மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்றாம் ஆண்டு இந்தியன் ஓபன் நேஷனல் பாரா அதெலடிக் சாம்பியன் ஷிப், 2021' போட்டிகள், பெங்களூருவில் சமீபத்தில்  நடைபெற்றது. நேஷனல் பாரா அதெலடிக் சாம்பியன்ஷிப்பிற்கான போட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான, 100 மீட்டர் , 200 மீட்டர், 400 மீட்டர்  'வீல் சேர் ரேசிங்', குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட பல தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன.




நேஷனல் பாரா அதெலடிக் சாம்பியன்ஷிப்பிற்கான போட்டியில் நாடு முழுவதும் இருந்து  நூற்றுக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தமிழக அணியில் கோவை, 'சகாய் பாரா ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் , தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தமணம்பட்டியைச் சேர்ந்த 30 வயதாகும் மனோஜ் , 100 மீட்டர் , 200 மீட்டர்  400 மீட்டர் பிரிவில்  'வீல் சேர் ரேசிங் போட்டிகளில் பங்கேற்றார். இதில் 100 மீட்டர்  போட்டியில், 16.58 வினாடியிலும்  200 மீட்டர் பிரிவில், 28.37 வினாடியிலும், 400 மீட்டர் போட்டியில், 59.73 வினாடியிலும் இலக்கை கடந்து, போட்டியில் வென்று  மூன்று தங்கப்பதக்கங்களை வென்றார்.




மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற  மனோஜ் கூறுகையில், " மாற்றுத்திறனாளியான நான் சிறு வயதிலிருந்தே கடினமாக உழைத்து ஒரு பெரிய இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கில் தினசரி வாழ்க்கையில் ஓடிக் கொண்டு உள்ளேன். எனக்கு பிடித்த வீல் சேர் போட்டியில்  பங்கு பெற்று சாதனை பெற தினசரி கடுமையாக பயிற்சி பெற்று வந்தேன். தினசரி குமுளி மலைப்பாதையிலும் கரடு முரடான பாதைகளிலும் வீல்சேர் ஓட்டி பயிற்சி மேற்கொண்டேன்.




போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற திறமை இருந்தாலும், என்னால் போட்டிகளில் பங்கேற்க முடியாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தேன். இந்த நிலையில், நான் போட்டியில் பங்கேற்பதற்காக 20,000 ரூபாய் நிதி அளித்து எனக்கு உதவிய தமிழ்நாடு பாரா சங்கத்திற்கு நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். மேலும் எனது முயற்சி மற்றும் சகாய் பாரா ஸ்போர்ட்ஸ் அகாடமி,  'ஜெனிசிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் பயிற்சியாளர்களின் உதவியோடு கடினமாக பயிற்சி மேற்கொண்டது, தேசிய அளவிலான போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற மிக உதவியாக இருந்தது. மேலும் சர்வதேச அளவிலான போட்டிகளில், நாட்டுக்காக தங்கம் வென்று தர வேண்டும் என்ற நோக்கில் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்," என்றார்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 



 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூப்பில் வீடியோக்களை காண