பீட்ரூட்டில் வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 , வைட்டமின் பி, சோடியம், பொட்டாசியம், சல்வர், க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற பல்வேறு சத்துக்கள் இருப்பதால் காலை உணவில் இதனைச் சேர்த்துக்கொள்ளும்போது, நாள் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கமுடியும்.
காலை உணவை ஸ்கிப் பண்றீங்களா? அப்ப உடல் ஆரோக்கியத்தை மெல்ல மெல்ல நீங்களே பாதிக்கச்செய்ய வழிவகை செய்கிறீர்கள் என்று தான் அர்த்தம். ஆம் ஒருவர் தன்னுடைய காலை உணவை சரியான நேரத்தில் உட்கொள்ளும்போது அவர்களுக்கு நாள் முழுவதும் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதோடு, அனைத்துப் பணிகளையும் செய்வதற்கு உறுதுணையாக இருக்கும். மேலும் நாம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக காலை உணவை ஏதாவது ஒன்றைச் சாப்பிடக்கூடாது. முட்டை, கீரை, பருப்பு போன்ற நல்ல சத்தான உணவுப்பொருள்களைச் சாப்பிடும் போது மட்டும்தான் நம்முடைய உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். மேலும் குளிர்காலத்தில் அதிகம் உற்பத்தியாகும் காய்கறிகயையும் நம்முடைய டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். அதன்படி தற்போது குளிர்காலங்களில் அதிக விளைச்சலைத் தரக்கூடிய பீட்ரூட்டை பயன்படுத்தி விதவிதமாக என்ன மாதிரியான காலை உணவை மேற்கொள்ளலாம் என இங்கே தெரிந்துகொள்வோம்..
பீட்ரூட் கட்லெட்:
காலை நேர உணவிற்கு ஏற்ற ஒரு வகை ரெசிபி தான் பீட்ரூட் கட்லெட். பொதுவாக கட்லெட் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச்சாப்பிடக்கூடிய ஒன்றாகும். எனவே கட்லெட்டில் பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து செய்யும்போது அனைவருக்கும் கூடுதல் ருசியைத் தருவதோடு அதிக ஊட்டச்சத்தையும் நமக்கு அளிக்கிறது.
பீட்ரூட் சில்லா:
கேப்பை ரொட்டி, உருளைக்கிழங்கை வைத்து ஆலு பரோட்டா செய்வது போல பீட்ரூட்டிலும் செய்யக்கூடிய ஒரு ரெசிபி தான் பீட்ரூட் சில்லா( Beetroot chilla). இதனை செய்வதற்கு முதலில், பீட்ரூட்டை நன்றாக அரைத்து எடுத்துக்கொண்டு அதோடு கோதுமை, கடலை ஏதாவது ஒரு மாவினைச்சேர்ந்து நன்றாக கலந்து எடுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அதோடு நம்முடைய சுவைக்கு ஏற்றவாறு உப்பு, மிளகுத்தூள், மசாலா சேர்த்து வழக்கம்போல தோசைக்கல்லில் சுட்டு எடுத்தால் நல்ல சத்தான பீட்ரூட் சில்லா சிறிது நேரத்திலேயே ரெடியாகிவிடும்.
பீட்ரூட் பரோட்டா:
வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2 போன்ற பல்வேறு ஊட்டத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டைப் பயன்படுத்தி பீட்ரூட் பரோட்டா செய்து காலை உணவைச்சாப்பிடலாம். ஆலு பரோட்டாவில் சேர்க்கும் உருளைக்கிழங்கிற்கு பதில் பீட்ரூட்டை நன்றாகத் துருவி எடுத்துக்கொண்டு மாவுடன் சேர்த்து கலந்து சுவையான பீட்ரூட் பரோட்டாவை நம்முடைய காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
பீட்ரூட் சாலட்:
சாலட் என்று சொன்னவுடனேயே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது கீரைகள் மற்றும் காய்கறி சாலட்தான்.. ஆனால் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் சாலட்டை கொஞ்சம் டிரை பண்ணலாம். இந்த சாலட் செய்யும்போது இதனுடன் ஆப்பிள், பார்லி, அருகுலா மற்றும் மசாலா சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த சாலட்டில், இனிப்பும், காரமும் கலந்து இருக்கும்போது சாப்பிடுவதற்கு நல்ல சுவையாக இருக்கும்.
பீட்ரூட்-கேரட் ஜூஸ்
நறுக்கிய பீட்ரூட் மற்றும் கேரட் சேர்த்து நன்றாக மிக்ஸில் அரைத்து ஜூஸ் செய்து பருகலாம். டயட்டில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பீட்ரூட் – கேரட் ஜூஸ் நல்ல பானமாக இருக்கும். மேலும் பீட்ரூட்- கேரட் ஜூஸில், நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால் ஜூரணிக்க அதிக நேரம் எடுக்கும். பசியும் அதிகளவில் இதனால் எடுக்காது என்பதால் உடல் எடையைக்குறைக்க இது சிறந்த டயட்டாக இருக்கும். மேலும் நாம் சாப்பிடக்கூடிய பீட்ரூட்டில் வைட்டமின்ஏ, வைட்டமின் பி1,வைட்டமின் பி2, க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளது. மேலும் இதில் உள்ள மாவுச்சத்துக்கள் கண்ணுக்கும் உடலுக்கும் அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.