பிரேம்ஜி அமரன் மிகப்பெரிய இசைக்குடும்பத்தில் பிறந்தவர் என்பது பலரும் அறிந்ததே. தந்தை கங்கை அமரன் மற்றும் அண்ணன் வெங்கட் பிரபுவை போலவே இவருக்கும் திரைப்படங்கள் மீதும் இசையின் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. வெளிநாடுகளுக்கு சென்று முறையாக இசை பயிற்சி பெற்ற பிரேம்ஜி, தொடக்க காலத்தில் தனது சகோதரர் யுவன் சங்கர் ராஜாவிடம் உதவியாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜயின் திருப்பாச்சி படத்தில் வரும் 'கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு' பாடலின் இடையில் வரும் சில ராப் இசை வரிகளை பாடியது பிரேம்ஜி தான்.


இசை பயணம் ஒருபக்கம் இருக்க தனது நடிப்பு பயணத்தை 2003ம் ஆண்டு வெளியான விசில் படத்தின் மூலம் துவங்கினார் பிரேம்ஜி அமரன். அதன் பிறகு 2006ம் ஆண்டு சிம்பு நடிப்பில் உருவான வல்லவன் படத்தில் நயன்தாராவின் நண்பராக களமிறங்கினார். தோழா, சென்னை 28, சரோஜா, கோவா, மங்காத்தா போன்ற பல படங்களில் நடித்து தனது நகைச்சுவைக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். குறிப்பாக இவருடைய 'என்ன கொடுமை சார்' வசனம் மிகவும் பிரபலம். மங்காத்தா படத்தில் நடித்ததற்காக எடிசன் வழங்கும் சிறந்த காமெடியன் விருதை பெற்ற பிரேம்ஜி தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகின்றார்.






அவ்வபோது ஏதேனும் ஒரு சில படங்களில் நாயகனாக நடித்தாலும் அந்த படங்கள் இவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. சமீபத்தில் இவர் நடிப்பில் ஒடிடி தளத்தில் வெளியான 'கற்க கசடற' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'பார்ட்டி' திரைப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்து வருகிறார். 


இந்நிலையில் தற்போது பிரேம்ஜி சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் தெலுங்கில் தயாராகி வரும் படத்தில் நடிக்க பிரேம்ஜியை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பிரேம்ஜி நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது முழுக்க நகைச்சுவை படமாக தயாராவதாகவும் இதில் சிவகார்த்திகேயேனுக்கு தொல்லை கொடுக்கும் எதிர்மறை கதாபாத்திரத்தில் பிரேம்ஜி நடிப்பதாகவும் கூறப்படுகிறது.


இந்த படத்தில் கதாநாயகிகளாக ராஷி கன்னா, உக்ரைன் நடிகை மரியா ஆகியோர் நடிக்கிறார்கள். சத்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். தெலுங்கில் உருவாகும் இந்த படத்தை அனுதீப் இயக்குகிறார். இந்த படத்தை தமிழிலும் வெளியிடுகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண