நம் உடலைப் பார்த்துக்கொள்ள நமது எடையை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். உடல் எடையைக் குறைப்பது ஒரே இரவில் நிகழக் கூடிய செயல் அல்ல. அது ஒரு பயணம். நம் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை அகற்ற ஆரோக்கியமாகச் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, நன்றாக ஓய்வெடுப்பது போன்ற முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்கிறோம். எவ்வளவுதான் முயற்சித்தாலும் விரைவாக உடல் எடையைக் குறைப்பது என்பது இயலாத காரியம், உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி செய்வதுடன் கூடுதலாக வீட்டிலேயே கிடைக்கும் உணவுகளைக் கொண்டு கொழுப்பைக் குறைக்க முயற்சிக்கலாம். 


அதிர்ஷ்டவசமாக, நமது கிச்சனிலேயே கிடைக்கும் லவங்கப்பட்டையும் தேனும் நமது இந்த எடை இழப்பு பயணத்துக்குப் பெரிதும் உதவுகின்றன. தொப்பையை குறைப்பதில் குறிப்பாக பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இந்த எளிய வீட்டு வைத்தியத்தை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது அது கொழுப்பை வேகமாகக் கரைக்க உதவுகிறது. 


தேன் மற்றும் இலவங்கப்பட்டை தொப்பை கொழுப்பை எவ்வாறு குறைக்கிறது? 


உடல் எடையை குறைக்கவும், தொப்பையை குறைக்கவும் தேன் மிகவும் முக்கியமான பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆய்வுகளின்படி பசியைக் கட்டுப்படுத்த தேன் உதவுகிறது. கூடுதலாக, இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை எடை குறைக்க உதவுகிறது. தண்ணீருடன் தேன் கலந்து சாப்பிடுவது பழமையான எடை இழப்பு முறைகளில் ஒன்றாகும், இதனால் அது தொப்பை கொழுப்பைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.


தொப்பை கொழுப்பை குறைக்க தேன் மற்றும் இலவங்கப்பட்டை கலந்து உட்கொள்வது எப்படி?


தேன் மற்றும் இலவங்கப்பட்டை கஷாயத்தை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். 
அதற்கு முதலில் ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் ஒரு பத்தை இலவங்கப்பட்டை சேர்க்கவும். அல்லது அதற்கு மாற்றாக,அரை தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள் சேர்க்கலாம்.
நன்றாக கலந்து கொதிக்க விடவும். அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
இப்போது அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து மீண்டும் கலக்கவும்.
தொப்பைக் கொழுப்பைக் குறைக்கவும் இந்த கஷாயத்தை இன்னமும் ஆரோக்கியமானதாக மாற்றவும் இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து பிழிந்து உட்கொள்ளலாம். நாம் பசியாக உணரும் போதெல்லாம், அல்லது உடற்பயிற்சிக்கு முன் அல்லது படுக்கைக்குச் செல்வதற்கு முன் இந்த வெதுவெதுப்பான கஷாய நீரை உட்கொள்வது உடல் கொழுப்பை குறைக்க உதவும்.


மேலும், தேன், இலவங்கப் பட்டை - இரண்டிலும் நோயைக் குணப்படுத்தும் பல்வேறு நற்குணங்கள் நிரம்பியுள்ளன. தேன் உண்பதன் மூலம் உடலில் உள்ள நோய்கள் சரியாவதோடு, அழியும் நிலையில் உள்ள செல்கள் குணமாகின்றன. இலவங்கப் பட்டையும் உடலைச் சரி செய்வதற்கான பல்வேறு ஊட்டச்சத்துகள் நிரம்பியதாக உள்ளது.