அதிர வைத்த துப்பாக்கிச்சூடு


அமெரிக்காவின் டெக்சஸ் மாகாணத்தில் உள்ள உவால்டே பகுதில் உள்ள ராப் தொடக்கப் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக 18 வயது நிரம்பிய மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய சால்வடார் ராமோஸ் என்கிற இளைஞரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகளிலும் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அந்த இளைஞர் எப்படி பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தார் , அவர் ஏன் அங்கு 21 பேரை சுட்டுக்கொன்றார் , அவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்து என்பது குறித்த பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.


இந்த நிலையில் சால்வடார் ராமோஸ்  பின்னணி குறித்து விசாரணை செய்தால் அது சினிமா பாணியில் இருக்கிறது.சால்வடார்  3 வயது இருக்கும் பொழுது அம்மா அப்பா விவாகரத்து பெற்றதாக தெரிகிறது. தாயின் அரவணைப்பில் வளர்ந்த இவருக்கு அம்மாவின் போதை பழக்கம் போதிய அன்பை கொடுக்கவில்லை போலும் அதனால் தனது பாட்டி வீட்டிலெயே வளர்ந்திருக்கிறார். அமெரிக்க பள்ளிகளில் புல்லிங் என அழைக்கப்படும் கேலி , கிண்டலுக்கு ஆளாகியிருக்கிறார் சால்வடார் ராமோஸ்.


இவர் கொலை நடப்பதற்கு திட்டமிடுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் , தான் ஒரு துப்பாக்கி வாங்கியிருப்பது குறித்து மறைமுகமாக ஷேர் செய்ததாக அவரது நண்பர்கள் வட்டம் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு துப்பாக்கி வாங்க அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.




மறுமுகம்..


சால்வடார் ராமோஸுடன் உலக புகழ்பெற்ற டிண்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலியில் யாருடன் எல்லாம் உரையாடியிருக்கிறாரோ அவர்களிடம் போலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போதுதான் சால்வடாரின் வேறு ஒரு முகமும் தெரிய வந்துள்ளது. ஆரம்பத்தில் பெண்களிடம் ஆசை வார்த்தையில் பேசும் சால்வடார் ராமோஸ், பின்னர் அந்த பெண்களிடம் பாலியல் ரீதியிலான வக்கிர பேச்சுக்களை பகிர்வாராம். அதோடு பாலியல் சார்ந்த கொடூர புகைப்படங்கள் , கிண்டல் செய்யும் வீடியோக்களை பகிர்ந்திருக்கிறார். அவரோடு பேச மறுக்கும் இளம் பெண்கள் , சிறுமிகள் என அனைவரிடமும் என்னிடம் பேசாவிட்டால் நான் உங்களை பாலியல் வன்கொடுமை செய்து , கொலை செய்து விடுவேன் என மிரட்டியிட்ருக்கிறார்.  


மேலும் அதிகாரிகள் கைப்பற்றிய ஆன்லைன் வீடியோ பதிவு ஒன்றில் சால்வடார் “"இந்த உலகில் உள்ள அனைவரும் பாலியல் வன்கொடுமைக்கு தகுதியானவர்கள்" என கூறியது தெரிய வந்துள்ளது. இது போல ஒன்றல்ல இரண்டல்ல பல பெண்களிடம் பேசியிருக்கிறார்.




சால்வடார் இளம் வயதிலேயே நிறைய கொடுமைகளை அனுபவித்திருக்கலாம் , அவருக்கென சில ஏக்கங்கள் இருந்திருக்கலாம் அவை எல்லாம் இப்படி கொடூர வக்கிர சிந்தையுடைய இளைஞராக அவரை மாற்றியிருக்கலாம் என்கின்றனர் அதிகாரிகள். மேலும் ஏன் அவர் அந்த பள்ளியை குறி வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பது குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.