இந்திய பாரம்பரியத்தில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று. ஹோலிப்(Holi) பண்டிகை. இது வண்ணங்களுடன் கொண்டாடப்படுகிறது. பண்டிகைகள் பெரும்பாலும் இயற்கையைப் போற்றும் விதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். அப்படி, இயற்கையின் அழகை வியந்து கொண்டாடும் பண்டிகையே ஹோலிப் பண்டிகை.


அதாவது, ஒரு இடத்தின் தட்பவெப்ப நிலை மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு சில பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.  உணவு சங்கிலிக்கு ஆதாரமாக இருக்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்தியாவின் பல மாநிலங்களில் அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது. அதைப்போலவே, இளவேனிற்காலத்தை வரவேற்கும் விழாவாக ஹோலி கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் உள்ள மக்கள் பனிக்காலம் முடிந்து வேனிற்காலத்தை வரவேற்கும் விதமாக வண்ணங்களை தூவி, மகிழ்ச்சியுடன் ஹோலி கொண்டாடுகின்றனர். ஒவ்வோரு வண்ணங்கள் என்றாலும், எல்லா வண்ணங்களின் கலவை நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.




ஹோலிப் பண்டிகை:


வட இந்தியாவில் மாசி மாத பௌர்ணமி தினத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, குஜராத்தில் ஐந்து நாள் விழாவாக ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உறவுகளைக் கொண்டாடும் விழாவாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.


கால மாற்றத்தில், ஹோலிப் பண்டிகை நாட்டில் உள்ள மற்ற இடங்களிலும் கொண்டாடுவது வழக்கமாகிவிட்டது. மகிழ்ச்சியுடன் இருக்க காரணம் தேவையா என்ன? இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் ஹோலிப் பண்டிகை  கோலாகலமாக கொண்டாடப்படும். இந்தாண்டு மார்ச் 17 மற்றும் 18 ஆம் தேதி ஹோலி கொண்டாடப்பட இருக்கிறது.


ஹோலியன்று உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஒன்றுக் கூடி, வண்ணங்களைப் பொடியாகவும், வண்ணங்கள் கலந்த தண்ணீர்,  வண்ணப் பொடிகளுடன்  நீர்  நிரம்பிய பலூன்கள்,  ஆகியவற்றுடன் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.


எல்லோர் மீதும் வண்ணங்களைத் தெளித்து இந்த நாளைக் கொண்டாடுவார்கள். சூரியக் கதிர்களால் ஏற்படும் வானவில்லில் இருக்கும் வண்ணங்களான  ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு வண்ணங்கள் அதிகம் இந்தக் கொண்டாட்டத்தில் பயன்படுகின்றன. இனிப்புகளும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. எதிர்மறையான எண்ணங்களிலிருந்து விடுபட்டு புதிய நம்பிக்கைமிக்க நாட்களை வரவேற்கும் விதமாகவும் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.




புராணக் கதைகள்:


ஹோலிப் பண்டிகை வசந்தத்தை வரவேற்கும் கலாசாரப் பண்டிகை என்பதற்கு பின். புராணக் கதையும் இருக்கிறது.  நாராயணனின் தீவிர பக்தரான பிரகலாதனைக் கொல்ல ஹிரண்யனின் தங்கை ஹோலிகா முயற்சி செய்தாள். அவளை கட்டியணைப்பவர் யாராக இருந்தாலும் தீயில் அழிந்துபோவார்கள் என்ற நிலையில் ஹோலிகா, குழந்தை பிரகலாதனை கட்டியணைத்துப் பொசுக்கத் தீர்மானித்தாள்.  அப்படியிருக்க, நாராயணனின் கிருபை பெற்ற தெய்வக் குழந்தையைத் தழுவியதும் அந்த ஹோலிகாவே எரிந்து போனாள். தீமை எண்ணங்களுடன் வாழ்ந்த ஹோலிகா மறைந்த நாளே மக்களால் ஹோலிப் பண்டிகையாக உருவானது  என்றும் கதைகள் சொல்லப்படுகின்றன. இன்று ஹோலிகாவை எரிக்கும் பழக்கமும் வட மாநிலங்களில் இருக்கிறது. எல்லா தீமைகளும் இன்றுடன் ஒழியட்டும் என்ற நோக்கில் ஹோலி கொண்டாடுவார்கள்.


மற்றொரு கதை, கிருஷ்ண அவதாரத்தில் ஸ்ரீகிருஷ்ணரும், ராதையும் மகிழ்ந்து கொண்டாடிய திருவிழா ஹோலி என்றும் சொல்லப்படுகிறது. ஆயர்பாடி மக்களும், ஆவினங்களும் கொண்டாடிய சந்தோஷத் திருவிழா ஹோலி.


உறவுகள், நண்பர்கள் என எந்த பேதங்களும் இல்லாமால் கொண்டாடும் இந்த ஹோலிப் பண்டிகை மகிழ்ச்சியின் வெளிப்பாடு. எல்லாரும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியுடனும் புது நம்பிக்கையுடனும் வசந்தத்தை வரவேற்போம். எல்லையில்லா ஆனந்தத்தை இந்த இளவேனிற்காலம் நமக்கு வழங்கட்டும். ஹேப்பி ஹோலி!!!


 


"நகுல் என்னை தேச துரோகியாக பார்க்கிறார்" - தேவயானியை திருமணம் செய்தது குறித்து ராஜகுமாரன் ஓபன் டாக்!


watch video: ஜப்பானில் பயங்கரம் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை... அதிர வைக்கும் அதிரும் வீடியோ..!