விஜய் டிவியின் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி, அனைத்து ஜெனரேஷன் மக்களின் ஏகோபித்த ஆதரவுகளையும் பெற்று கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமான தொலைக்காட்சி நிகழ்ச்சியாக விளங்கி வருகிறது.
ஆனால் இந்நிகழ்ச்சி நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் சமீபத்தில் கூறிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பலராலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
குக் வித் கோமாளியால் கர்ப்பம்!
திருமணம் ஆகி சில ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் IVF சிகிச்சை மேற்கொண்ட நபர் ஒருவர் மன அழுத்தத்தைப் போக்க குக் வித் கோமாளி நிகழ்ச்சியைப் பார்த்ததாகவும், தற்போது அவர் கருவுற்று இருப்பதாகவும், இதே போல் வேறு சிலரும் நிகழ்ச்சியைப் பார்த்து தங்கள் மன அழுத்தம் நீங்கி கருவுற்று இருப்பதாக தனக்கு மெசேஜ் செய்துள்ளதாகவும் வெங்கடேஷ் பட் மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
வெங்கடேஷ் பட்டின் கருத்துக்கு ஒரு பக்கம் ஆதரவாகவும், மறுபக்கம் கடுமையாக கேலி செய்தும் நெட்டிசன்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
மன அழுத்தம் கருவுறுதலை பாதிக்குமா?
மன அழுத்தத்தால் பெண்கள் கருவுறுவதில் உண்மையில் தாமதம் ஏற்படுகிறதா, மன அழுத்தம் கருவுறும் திறனை பாதிக்குமா என்பன குறித்து மருத்துவ உலகினர் சொல்வது என்ன?
பாலுறவு கொள்வதிலேயே ஆண் பெண் இருவரின் ஆரோக்கியமான மனநிலை பெரும் பங்காற்றுகிறது, மன அழுத்தம் மிகுந்த ஒருவரால் ஆரோக்கியமான பாலுறவில் ஈடுபட முடியாது என்கின்றனர் மருத்துவர்கள்.
இந்நிலையில், எண்டோகிரைன் சொசைட்டியின் நாளிதழான எண்டோகிரைனாலஜி (Endocrinology) இதழில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, கருப்பை குறைவு (Ovarian Reserve), கருமுட்டைகள் எண்ணிக்கை குறைவு போன்ற விளைவுகளை மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலிகளிடம் ஆராய்ச்சி
மேலும் இதன்படி, பெண் எலிகளின் மத்தியில் அலறல் ஒலி மாதிரிகளைக் கொண்டு விஞ்ஞானிகள் மூன்று வாரங்கள் ஆராச்சிகளை மேற்கொண்டுள்ளனர். அதில், இனச்சேர்க்கைக்குப் பிறகான கருவுறும் காலத்தில் எலிகளின் ஹார்மோன்களில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் கருமுட்டைகளின் தரம், எண்ணிக்கை, கருப்பை இருப்பு (Ovarian Reserve) ஆகியவற்றில் அது தாக்கத்தை ஏற்படுத்தியதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில், கருமுட்டைகளின் எண்ணிக்கை குறைதல் கருப்பை இருப்பின் நிலை ஆகியவை மன அழுத்தத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும், நீண்ட நாள் மன அழுத்தம், கருப்பை இருப்பு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு குறித்து தாங்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருவதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
குவியும் ஆதரவுக் கருத்துகள்
இந்நிலையில், முதலில் பெருமளவு கேலி செய்யப்பட்ட வெங்கடேஷ் பட்டின் இந்தக் கருத்துக்கு தற்போது ஆதரவுப் பதிவுகள் குவிந்து வருகின்றன. சமீபத்தில் குழந்தைப் பெற்ற நபர்கள் சிலர், தங்கள் ப்ரெக்னென்சி காலத்தை குக் வித் கோமாளி நிகழ்ச்சியைப் பார்த்து மன அழுத்தமின்றி கடந்ததாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.