நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திருநெல்வேலி மாநகராட்சியின் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வேட்பாளர்கள் 50 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுகவிற்கு 4 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்களே மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கு வரக்கூடும் என்ற போதிலும் போட்டி வேட்பாளர்கள் கவுன்சிலர்களை கடத்தி விடக்கூடாது என்ற நோக்கில் வெற்றிச் சான்றிதழ் வாங்கிய கையோடு திமுக கவுன்சிலர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் என40 க்கும் மேற்பட்டவர்களை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் நோக்கில் கன்னியாகுமரிக்கு அழைத்துச் சென்றார்.
வரும் மார்ச் மாதம் 2 ஆம் தேதி மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும் நிலையில் 4 ஆம் தேதி மறைமுக தேர்தல் மூலம் மேயர் மற்றும் துணை மேயர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தலைமை அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் நோக்கத்திலும் கட்சிக்குள்ளேயே போட்டி வேட்பாளர்கள் வெற்றிபெற கூடாது என்ற நோக்கிலும் கேரள மாநிலத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஏற்கனவே கேரளா செல்வதற்கான பயணம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதால் அதற்கான முன்னேற்பாடுகளுடனே தங்கள் உடைமைகளையும் எடுத்துக் கொண்டே வந்திருந்தனர். வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுற்றுலா வாகனங்கள் மூலம் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர். நெல்லையை பொறுத்தவரைக்கும் இந்த முறை மேயருக்கான பாலினம் பொது என்பதாலும் ஜாதி ரீதியிலான அடிப்படையில் மாநகர மேயர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பேசப்படுவதால் இந்த வெளியூர் பயணம் அமைந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தரப்பில் பேசுகின்றனர்.