல்ல செங்கல் இல்லை.

  • செங்கல்லை நம் விரல் நகங்கள் கொண்டு தட்டி பார்க்க வேண்டும், அதி இருந்து மெட்டலை தட்டுவது போன்ற சத்தம் வர வேண்டும். அப்படி வந்தால் அது நல்ல செங்கல்.

  • செங்கல்லை நம் இடுப்பளவு உயரத்தில் இருந்து தரையில் போட வேண்டும். அப்படி செய்யும்போது உடையாமல் இருந்தால், அது நல்ல செங்கல்.

  • செங்கல் தண்ணீரில் ஊறவைக்கப்பட்டால், அதன் எடை 20 சதவிகிதம் வரை மட்டுமே அதிகரிக்க வேண்டும், அதற்கு மேல் அதிகரித்தால், அது நல்ல செங்கல் இல்லை, உள்ளே சிறு சிறுதுளைகள் நிறைய இருக்கிறதென்று அர்த்தம்.

  • மற்றொரு வழி, நாம் செங்கல்லை வாங்கும்போதே தெரியும். செங்கல்லை ஏற்றும்போதும், இறக்கும்போது, அதனை தூக்கி தூக்கி வீசிதான் கொண்டு வருவார்கள். அப்போது உடையாமல் இருக்கும் செங்கல் எல்லாம் நல்ல செங்கல்தான். 



செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்:


செங்கல்லில் வீடு கட்டுவதனை அதிகமாக மக்கள் விரும்புவதற்கு காரணம், அதன் நம்பகத்தன்மை. பல வருடங்கள் தாங்கும் என்பதை நாமே கண்கூடாக பார்த்து வருகிறோம். புதிய செங்கல்கள் எத்தனை வருடம் வீணாகாமல் இருக்கும் என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. மற்றொன்று எல்லா மேஸ்திரிகளும், கொத்தனார்களுமே பழகியிருப்பது செங்கல்லுக்குதான். அதனால் ஒரு இன்ஜினியர் இல்லாமல், மேஸ்திரி, கொத்தனார்களை வைத்தே வீட்டை கட்டி முடிக்க முடியும். இதையெல்லாம் தாண்டி, நம்மூரில் எளிதில் கிடைக்கும் பொருள் என்பதும், விலை மலிவாக கிடைக்கும் பொருள் என்பதும் ஒரு முக்கிய காரணம்.


செங்கல்லில் வீடு கட்டும்போது கண்டிப்பாக செங்கல்லை நனைத்துவிட்டுதான் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தும்போது, செங்கல்களில் இடைவெளிகளில் நன்றாக சிமெண்ட் வைத்து அடைத்து கட்ட வேண்டும். அதனை பிறகு பூச்சு வேலை செய்யும்போது சரி ஆகி விடும் என்று விடுவது சரி அல்ல. அப்படி செய்தால், இடையில் இடைவெளி ஏற்பட்டு பிற்காலத்தில் உள்ளேயோ, வெளியேயோ விரிசல் ஏற்படலாம், தண்ணீர் எளிதில் செங்கல்லை நனைக்க துவங்கும். செங்கல் எளிதில் தண்ணீரை பற்றக்கூடியது. ஓரு செங்கல் நனைந்தால் வரிசையாக அனைத்து செங்கற்களும் நனைய தொடங்கும். புதிதாக வந்துள்ள கற்களை பொறுத்தவரையில் இந்த பிரச்சனை இல்லை, அவை பெரிதாகவும் சமமாகவும் இருப்பதால், இடைவெளிக்கு வாய்ப்பு இல்லை. மேலும் தண்ணீர் உறிஞ்சும் தன்மை குறைவு.


மேலும் செங்கல் வீடு கட்டும்போது அதற்கு ஒரு நாளுக்கு 3 முறை தண்ணீர் ஊற்றி நினைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு குறைந்தது 7 நாட்கள் முதல், 28 நாட்கள் வரை நனைக்கலாம். ஆனால் பலர் நிறைய தண்ணீர் ஊற்றினால் இன்னும் வலுவாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். அது சரி அல்ல, அளவுகி அதிகமாக தண்ணீர் ஊற்றக்கூடாது. 


செங்கற்களில் கட்டும்போது அதற்கு நாட்கள் அதிகம் ஆகும், அதனால் ஆள் கூலி அதிகமாகும். புதிய கற்கள் பெரிதாக இருப்பதால் விரைவில் கட்டி முடிக்க முடியும், கொத்தனார் கூலி குறையும். பூச்சு வேலைக்கு சிமெண்ட் அளவு குறைவாகவே தேவைப்படும். எல்லாவற்றிலும் நல்லது கெட்டது உண்டு, உங்கள் தேவைகளுக்கு எது பொருந்துகிறதோ அதனை வாங்கி பயன்படுத்தவும்.